ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

மதுரை ஆதீனத்துடன் ஜான் பாண்டியன் திடீர் சந்திப்பு....


மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை இன்று திடீரென சந்தி்த்து பேசிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்,  ஆதீனத்திற்கு எந்த மிரட்டலும் இல்லை, அப்படி யாராவது மிரட்டினால் அரசியல் காரணமாகத் தான் இருக்கும் என்று கூறினார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரைச் சந்திக்க இன்று பகல் 12.40 மணியளவில் ஆதீன மடத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வந்தார். கட்சியினரை வெளியே நிறுத்திவிட்டு, அவர் மட்டும் ஆதீனம் வீற்றிருக்கும் பள்ளியறைக்குச் சென்றார்.

தன்னை தரிசித்த அவருக்கு ஆசீர்வாதம் கொடுத்து, விபூதி பூசிவிட்டார் மதுரை ஆதீனம். பிறகு சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டனர். முன்னதாக அவர் மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணனையும் சந்தித்தார்.
ஆதீனத்தைப் பார்த்துவிட்டு நெற்றியில் விபூதியுடன் வந்த ஜான் பாண்டியனிடம் இந்த சந்திப்பு பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், "25 ஆண்டுகளாக எனக்கும் சந்நிதானத்துக்கும் பழக்கம் இருக்கிறது. எனது கட்சியை திருச்சியில் தொடங்கி வைத்தது கூட ஆதீனம் தான். அந்த அன்பிற்காக மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்தேன். மற்றபடி எந்த விசேஷமும் இல்லை.

மதுரை மாவட்டம் பாறைபத்தி, சிட்டுலொட்டி கிராமங்களில் வாழும் தேவேந்திரகுல வேளாளர் மக்களிடையே இடப்பிரச்னை காரணமாக மோதல் இருந்து வந்தது. ஒரே மக்களிடையேயான இந்தப் பிரச்னையை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும் என்று எஸ்.பி.யை சந்தித்து வலியுறுத்தினேன். அப்படியே ஆதீனத்தைப் பார்க்க வந்தேன்" என்றார்.
"மதுரை ஆதீனத்தை சில தேவர் சமுதாய அமைப்புகள் மிரட்டுவதாகவும், அதனால் தான் உங்களை அவர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறதே?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த ஜான் பாண்டியன், "எனக்குத் தெரிந்து ஆதீனத்திற்கு எந்த மிரட்டலும் இல்லை. அப்படி யாராவது மிரட்டினால் அரசியல் காரணமாகத் தான் இருக்கும். தேவரும், தேவேந்திரரும் பங்காளிகள் தான். அவர்களுக்குள் பிரச்னை இல்லை. அதற்காக ஆதீனத்தை நான் சந்திக்கவில்லை" என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த ஜான் பாண்டியன், "கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்வோம்" என்றார்.

பின்னர் ஜான் பாண்டியன் காரில்  நெல்லை புறப்பட்டார். இந்தச் சந்திப்பு பற்றி ஆதீனத்தின் கருத்தை அறிய முயன்றோம். வழக்கம் போல பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார் ஆதீனம். ஜான் பாண்டியனின் வருகையையொட்டி ஆதீனத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக