புதன், 8 செப்டம்பர், 2010
கலவர அபாயம்! தென் மாவட்ட டென்ஷன்!
""சாதி கலவரத்தை, மதக்கலவரத்தை உருவாக்கி, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திட முனைவோரைக் கண்டறிந்து தடுத்திடும் செயலில் உடனே ஈடுபடுவீர்!''
ஆகஸ்ட் 27 மற்றும் 28-ந் தேதிகளில் சென்னை கோட்டையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் கலைஞர் எச்சரிக்கை செய்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பல மாநிலங்களில் சாதி மதக் கலவரங்கள் நடந்தா லும், தமிழகத்தில் சாதி மதக் கலவரங்கள் ஏதும் நடக்கவில்லை. அமைதியாக இருந்த தமிழகத்தில் இப்போது சில சக்திகளால் கலவரச் சூழல் ஆரம்ப மாகியிருப்பதை, உளவுத்துறைத் தலைவர் ஜாபர் சேட் இதே மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மறுநாள்தான் மள்ளர் இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர் கொந்தகை ஹரிகிருஷ்ணன் கொடூரமாக வெட்டிக் கொல் லப்பட்டு, கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டி ருக்கிறார்.
கொந்தகை கிராமம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சாதீய வெறி யைக் கிளப்பிவிட்டிருக்கிறது இந்தப் படு கொலை.
மதுரைக்கு அருகிலுள்ள சிவகங்கை மாவட்ட கொந்தகைக் கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கிராமத்தில் உள்ள 80 தேவர் சாதி குடும்பங்களும் வீடுகளைப் பூட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.
கொந்தகையில் மெஜாரிட்டியாக வசிக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல குடும்பத்தினரும் திரண்டு, ஏ.டி.எஸ்.பி. கண்ணனை முற்றுகையிட்டு ""எங்கள் இன இளைஞரை கொலை செய்தவர்களை உடனே கைது செய்யாவிட்டால், உங் கள் போலீஸ் காவலையும் மீறி அந்த வீடுகளை நொறுக்குவோம்'' என்று ஆவேசப்பட்டுக் கொண்டி ருக்க... அவர்களைச் சாந்தப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமானார்கள் காவல்துறையினர்.
படுகொலை செய்யப்பட்ட இளைஞர் ஹரி கிருஷ்ணனின் வீட்டுக்குச் சென்றோம். சோகமும் கோபமும் கொந்தளிக்கத் திரண்டிருந்தார்கள் இளை ஞர்கள். ஹரிகிருஷ்ணனின் தந்தை ராமையாவிடம் பேசினோம். கண்ணீரைத் துடைத்தபடி நடந்ததை விவரித்தார் ராமையா.
""எனக்கு இரண்டு பெண்கள். ஒரே பையன். அந்த ஒரே மகன் ஹரியைத்தான் வெட்டிக் கொலை செய்துவிட் டார்கள் சாதி வெறியர்கள்.
மகனை நல்லா படிக்க வைக்க ணும்னுதான் ஸ்கூலுக்கு அனுப்பி னோம். பள்ளிக்கூடத்துல பிரச் சினைக்கு மேல பிரச்சினை. 9-ம் வகுப்போட நின்னுட்டான். கூலி வேலைக்கு அனுப்பினேன். அவ னுக்குப் பிடிக்கலை. இமானு வேல் பேரவையில சேர்ந்து கடுமையா வேலை செய்தான். எப்பவும் இல்லாத அளவுக்கு போன ஆண்டு செப்டம்பர் 11 அன்னிக்கு தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை இந்த கொந்தகை கிராமத்தில கிராண்டா ஏற்பாடு செய்தான். அப்பவே இங்கே இருக்கிற தேவர் சாதி இளைஞர்களுக்கு எதிரியாயிட்டான் என் மகன்.
எங்க தேவேந்திர சாதிப் பையன் ஒருத்தன், பள்ளிக்கூடத்துச் சுவரில் அவங்க சாதி யைப் பற்றி என்னமோ எழுதிப் போட்டி ருக்கான். அதை ஹரிதான் எழுதினான்னு அவங்க நினைச்சி, அதே சுவத்துல எங்க சாதியைப் பத்தி எழுதிப்பிட்டார்கள். நம்ம பையன் ஒருத்தன் அவங்க எழுதினதை அழிச் சிருக்கான். அதனால அவனை அவங்க அடிச் சிட்டாங்க. அந்தப் பையன் வந்து நம்ம ஹரிகிட்ட சொல்லிப்பிட்டான்.
சனிக்கிழமை ராத்திரி அங்கே போன ஹரி, எவன்டா எங்க பயலை அடிச்சதுனு சத்தம் போட்டிருக்கான். இதுதான் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை நைட். ஹரியும் அவன் நண்பன் ஆவணியாபுரம் விஜயனும் எங்க வீட்ல சாப்பிட்டுட்டு இருக்கும்போது, ஹரிக்கு வேண்டிய நாயக்கர் சாதி நண்பன் கார்த்திக் செல்போன்ல, உடனே வாடானு கூப்பிட்டான். அவசரமா சாப்பிட்டுட்டு ரெண்டுபேரும் கார்த்திக்கை பார்க்கப் போனானுங்க. அப்புறம் ராத்திரி மூணு நாலு மணிக்கு என் மகனோட பிணத் தை அந்தக் கிணத்துல இருந்து தூக்கி னோம்யா'' ஒரே மகனை பறிகொடுத்த அந்தத் தந்தை மேலே பேச முடியாமல் தேம்பினார்.
""ஹரி கொல்லப்பட்ட தகவல் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?''
""ஹரியை கொலை செஞ்சவனுங்க ஹரியோட செல்போன்ல இருந்து எங்க சாதிப் பையன் ஒருத்தனுக்குப் போன் போட்டு, "டேய் ஹரியை போட்டுட்டம்டா... இன்னும் ரெண்டு பாக்கி இருக்கானுங்கடா'னு சொல்லிட்டு கட் பண்ணிட்டானுங்க. அந்தப் பையன் சொல்லித்தான் தெரியும். ஏழு, எட்டு பையன்கள் ரவுண்ட் கட்டியிருக்கானுங்க. ஹரியோட நண்பன் விஜயன், அடியை வாங்கிட்டு ஓடிட்டான். எட்டுபேரும் சேர்ந்து ஹரியை வெட்டியிருக்காங்க.
என் மகன் ஹரி, தன்னோட நெஞ்சிலயும் கையி லயும் இமானுவேல் சேகரனோட படத்தைப் பச்சைக் குத்தியிருந்தான். பச்சை குத்தின அந்த நெஞ்சுப் பகுதியில 7 கத்திக் குத்து. மொத்தம் 36 கத்திக்குத்து. அப்புறமா வெட்டித்தான் கிணத்துல தூக்கிப் போட்டிருக்கானுங்க. தப்பி ஓடின விஜயனுக்கு போன் போட்டுக் கேட்டப்ப... தேவர் சாதி பயலுக 8 பேர் சேர்ந்து வெட்டினதாவும், உயிருக்குப் பயந்துதான் ஓடிப்போனதாவும் சொன்னான். அந்த கார்த்திக்தான் அந்தச் சாதிப் பையனுங்களுக்கு ஆளா இருந்து கூட்டிக்கொண்டு விட்டு கொலைபண்ண வச்சிட்டான்'' என்றார் ராமையா.
""சாதி சங்காத்தம் வேணாம் வேணாம்னு அடிச் சுக்கிட்டேனே... இமானுவேல் நினைவுநாளை கொண் டாடின கோபத்துலதானே "பொலி' போட்டுட்டானுங்க. போன வருஷத்தைப்போல இந்த வருஷம் செப்டம்பர் 11 அன்னிக்கு இமானுவேல் அய்யா விழாவை நிறைக்கச் சிறக்க கொண்டாட இருந்தானே... என் வயித்துல பொறந்த ஒரே வாரிசை சாதி வெறி கொன்னுடுச்சே'' -கதறிக் கொண்டிருந்தார் ஹரியின் தாயார் லட்சுமி.
""பதிலுக்குப் பதில் நாங்களும் கிளம்பியிருந்தால் எத்தனை பிணம் விழுந்திருக்கும். கோழைகள் ஏழெட்டு பேர் சேர்ந்து ஒரு வீரனை கொலை பண்ணிட்டு, ஊரைவிட்டே ஓடி ஒளிஞ்சிட்டானுக'' -திரண்டிருந்த தேவேந்திர இளைஞர்கள் ஆவேசப்பட்டார்கள்.
தேவர் சாதி வீடுகளை நோக்கிச் சென்றோம். அத்தனை வீடுகளிலும் பூட்டு தொங்கியது. ஒரு வீட்டில் வயதான பாட்டி மெல்ல எட்டிப் பார்த்தார். அந்த வீட்டுக்குள் நுழைந்தோம்.
""பேப்பர்காரவுகளாய்யா... என்னை போட்டோ கீட்டோ புடிச்சுப் போடாதிய... நாளைக்கு வெளில தலைகாட்ட முடியாதுய்யா...'' -நடுக்கத்தோடு சொன் னார்.
சமாதானப்படுத்தி, வாயைக் கிளறினோம்.
""எல்லாரும் ஏன் ஓடிட்டாகனு கேக்குறியளா? இருந்தா போலீஸ் கேஸ்னு வந்திருமே அதுக்குப் பயந்து தான் அத்தனை தேவமாரு வீடுகளும் ஓடிப்போயித்தாக'' என்றார்.
""சும்மா சொல்லுங்க பாட்டி... ஏன் இப்படி சாதி கொலை நடந்தது?
""இது இன்னக்கி நேத்து தகராறு இல்லை. 12 வருஷம் முன்னாடி எங்க பசங்களை அவங்க வெட்டினாங்க. பதிலுக்கு இவனுங்க வெட்டி னானுங்க. ரெண்டு சாதியிலயும் வயசானவுக எந்த வம்பு தும்புக்கும் போறதில்லை. எல்லாம்... இந்த எளவட்டப் பசங்க செய்றது தான். புதுசு புதுசா சாதிக்கட்சி. கொடியேத்தி அசிங்கமா வையிறது, திருப்பி வையிறது இப்படித்தான்...
எத்தனை நாளைக்கு பொறுத்துப் போகமுடியும். எங்க சாதியிலயும் எளவட் டங்கள் இருக்கானுகள்ல... உறுதியா நின்னு போட்டுத் தள்ளிட்டானுக. என்னைக் கேட்டா அவனை கொலை பண்ணீருக்கப்பிடாது. ஒத்தைக் காலையோ, கையையோ வெட்டிட்டு உசுரோட விட்டுருக்கலாம். இப்ப பாருங்க ஸ்கூலுக்குப் போற என் பேரனையும் போலீஸ் புடிச்சிக்கினு போயிருச்சு. அவுகளும் சும்மா இல்லை. ஆம்பளை, பொம்பளைய கூட்டமா வந்து எங்க சாதிக்கார 21 வீடுகளை இடிச்சுப்பிட்டுப் போனாக. போலீஸ் பார்த்துக்கினுதான் இருந்துச்சு. மாட்டி யிருந்தா என்னையும் கொன்னுட்டுப் போயி ருப்பானுங்க'' . பெருமூச்சு விட்டார் அந்த மூதாட்டி.
சிவகங்கை ஏ.டி.எஸ்.பி. கண்ணனோ... ""இந்தக் கொலைச் சம்பவத்தை அரசிய லாக்கிவிடக் கூடாது என்பதுதான் எங்க கவலை. கொலைகாரர்களை அரெஸ்ட் பண்ணிட்டோம். கிரிக்கெட் விளையாட்டு தான் சாதிச் சண்டையா மாறி, கொலைவரை கொண்டுவந்துவிட்டது. அந்த ஹரியும் சாதாரண ஆளில்லை. திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட வர். 2 நாளைக்கு முன்னால் கூட ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் டுக்கு போயிருக்கிறார்கள். மிகப்பெரிய கலவரமாக மாறி யிருக்க வேண்டியதை கட்டுப்படுத்தியிருக் கிறோம்'' என் கிறார்.
ஹரி கொலை நடந்த மூன்றாம் நாள், ஹரியின் நண்பர் விஜயனின் ஊரில் இருக்கும் இமானுவேல் சேகரனின் சிலையை ஒரு கும்பல் சேதப்படுத்தி விட்டது. அங்கேயும் சா"தீ' படரத் தொடங்கியிருக்கிறது.
ஹரியின் கொலை பற்றி நம்மிடம் பேசிய மள்ளர் கழக இலக்கிய அணி பொருளாளர் சோலை பழனிவேல் ராஜன்...
""கடந்த 9 வருடங்களில் 80-க்கும் அதிகமான தேவேந்திர இனத்தவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பரமக்குடி வில்சன், ஜான்சன், வில்லாபுரம் அறிவழகன், பள்ளப்பட்டி சுரேஷ்... இப்ப கொந்தகை ஹரி... இப்படி எத்தனை கொலைகள்? தேர்தல் வரும் வேளையில், சாதிப் படுகொலைகளை தூண்டும் சாதியினர் மீதும், இவர்களைத் தூண்டுவோர் மீதும் ஈவு இரக்கமில்லாமல் நடவடிக்கை எடுக்கணும். உண்மையான கொலைகாரர்களை விட்டுவிட்டு அப்பாவிகள் மேல் வழக்குப் போட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் போடவும் முயற்சி செய்கிறதாம் போலீஸ்'' என்கிறார்.
இது மட்டுமின்றி மதுரை விமான நிலைய பெயர் பிரச்சினையும் தென் மாவட் டங்களில் புதிய பதட்டத்திற்கு வழி வகுத் திருக்கிறது.
மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுவ தென்று அரசு முடிவெடுத்திருக்கிறது. தேவேந்திரர் தரப்போ ""எங்கள் இமானுவேல் சேகரனின் பெயரை சூட்டவேண்டுமென்று ரொம்ப நாளாக அரசுக்கு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்று, மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரனின் பெயரைச் சூட்ட வேண்டும்'' என்று போராடத் தயாராக இருக்கிறார்கள்.
இந்தப் "பெயர்' பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி, சாதிக் கலவரத்துக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றன சில "சக்தி'கள். இந்த விமான நிலைய பெயர் சிக்கலை எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ அரசு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக