சனி, 25 செப்டம்பர், 2010
தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூஜை…. இக்கட்டில் தி.மு.க.!
கடந்த 11-ம் தேதி நடந்து முடிந்த இம்மானுவேல் சேகரனின் குரு பூஜை நிகழ்ச்சி தி.மு.க.வுக்கு எதிரான சலசலப்புகளை ஏற்படுத்திவிட்டது. தென் மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல, தாழ்த்தப்பட்ட மக்களின் அபரிமித ஆதரவை அள்ளும் வகையில் புதிய தமிழகம் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்ட அ.தி.மு.க., இம்மானுவேல் நினைவு நாள் சலசலப்புகளைத் தங்களுக்கு சாதகமாக்கத் திட்டமிட்டு இருக்கிறது.
வழக்கத்துக்கு மாறாக, இந்த முறை தி.மு.க.வினர் முதல் ஆளாக இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தனர். அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் ரித்தீஷ் எம்.பி., முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். அஞ்சலி செலுத்திய சுப.தங்கவேலனிடம், “ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ஏன் அஞ்சலி செலுத்த வரலை? இந்த நிகழ்ச்சிக்குக்கூட வராமல் அப்படி என்ன அவங்களுக்கு முக்கியமான வேலை?” என ஒருவர் கோபமாகக் கேட்க… தி.மு.க.வினருக்கு சுள்ளென்று ஆகிவிட்டது. கேள்வி கேட்ட நபரை முறைத்தபடி அங்கிருந்து அகன்றார்கள்.
ஆண்டுதோறும் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்த முன்னாள் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கருப்பசாமியும் மாவட்ட நிர்வாகிகள் சிலருமே வருவார்கள். ஆனால், இந்த முறை புதிய தமிழகம் தங்கள் அணியில் இணைந்ததால், முன்னாள் அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன், ராஜ கண்ணப்பன், அன்வர் ராஜா உள்ளிட்ட மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் கருப்பசாமியுடன் அனுப்பிவைத்தது அ.தி.மு.க. தலைமை. இவர்களுடன் கணிசமான தொண்டர்களும் சேர்ந்து இம்மானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதைக்கண்ட தேவேந்திர குல மக்களிடையே தாங்க முடியாத பூரிப்பு!
விழா அழைப்பினர், “இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க அ.தி.மு.க. குரல் எழுப்ப வேண்டும்” என முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். “அம்மாவின் அனுமதியுடன் உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்!” என நயினார் சொல்ல…. அங்கே இருந்த மக்கள் ஆரவாரமாகக் கைதட்டினார்கள்.
தாரை தப்பட்டை முழங்க அழைத்து வரப்பட்டார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. “15 ஆண்டுகளுக்கு முன் கவனிப்பு இல்லாமல் கிடந்த இம்மானுவேல் நினைவிடத்தை புதிய தமிழகம் நடத்திய மாநாடுதான் அடையாளம் காட்டியது. அதன் வளர்ச்சி இன்றைக்கு அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வரை சென்றுள்ளது. நாம் எல்லோரும் இதைப் பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். ஆனால், கருணாநிதி அரசு கண்டுகொள்ளவில்லை. தி.மு.க. அரசு இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்கவும் போவதில்லை. இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்திருங்கள். அடுத்தது அம்மாவின் ஆட்சிதான். அம்மாவின் ஆட்சியில் நமது கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். அதற்கு தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிக்க நாம் சபதம் எடுக்க வேண்டும்…” எனப் பேசிக்கொண்டே போக… மொத்தக் கூட்டமும் ஆரவாரித்தது.
இது குறித்துப் பேசும் விவரப் புள்ளிகள், “இம்மானுவேல் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க தி.மு.க. கண்டிப்பாக முயலாது. காரணம், தென் மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்து வாக்குகள் தங்களுக்கு எதிராகிவிடுமோ என்கிற பயம். உண்மையில், முக்குலத்து மக்கள் தங்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையே ஏதாவது பிரச்னை நடக்கிற நேரத்தில்தான், அரசின் நடுநிலையைக் கவனிப்பார்கள். இம்மானுவேல் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதால், முக்குலத்து மக்களுக்குக் கோபம் வராது. தி.மு.க. அரசுக்கு இது புரியவில்லை. அ.தி.மு.க.வோ இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. இம்மானுவேல் நினைவு நாளை அனுசரிக்க முக்குலத்துப் பிரதிநிதிகளை அ.தி.மு.க. தரப்பு அதிகமாக அனுப்பியது. தலித் விரோதப் போக்கு எங்களிடம் இல்லை எனக் காட்டவே இந்த ஏற்பாடு. தலித் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசு அக்கறை எடுக்காவிட்டால், அதற்கான விளைவை வரும் தேர்தலில் தி.மு.க. சந்திக்கத்தான் வேண்டும்!” என்கிறார்கள் உறுதியாக. இதை சரிக்கட்ட தி.மு.க.வின் திட்டம் என்னவோ?!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக