புதன், 11 ஆகஸ்ட், 2010
பசும்பொன் முத்துராமலிங்கம் என்னும் மக்கள்விரோதியின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள்
பசும்பொன் முத்துராமலிங்கம் என்னும் மக்கள்விரோதியின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன. தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டுவிழாவையொட்டி தபால்தலை வெளியிட்டுக் கவுரவித்திருக்கிறது. நான்குநாட்களுக்கு அப்பகுதியில் அரசுவிடுமுறையும் அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோர்விடுதலைமுன்னணி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கிறது. இதைவிடக் கொடுமை, குண்டர்சட்டத்தில் அதிகம் தலித்துகளே கைதுசெய்யப்படுவதால் குண்டர்சட்டத்தை நீக்கவேண்டும் என்று தலித் அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காத தமிழக அரசு முத்துராமலிங்கத்தின் பிறந்த நாளையொட்டி தென்மாவட்டச் சாதிமோதல்கள் தொடர்பான வழக்குகளை (கொலை, பாலியல்பலாத்காரம் தவிர்த்து) திரும்பப்பெற்றிருக்கிறது.
ஜெயலலிதாவோ தான் இவ்விழாவிற்காக மூன்று கோடி ஒதுக்கியதாகவும் ஆனால் திமுக அரசு அய்ம்பது லட்சம் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார். 'புரட்சிப்புயல்' வைகோவோ தான் தான் கருணாநிதியைவிட நீண்டகாலமாக குருபூசையில் அஞ்சலி செலுத்தியவன் என்று உரிமைகோருகிறார். சரத்குமார், பா.ம.க இவர்களெல்லாம் அஞ்சலி செலுத்துவதால் அரசியல் ரீதியாக ஆதாயமென்ன என்று விளங்கவேயில்லை.
தலித்மக்களின் காவலன் திருமாவளவனோ தலித்துகளை வெட்டிச்சாய்த்த முத்துராமலிங்கம் நூற்றாண்டுவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என்று கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தது அறிந்ததே. சாதிக்கு அப்பாற்பட்டதாகக் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் குருபூசையில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. அதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரான நல்லகண்ணுவைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறது.
இந்தளவிற்குக் கொண்டாடபடவேண்டியளவிற்கு முத்துராமலிங்கத்தின் 'சமூகப் பங்களிப்புதான் என்ன?
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முக்குலத்தோர், குறிப்பாக பிரமலைக்கள்ளர்கள் குற்றப்பரம்பரையினராகக் கருதப்பட்டனர். காவல்நிலையத்தில் தங்கள் இருப்பைப் பதிவுசெய்யவேண்டியவர்களாக அறிவிக்கப்பட்டனர். குற்றப்பரம்பரைச்சட்டம், ரேகைச்சட்டம் ஆகிய சனநாயகமற்ற இத்தகைய கொடூரச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் முத்துராமலிங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே. அத்தகைய போராட்டங்கள் நியாயம் வாய்ந்தவையே.
ஆனால் இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட முக்குலத்துச் சமூகம் தனக்குக் கீழுள்ள சாதிகளை ஒடுக்கும் கொடூரச் சமூகமாக மாறிப்போனதில் முத்துராமலிங்கத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. முத்துராமலிங்கம் உள்ளிட்ட தேவர் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காத பிறசாதியினர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டன. முத்துராமலிங்கம் மேடைகள் தோறும் சாதிப்பெருமிதத்தை முழங்கிவந்தார். அண்ணாதுரை, காமராசர் குறித்த அவரது விமர்சனங்கள் சாதியரீதியாக இழிவுபடுத்துபவையாகவே அமைந்தன.
தலித்துகளின் ஆலய நுழைவுப்போராட்டம் மற்றும் தலித்துகளுக்கு நிலமளித்தது ஆகியவற்றைத் தலித்துகளின் மீதான கரிசனமாகக் கூறுவர். ஆனால் ஆலயநுழைவுப்போராட்டத்தைப் பொறுத்தவரை அவரது 'பங்களிப்பு' என்பது தலித்துகளுக்கு எதிராக அடியாட்களை அனுப்பாதது என்பதாகவே இருந்தது.
அவரது தலித்மக்களின் மீதான அணுகுமுறை என்பதும் மேல்நோக்கிய பார்வையாகவே இருந்தது. பெருந்தன்மையாகச் சில சலுகைகளைத் தலித்துகளுக்கு அளித்தால் போதும் என்பதே அவரது நிலைப்பாடு. தலித்துகள் மறுக்கப்படட் உரிமைகளைத் தாங்களாகக் கையகப்படுத்தும்போது அவர்களுக்கு எதிராக நின்றார். இதற்கான மகத்தான உதாரணம்தான் போராளி இம்மானுவேல் சேகரனின் படுகொலை.
மேலும் முத்துராமலிங்கத்தின் அரசியல் முற்றமுழுக்க வலதுசாரித்தன்மைவாய்ந்ததே. அவரது தேசியம், இந்துமதம் குறித்த நிலைப்பாடுகள் இந்துத்துவச்சக்திகளின் நிலைப்பாடுகள்தான் என்பதுபோக, முத்துராமலிங்கம் அபிராமத்தில் இந்துமகாசபையின் தலைவராகவுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமயங்களில் அவரது வன்முறைச்செயல்பாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராகவும் திரும்பின. 'தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்' என்னும் அவரது கூற்று இன்றைய தமிழக இந்துத்துவச்சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.
பார்வர்ட்பிளாக் என்னும் இடதுசாரிக் கட்சியை ஒரு வலதுசாரிக் கட்சியாக மாற்றிய 'பெருமை' முத்துராமலிங்கத்திற்கே உண்டு. இந்தியாவில் வேறெங்கும் பார்வர்டு பிளாக் இப்படியொரு சாதிக்கட்சியாகச் சுருங்கியதில்லை. தமிழகத்தில் பல்வேறு பார்வர்ட்பிளாக்குகளில் செயல்பட்டுவரும் தேவர்சாதி வெறியர்களுக்கோ 'பார்வர்ட் பிளாக்கின்' பொருளே தெரியாது. இந்தியதலைமைகளுக்கோ அதுகுறித்த அக்கறைகளுமில்லை.
மேலும் காங்கிரசு என்னும் நிலப்பிரபுத்துவக் கட்சிக்கு எதிராக வளர்ந்துவந்த திமுகவை நோக்கிய முத்துராமலிங்கத்தின் விமர்சனங்களைப் படித்தாலே அவர் எவ்வளவு பெரிய பிற்போக்குச்சக்தி என்பதை விளங்கிக்கொள்ள இயலும். திமுகவின் மொழிப்போராட்டம், வரம்பிற்குட்பட்ட பார்ப்பன எதிர்ப்பு, மதச்சார்பின்மை, முஸ்லீம் ஆதரவு, வடவர் எதிர்ப்பு ஆகியவற்றை முத்துராமலிங்கம் இந்தியப் பெருந்தேசியம் மற்றும் இந்துத்துவ நிலைப்பாடுகளின் அடிப்படையிலிருந்து விமர்சனம் என்றபெயரில் கொச்சைப்படுத்தினார். (சமயங்களில் திமுகவின் மீதான ஜீவாவின் விமர்சனங்களைப் பைத்தாலும் முத்துராமலிங்கத்திற்கும் ஜீவாவிற்கும் வித்தியாசங்கள் தெரியாது)
சாதியச்சமூகமாய் விளங்கும் இந்தியச்சமூகத்தில் பல்வேறு சாதிகளும் அமைப்புகளாகத் திரள்வதும் தனக்கான கோரிக்கைகளை முன்வைப்பதும் தவிர்க்கவியலாததே. ஆனால் தமிழகத்தில் வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சாதியமைப்புகள் பெரியார், அம்பேத்கர் போன்றவற்றை குறைந்தபட்ச தந்திரமாக திரு உருக்களாக முன்வைத்தும் சமூகநீதி என்னும் பெயரில் தங்களது பங்குகளை வலியுறுத்தியுமே தங்கள் சாதி அரசியலைக் கட்டமைத்திருக்கின்றன.
ஆனால் முக்குலத்துச் சாதியமைப்புகளோ அத்தகைய நெகிழ்வுத்தன்மை வாய்ந்தவைகளோ அல்லது சமூகநீதியை ஒத்துக்கொள்பவையோ அல்ல. அவை தங்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைகள் எதையும் முன்வைப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்திலோ அவற்றின் கோரிக்கைகளே இட ஒதுக்கீட்டை நீக்கவேண்டும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை அகற்றவேண்டும் என்பவையாகவே அமைந்திருக்கின்றன.
முக்குலத்தோர் ஒரு குறிப்பிடத்தகுந்த அதிகாரச்சக்தியாக உருமாறத்தொடங்கியது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எனலாம். ஒருபுறம் தீண்டாமையை மறைப்பதற்காக நாடார்கள் பார்ப்பனர்களை அழைத்துத் திருமணங்களை நடத்துவது, உள்ளூர்க் கோயில் பணிகளில் பங்கெடுத்துக்கொள்வது என்றெல்லாம் தொடங்கிய செயல்பாடுகள் 80களில் முற்றமுழுக்க அவர்களது சமூக உரிமைகளுக்காகப் போராடிய சுயமரியாதை இயக்கத்திடமிருந்து விலகி இந்துத்துவச் சக்திகளிடம் அடையாளங்காணச்செய்து இந்துமுன்னணிக்கு வழிகோலியது.
தங்களது சமூகத்திற்கான பங்குகளைக் கோரி அரசியல் பயணத்தைத் துவங்கிய மருத்துவர் ராமதாஸ் மற்றும் பழனிபாபா கூட்டணி தமிழகமெங்கும் எம்.ஜி.ஆர் ஆட்சியை விமர்சிக்கத்தொடங்கியது. அந்நேரத்தில் எம்.ஜி.ஆர் இந்துமுன்னணியை மறைமுகமாய் ஆதரித்து ஊக்குவித்தார். மறுபுறத்தில் தனக்கு முதன்முதலாக வெற்றியைத் தேடித்தந்த சாதி என்பதால் (திண்டுக்கல்லில் மாயத்தேவர்) தேவர் சமூகத்தின் மீது கரிசனம் காட்டினார். பொன்.பரமகுரு உள்ளிட்ட பல முக்குலத்தோர் காவல்துறை உள்ளிட்ட துறைகளில் நிரப்பப்பட்டனர். கட்சியிலும் திருநாவுக்கரசு, காளிமுத்து என முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டன.
இந்த நிரப்பல் ஜெயலலிதா வருகைக்குப் பின் ஜெயா - சசி கூட்டணி மூலம் உச்சத்தை எட்டியது. பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள் கிளைவிடத்தொடங்கின. அனைத்து அமைப்புகளும் தங்கள் ஞானகுருவாக முத்துராமலிங்கத்தையே ஏற்றுக்கொன்டன. முத்துராமலிங்கத்தைக் கடவுளாக்கி மொட்டையடித்தல், காதுகுத்துதல், பால்குடமெடுத்தல் ஆகிய கேலிக்கூத்துக்கள் எவ்வித விமர்சனங்களுமின்றி அரங்கேறின.
தமிழ்ச்சூழலில் ஆரம்பித்த காலத்திலிருந்தே தேவர் அரசியல் என்பது முற்றமுழுக்க பெரியாரின் அரசியலுக்கு எதிரானதேயாகும். கமுதி முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கத்தைக் கைதுசெய்யவேண்டுமென்று குரல்கொடுத்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. பெரியார் இறந்தபோது இரங்கல் அறிக்கை வெளியிடாத நிறுவனங்கள் இரண்டு, அவை சங்கரமடம் மற்றும் தமிழகப் பார்வர்ட் பிளாக் கட்சி.
முக்குலத்தோர் அமைப்புகள் வலதுசாரித் தன்மையை அடைந்ததற்கு இன்னொரு உதாரணம் முருகன் ஜீ என்னும் தேவரால் ஆரம்பிக்கப்பட்ட 'பாரதீய பார்வர்ட் பிளாக்'. இந்துவெறியன் பிரவீண் தொகாடியாவைத் தமிழகத்திற்கு அழைத்து சிறுபான்மையினருக்கு எதிராக மதுரையில் திரிசூலம் வினியோகித்தது பாரதீய பார்வர்ட் பிளாக். மேலும் 'ஈ.வெ.ராமசாமியின் மறுபக்கம்' என்னும் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவதூறுகள் நிரம்பிய ஒரு நூலை வெங்கடேசன் என்னும் தலித் ஒருவரைக் கொண்டு எழுதச் செய்து தனது கட்சி வெளியீடாகக் கொணர்ந்தது.
இவ்வாறாக தேவர் அரசியலின் வலதுசாரித்தன்மை மற்றும் நிலப்பிரபுத்துவப் போக்குகளுக்குப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்த்திரையுலகில் இறுதிவரை கடவுளர் வேடமேற்று நடிக்காததால் 'லட்சிய நடிகர்' எனப் புகழப்படுபவர் எஸ்.எஸ்.ராசேந்திரன் என்னும் எஸ்.எஸ்.ஆர். இன்றுவரையிலும் கூட அவர் நாத்திகராயிருக்கலாம். ஆனால் பசும்பொன்னில் முதல் அஞ்சலி அவருடையதே. திராவிட இயக்க அரசியலும் வெறுமனே பகுத்தறிவுவாதமுமே சாதியத்தை நீக்கம் செய்திருக்கிறதா என்பதற்கான பதில்தான் 'லட்சியநடிகர்'.
தமிழ்த்தேசியம், நவீன இலக்கியம், முற்போக்கு என்றெல்லாம் பல்வேறு வேடங்களில் இருந்தபோதும் தேவர் அரசியல் அதைத்தாண்டி பல்லிளிக்கத் தவறுவதேயில்லை. 'தமிழால் ஒன்றுபடுவோம்' என முழங்கி 'தமிழ்ச்சான்றோர் பேரவையை'யும் நந்தன் இதழையும் ஆரம்பித்தவர் ஆனாரூனா என்னும் அருணாச்சலம். நந்தன் நின்றுபோன கடைசி இதழவரையிலும் அம்பேத்கரின் ஒரு சிறு புகைப்படமும் வெளியிடாத நந்தன் தான் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது.
இன்றைய 'நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் சிறுபத்திரிகைகளில்' ஒன்று புதியபார்வை. இவ்விதழ் நடராசனால்(சசிகலா) நடத்தப்படுவது. இவ்வாண்டு முத்துராமலிங்கத்தின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. முத்துராமலிங்கத்தின் மறுபிறவி என்று ஒருவரின் தத்துப்பித்துப் பேட்டியையும் வெளியிட்டிருக்கிறது.
காலச்சுவட்டின் பார்ப்பனீயத்தை விமர்சிக்கும் கனவான்கள் புதியபார்வையின் தேவர் சாதீயத்தைக் கண்டிக்காதது ஏன்? உண்மையிலேயே சமூக அக்கறை உடைய எழுத்தாளர்கள் 'புதியபார்வை' இதழைப் புறக்கணிக்க வேண்டும். பார்ப்பனர்களிடம் காணப்படக்கூடிய அளவுகூட ஜனநாயகச் சக்திகளை முக்குலத்தோரிடம் காணமுடிவதில்லை.
வீரசாவர்க்கருக்குச் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மய்யநீரோட்டத் தேர்தல் கட்சிகளும் கூட முத்துராமலிங்கத்தின் திருவடியைச் சரணடைகின்றன. தேவர் அரசியல் என்பது பாசிசமாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் வளர்ந்துவரும் சூழலில், உண்மையில் நடைமுறையில் பார்ப்பன எதிர்ப்பை விடவும் தேவரிய அரசியலெதிர்ப்பு என்பது கடுமையானதாகவும் வன்முறைகளை முகங்கொள்வதாகவுமிருக்குமெனினும் இதை உடனடியாக எதிர்த்துப் பணியாற்றுவதும் முத்துராமலிஙகத்தின் திருவுருவைக் கட்டவிழ்த்து நாறடிப்பதும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, நக்சல்பாரித் தோழர்களின் முன்னுள்ள அத்தியாவசியக் கடமையாகும்.
Posted
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக