புதன், 11 ஆகஸ்ட், 2010
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்
முத்திராமலிங்க தேவருக்கு விழா என்றும், அரசே சில கோடிகள் செலவு செய்து சிறப்பிக்கின்றனர் என்றும் செய்திகள் வரும் சூழ்நிலையில்....மேலும், திருமா போன்ற வாழும் அம்பேத்கார்கள் கூட மாநாட்டில் சுதந்திர போராட்ட வீரரும், தலித்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் போவதற்கு போராடியவரும் ஆன முத்திராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவினை விடுமுறையாக அறிவிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடும் சூழ்நிலையில் இந்த சாதிவெறினை அம்பலப்படுத்தி தோழர் அசுரன் அவர்களின் தளத்தில் வந்த பதிவை மறுபிரசுரம் செய்வது அவசியம் எனக் கருதி........
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்
**********
இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும்.
*********
தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?
1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.
இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.
"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.
(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)
அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)
சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.
அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.
"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."
கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."
காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).
குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)
காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".
சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.
முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".
அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".
காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.
கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".
இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."
(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)
இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.
"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."
(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)
ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."
மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."
இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."
******************
இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:
1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.
இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.
"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.
அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.
அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.
இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)
இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.
கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக