புதன், 11 ஆகஸ்ட், 2010

ஆதிதிராவிடர் vs தேவேந்திரகுல வேளாளர்:

ஆதிதிராவிடர் vs தேவேந்திரகுல வேளாளர்: டெல்டாவில் திசை மாறும் தீண்டாமை அரக்கன்! ஆதிதிராவிடர், தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது தீண்டாமைக் கொடுமை, சாணிப்பால் கொடுமை என ஆதிக்க சாதியினர் நிகழ்த்திய அடக்கு-முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருகிற காலம் இது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் தீண்டாமை அரக்கன் திசை திரும்பித் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறான். ஆதிதிராவிடர் இனத்தவர் மீது அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கிறார்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். குடிசை எரிப்பு, போலீஸார் கண்ணீர் குண்டுவீச்சு என போயிருக்கும் இந்தத் தீண்டாமைக் கொடுமை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தென்காசி கிராமத்தில் நடந்தேறியிருக்கிறது. இதில் மேலும் ஒரு கொடுமை என்னவென்றால்... தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த பிரச்னையில் ‘ஆதிக்க’ சாதியாக விளங்கும் தேவேந்திரகுல வேளாளர்கள் பக்கம் நிற்பதால் தி.மு.க.வில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் இனத்தவர்கள். 50 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியில் ஊறிக் கிடக்கும் நுணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தென்காசி கிராமத்துக்குச் சென்றோம். போலீஸ் பட்டாளம் குவிக்கப்படிருந்தது. தீக்கிரையாக்கப்பட்ட குடிசை வீடுகள், அடித்து நொறுக்கப்பட்ட சைக்கிள்கள், போலீஸாரின் கண்ணீர் புகை குண்டுகளுக்கு காயமடைந்தவர்கள் என கலவர ரேகை படிந்துகிடந்தது கிராமம். அடக்குமுறைக்கு பயந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தி.மு.க.வில் தஞ்சம் புகுந்திருக்கும் பாலு, வீரபுத்திரன், சேகர், விசாலாட்சி, முருகேசன், ஆகியோரை விசாரித்தோம். ‘‘எங்கள் ஊரில் பறையர் (ஆதிதிராவிடர்), பள்ளர் (தேவேந்திரகுல வேளாளர்) என இரு பரிவுகளைச் சேர்ந்த சமூகத்தினர் வசித்து வருகிறோம். பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை விட அதிகமாக உள்ளனர். இதுவரை எங்களுக்குள் எந்தவிதமான பிரச்னையும் வந்ததில்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எங்க சாதி (பறையர்) பெண்ணை, அவங்க (பள்ளர்) பையன் காதல் திருமணம் செய்து கொண்டான். அதன்பிறகுதான் எங்களை குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது, குளிக்க கூடாது, கோயிலுக்குள் நுழையக்கூடாது, நிலங்களை குத்தகைக்கு சாகுபடி செய்யக்கூடாது என பல வகையிலும் அவர்கள் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில்... கடந்த சில நாட்களுக்கு முன்பு அவங்க பெண்ணை எங்க பையன் சைக்கிளில் ஏற்றி வந்துள்ளான். இதனால் எங்கள் பையனை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காரருமான வெள்ளைச்சாமி மற்றும் அவங்க ஆட்கள் சேர்ந்து அடித்து, பையனிடம் இருந்த செல்போன், சைக்கிளை எல்லாம் பிடுங்கி வைத்துக்கொண்டனர். அதைக் கேட்கப்போன எங்க ஆட்களை அடித்து, சாதி பெயரைச் சொல்லியும் திட்டினர். இந்த விவகாரத்தை வைத்து எங்களை எந்தெந்த விதத்தில் பழிவாங்க முடியுமோ அவ்வளவும் செய்தனர். வெள்ளையன் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது நிலக்கிழார் ரங்கநாத முதலியாருக்கும் கோட்டூர் பண்ணைக்கும் சொந்தமான நிலத்தை பறையர் வகுப்பைச் சேர்ந்த 4 பேருக்கும், பள்ளர் வகுப்பைச் சேர்ந்த 6 பேருக்கும் குத்தகைக்கு விட்டிருந்தார். இந்தப் பிரச்னை வந்தவுடன் குத்தகை எடுத்த நிலத்தை மீண்டும் ஒப்படைக்கவேண்டும் என பறையர்களுக்கு மட்டும் உத்தரவு போட்டார். மேலும்... ஊர் குளத்தில் குளிக்கக்கூடாது என பல்வேறு வகையில் எங்களுக்குத் தொந்தரவு கொடுத்தனர் வெள்ளையன் தரப்பினர். எங்கள் பகுதியைச் சேர்ந்த இருவரின் வீட்டையும் கொளுத்திவிட்டனர். மேலும், அவங்க பகுதியில் உள்ள வீடுகளைக் கொளுத்திவிட்டு அந்தப் பழியை எங்கள் மேல் போட்டார்கள். இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வையாபுரி, கிளைச் செயலாளர் குணசேகரன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஞானமோகன் ஆகியோரிடம் முறையிட்டோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. இதையடுத்து, 50 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த நாங்கள் எங்களது உயிருக்கும் உடமைக்கும் பயந்து தி.மு.க.வில் சேர முடிவெடுத்தோம்’’ என்றனர் அவர்கள். பிரச்னை தி.மு.க.விடம் போக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், ஒன்றியச் செயலாளர் அன்பரசு, நகரச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் நேரடியாக தென்காசி கிராமத்துக்கே போய் தி.மு.க. கொடியேற்றி வைத்திருக்கிறார்கள். இதையடுத்து, அங்கு போலீஸார் இரவு பகலாக குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில்தான் மீண்டும் வெடித்திருக்கிறது பிரச்னை. அதையும் நம்மிடம் விவரித்தனர் ஆதிதிராவிடர் தரப்பினர். ‘‘பள்ளர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் இறந்து போய்விட்டார். அவரின் சடலத்தைப் புதைக்க எங்கள் தெரு வழியாகத்தான் போகவேண்டும். அந்த இறுதிச் சடங்கு முடிந்து திரும்பி வரும்போது எங்கள் பெண்களை பற்றியும், சாதியைச் சொல்லியும் வம்புக்கு இழுத்து சண்டை போட கலவரம் வெடித்து. இதனால் போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்’’ என கூறி முடித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வெள்ளையன் தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும், ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 3 பேர் மீதும் வழக்குப் பதிந்தனர். இதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருத்துறைப்பூண்டி பகுதியில் 11 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வையாபுரி-யிடம் இதுபற்றிப் பேசும்போது, ‘‘தென்காசியில் பிரச்னை நடந்தது உண்மைதான். ஆனால், பேசித் தீர்த்துக்கொள்ளாமல் கட்சியை விட்டுப் போய்விட்டார்கள். காசு கொடுத்தா ஓட்டு போடுகிறவர்கள்தான் மாற்றுக் கட்சிக¢கு சென்றுள்ளனர். எங்க சாதி பெண்ணையும், அவங்க பையனையும் சேர்த்து வைக்கத்தான் நாங்க ஊர் கூட்டம் போட்டு பேசினோம். அதற்கு அவங்க கட்டுப்படவில்லை, அவங்ககிட்ட இருந்த நிலத்தை நாங்க கேட்கவில்லை. குளத்தில் Ôகல்Õ அறுப்பதற்காக தண்ணீர் எடுத்தார்கள். அதைத்தான் நாங¢கள் தடுத்தோம்Õ’ என்றார். திருத்துறைப்பூண்டி எம்.எ.ல்.ஏ. உலகநாதன் என்ன சொல்கிறார்? ‘‘தென்காசி கிராமத்துல பறையர் வகுப்பு பையன் பள்ளர் வகுப்பு பொண்ணை காதலிக்கிற விஷயம் உண்மைதான். அது சம்பந்தமாகப் பேசி இருவரையும் சேர்த்து வைப்பது என்று எங்களுடைய மாவட்ட கட்சித் தலைமையில் தீர்மானம் நிறை-வேற்றினோம். ஆனால் அதற்குள் அவர்கள் கட்சி மாறி சென்று ஏதேதோ செய்கிறார்கள். வேறொன்றும் சொல்வதிற்கில்லை’’ என்றார். தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனிடம் பேசினோம். ‘‘கம்யூனிஸ்ட்களின் கட்டுப்-பாடுகள் ஒருகாலத்தில் பலமாக இருந்தது. ஆனால் இப்போது தவறு செய¢தால் ஊரை விட்டு ஒதுக்குவது போன்ற அவர்களின் செயல்பாடுகள் கொள்கைக்கு முரண்பாடாக இருந்து வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் கட்சியில் அவர்களாகவே சேருகிறார்கள். மக்களிடையே நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது’’ என்றார். ஆதிதிராவிடர் & தேவேந்திரகுல வேளாளர் இடையேயான தீண்டாமை தென்காசி கிராமத்தில் வெளிப்படையாக வெடித்தாலும்... நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்னும் நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருக்கிறது. வெறும் கட்சி மாறும் பிரச்னையாக எடுத்துக் கொள்ளாமல் மிகப் பெரிய சமுதாயக் கடமையாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் அரசாங்கமும், கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும். செய்வார்களா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக