செவ்வாய், 14 செப்டம்பர், 2010
இருட்டடிப்பில் இம்மானுவேல் சேகரன்!
சாதி அடிப்படையில் தியாகங்களுக்குக்கூட திரையிட்டு வரலாறு படைத் தவர்களைத்தான் உயர்குலம் என்ற உச்சாணிக் கொம்பில் அமர வைத்திருக்கிறோம். அத்தகைய "மேன்மக்கள்' நிகழ்த்திய சாதனைகள்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் வேதனைக் குரலாக இப் போது வெளிப்பட ஆரம்பித் திருக்கிறது.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வீர முழக்கமிட்ட வீர பாண்டிய கட்டபொம்மன், அகிம்சையை போதித்த காந்தி, சுதந்திரத்துக்காக சுக வாழ்வைத் துறந்த நேரு, செக்கிழுத்த சிதம்பரனார், கொடிகாத்த குமரன் என இவர்களின் தியாகங்கள்தான் பாடப்புத்தகங்களில் பதிவாகி மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. இந்த வரிசையில் சில சாதாரண தலைவர்களைக்கூட புகழேணியில் ஏற்றி விட்டிருக்கிறோம். அதேநேரத்தில், உயிர்த்தியாகம் செய்த சில தலைவர்களை சாதி புதை குழிக்குள் தள்ளி வரலாற்றிலும் தீண்டத்தகாதவர் களாகவே ஒதுக்கி வைத்திருக்கிறோம். எப்படியோ, ஒரு அம்பேத்கர் மட்டும்தான் இத்தனை சதிகளையும் முறியடித்துவிட்டு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். ஒண்டிவீரனாகட்டும், வீரன் சுந்தரலிங்கமாகட்டும், சமகாலத்தில் வாழ்ந்து சாதிக் கொடூரத்தால் உயிரை விட்ட இம்மானுவேல் சேகரனாகட்டும்... இவர்களை யெல்லாம் இருட்டடிப்பு செய்திருக்கிறது வரலாறு.
சுவரொட்டிகளில் தலித் தலைவர்களைப் பார்க்கும்போது முகம் சுளிக்கும் போக்கு இங்கு இல்லாமல் இல்லை. இன்று போஸ்டர்களில் சிரிக்கும் வாழும் தலித் தலைவர்களுக்கெல்லாம் முன்னோடி யாகத் திகழ்பவர் இம்மானுவேல் சேகரன். யார் இந்த இம்மானுவேல் சேகரன்? அவர் செய்த தியாகம் என்ன? நம்மில் பலருக்கும் கேள்வி எழலாம். 1957, செப்டம்பர் 11-தான் இம்மானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்ட நாள். போற்றுதலுக்குரிய அந்தப் போராளியின் 53-வது நினைவு நாள் இதோ இன்று.
-பெருமூச்சு விட்டார் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான வடிவேல் ராவணன். இம்மானுவேல் சேகரனின் போராட்ட வாழ்க்கை குறித்து அவர் விவரிக்க ஆரம்பித்தார்.
""இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் அருகிலுள்ள செல்லூரில்தான் பிறந்தார் இம்மானுவேல் சேகரன். பாளையக் காரர்கள், ஜமீன்தார்கள், மிட்டா மிராசுகள், பணக்காரர்கள், மேல்சாதி வெறியர்களுக்குத் தான் இந்திய சுதந்திரம் முதல் தேவையாக இருந்தது. ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? ஒடுக்கப்பட்ட மக்களை இங்கு அடிமைகளாகத்தானே நடத்தி வந்தார்கள். ஆனாலும் தேச விடுதலைக்கு முழுமூச்சாக தங்களை அர்ப்பணிக்கவே செய்தார்கள் அம்மக்கள். 1942-ல் இந்திய விடுதலையின் இறுதிக் கட்டப் போராட்டமான "வெள்ளையனே வெளியேறு' ஆகஸ்ட் போராட்டத்தில் பங்கேற்று 17 வயதே ஆன இம்மானுவேல் சேகரன் தந்தை வேதநாயகத் துடன் சிறை சென்றார். மூன்றுமாத சிறைவாசம் முடிந்து வெளியில் வந்தவர், ஹிட்லருக்கு எதிரான உலகப்போரில் ஈடுபடுமாறு வானொ லியில் அம்பேத்கர் விடுத்த அழைப்பினை ஏற்று இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
ஒரு வழியாக உலகப்போர் முடிவுக்கு வந்து, ஹிட்லர் ஒழிந்த பிறகு 1946-ல் மதுரையில் பாலசுந்தரராசு கூட்டிய மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை கேட்டு பன்மடங்கு எழுச்சி பெற்றார். சுதந்திர இந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் அவதி கண்டு கொதித்தெழுந்தார். சாதியைச் சுட்டிக்காட்டி யே அம்மக்கள் மீது திணிக்கப்பட்ட இழிவு நடவடிக்கைகள்தான் எத்தனை? எத்தனை?
மேல்சாதிக்காரர் யாரேனும் செத்துப் போனால், ஒடுக்கப் பட்ட சமுதாயப் பெண்கள்தான் மாரடித்து ஒப்பாரி வைக்க வேண்டும். சில சமயங்களில் இதற்குக் கூலியும் கொடுப் பார்கள். இதைத்தான் "கூலிக்கு மாரடிக்குற வளுக....' என்று கேவலமாகப் பேசுவார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் குடும்பங்களில் ஏதேனும் பிரச்சினை என்றால், மேல்சாதிக் காரர் ஒருவரை அழைத்து வந்து அவர் காலில் விழுந்து மண்டியிட்டு மரியாதை செய்து பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி கெஞ்ச வேண்டும். டீக்கடைகளில் சிரட்டைக் காப்பிதான். எங்கும் இருந்தது இந்த இரட்டைக் குவளை முறை. "உங்களுக்கு எதற்கு சுத்தமான தண்ணீர்?' என்று ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர்க் கிணறுகளில் மலத்தைக் கொட்டுவார்கள், மண்ணெண்ணெய் ஊற்றுவார்கள். விஷத்தையும் பாய்ச்சுவார்கள். "எங்கள் காலடியில் நீங்கள் ஒடுங்கியே கிடக்க வேண்டும்' என்ற கெட்ட நோக்கத்தோடு அரிச்சந்திரன் நாடகத்தில் மயான காண்டத்தில் அரிச்சந்திரன் பறையனாகி சுடலை காக்கும் காட்சியையே விடிய விடிய நடத்துவார்கள். ஊர்த்திருவிழாக்களிலும், கூலி எதுவுமின்றி மேளம் கொட்டுவது போன்ற அவரவர் குலத்தொழிலை தொண்டூழியமாகச் செய்தாக வேண்டும். தண்ணீர் பானைகளுடன் தெருவில் நடக்கும் பெண்களிடமிருந்து பானைகளைப் பிடுங்கி உடைத்துப் போட்டு இழிவுபடுத்து வார்கள். மணமக்களாக இருந்தாலும் புத்தாடை அணிந்து வீதியில் நடந்தால் கட்டி வைத்து தண்டம் விதிப் பார்கள். ஆடு, மாடு களைத் திருடிச் சென்று விட்டு, "ஆடு இருக்கும் இடத்தைக் காட்டு கிறேன், துப்புக் கூலி கொடு' என்று இம்சை பண்ணுவார்கள். "தோளில் துண்டு போடக் கூடாது, காலில் செருப்பணிந்து வீதியில் நடக்கக்கூடாது, வெளுத்த வேட்டி-சட்டை உடுத்தக்கூடாது' என ஒடுக்கப்பட்ட மக்களை முடிந்த மட்டிலும் நசுக்கியே வைத்திருந்தார்கள்.
இதற்கெல்லாம் தக்கவிதத்தில் பதிலடி கொடுத்தார் இம்மானுவேல் சேகரன். மரத்தடிகளில், தோப்புகளில், வயல்வெளிகளில் மக்களைச் சந்தித்தார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு மாறுவேடத்தில் சென்று, நேரில் கண்டறிந்து எதிர் நடவடிக்கைகளை மேற் கொண்டார். வழக்குப் போட்டார். தீண்டா மைக்கு எதிராக பெட்ரோமாக்ஸ் லைட் ஏந்தி ஊர்கள் தோறும் தனது ஆதரவாளர்களைத் திரட்டிச் சென்று கூத்துகள், நாடகங்கள் நடத்தி பரப்புரை செய்தார். 1954-ல் தன் குடும்பச் சொத்தில் ஒரு பாதியை விற்று தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தினார். இந்தப் போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, கக்கன் மூலம் தங்கள் கட்சியில் இம்மானுவேல் சேகரனை இணைத்துக்கொண்டது காங்கிரஸ். அவரும் ஒடுக்கப்பட்ட வகுப்பார் கழகத்தின் முதுகுளத் தூர் வட்டாரத் தலைவர் ஆனார். 1957-ல் ஒடுக்கப்பட்ட வகுப்பார் இளைஞர் கழகத்தின் மாவட்டச் செயலாளராகி, "இந்த ஒடுக்குமுறை தொடருமேயானால் எம் மக்கள் இஸ்லாமைத் தழுவ நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் என்ற எல்லைக்குள் நிற்காமல், பிற மாவட்ட மக்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் அவரது போராட்டம் பரவ... 1957-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பார்வர்டு பிளாக் வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார் காங்கிரஸ்காரரான திருநெல்வேலி ஆர்.எஸ்.ஆறுமுகம். இதே ஆண்டில் நடந்த முதுகுளத்தூர் சட்டமன்ற இடைத்தேர்த லில் பார்வர்டு பிளாக் கட்சியின் சசிவர்ணத் தேவர் வெற்றி பெற்றார். ஆனாலும் அரசியல் எதிரிகளாகவும் பார்க்கப்பட்டார்கள் ஒடுக்கப் பட்ட மக்கள். இதனால் பகைமை முற்றி, நூற்றுக் கணக்கான வீடுகள் தீக்கிரையாயின. இரு தரப்பிலும் பலர் வன்முறைக்கு பலியாகி "முதுகுளத்தூர் கலவரம்' பெரிய அளவில் வெடித்தது.
உடனே இராமநாதபுரம் ஆட்சியர் பணிக்கர் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10-9-1957-ல் அமைதிக் கூட்டம் நடத்தினார். அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார் இம்மானு வேல் சேகரன். அங்கு, தம் மக்களுக்கு எதிராகப் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் சுடச்சுட தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிலடி கொடுத்தது, "இனி இவனை விட்டு வைக்கக்கூடாது' என்ற வன்மத்தை ஏற்படுத்தியது. மறுநாளே 33 வயதே ஆன இம்மானுவேல் சேகரனை சாதி வெறிகொண்டு பட்டப்பகலில் நடுரோட்டிலேயே வெட் டிக் கொன்றார்கள். அதனால் உயிரிழப்பு, உடமைகள் அழிப்பு என கலவரக்காடானது இராமநாதபுரம் மாவட்டம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இத்தனைப் போர்க்குணத்துடன் இம்மானுவேல் சேகரன் அளவுக்கு தமிழகத்தில் போராடியவர்கள் யாருமில்லை. இதை உணர்ந்துதான் 30-10-1957-ல் நடந்த சட்ட மன்ற விவாதத் தின்போது இப்படிப் பேசினார் தி.மு.க. தலைவர் அண்ணா.
""தேவேந்திர குல மக்களுக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார் இம்மானுவேல் தேவேந்திரர். இவர் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டுமல்ல... உலகமே புகழும் ஒரு வீரனாகத்தான் அவரைக் கருத வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டு தன் னையே பலியாக்கிக்கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக் கப்பட வேண்டும்.''
சாதித் திமிரும், தீண்டாமைக் கொடுமையும், ஆதிக்க அட்டூழியங்களும் வீரம் ஆகுமா? இவை அறியாமையின் அடையாளங்கள் அல்லவா?''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக