சனி, 25 செப்டம்பர், 2010

மாவீரன் சுந்தரலிங்கம்.

சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் கட்டபொம்மனும் ஆங்கில ராணுவத்தால் அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களைக் காத்து அம் முயற்சியில் தம் உயிரைத் தந்தவர் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சுவர்னகிரியில் பிறந்தவர் சுந்தரலிங்கம். தந்தை கட்டக் கருப்பணத் தேவேந்திரர். தாயார் முத்தம்மாள். சுந்தரலிங்கம் பிறந்த ஆண்டு ஏறக்குறைய 1771 என்று நம்பப்படுகிறது. மனைவி சண்முகவடிவு. தம்பதிகளுக்கு இரு மகன்கள். பாஞ்சாலங்குறிச்சிக்கும், எட்டயபுரத்தும் இடையே நடந்த ஒரு ‘நதி நீர்ப் பங்கீட்டில்’தான் சுந்தரலிங்கத்தின் அரசியல் வரலாறு தொடங்கி இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான ஆற்றிலோடைக் கண்மாய் நீரை எட்டயபுரத்தைச் சேர்ந்த தருவைக்குளம் கண்மாய்க்குத் திருப்ப எட்டயபுரத்து அதிகாரம் ஆற்றிலோடைக் கண்மாயின் குறுக்கே கரை எழுப்பியபோது, அதைத் தடுத்து எட்டயபுரத்தார்களை விரட்டியடித்த வீரச் செயலால் புகழடைந்தார் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் செய்த முதல் தொண்டு அது. இதைத் தொடர்ந்து, சுந்தரலிங்கம், கட்டபொம்முவின் படைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் சேர்க்கப்பட்டுத் தன் அர்ப்பணிப்பு மிக்க வீரச் செயல்களால் தளபதி என்கிறஅளவுக்குஉயர்ந்தார். அப்போது தமிழ்நாடு 72 பாளையங்களாகப் பிரிந்திருந்தது அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி .ஆங்கிலேயர்க்கு 1772 முதலே ஆறு ஆண்டுகளாகக் கட்டபொம்மு வரிகட்ட மறுத்தார். இந்தச் சூழலில் திருநெல்வேலி, இராமநாதபுரத்தின் ஆட்சியராக 1797-ல் நியமிக்கப்பட்ட ஜாக்சன், 26.10.1797 அன்று, உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தூத்துக்குடியில் முகாம் இட்டிருந்த இராணுவ அதிகாரி டேவிட்சனுக்கு உணவுக்காக ஆடுகள் அனுப்ப வேண்டும்’ என்றும் கட்டபொம்மனுக்குத் உத்தரவு பிறப்பித்தான். கட்டபொம்மன், இதைப் புறக்கணித்தார். இறுதியில் கட்டபொம்மன். ஜாக்சனைச் சந்திக்கப் புறப்படுகிறார். உடன் சுந்தரலிங்கமும், ஊமைத்துரையும் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள். பேட்டிக்கு வரச் சொன்ன ஜாக்சன், சுமார் 23 நாட்கள் 400 மைல்கள் அவர்களை அலையவிட்டு அவமானப்படுத்திக் கடைசியில் 10.9.1798 - அன்று மாலையில் சந்திக்கிறான். கட்டபொம்மனை நிற்க வைத்தே பல மணிநேரம் பேசி, அவரை மேலும் அவமானப்படுத்துகிறான். கட்டபொம்மன் நின்றுகொண்டிருந்தார். கைது செய்யும் சூழல் உருவாவதை கட்டபொம்மு உணர்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகக் கீழே வருகிறார். ஆங்கிலச் சிப்பாய்கள் அவரை மடியைப் பிடித்து இழுக்கிறார்கள். சில சிப்பாய்கள் கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் நோக்கிச் சுடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே நின்றிருந்த சுந்தரலிங்கம், தன் வீரர்களுடன் கட்டபொம்மனைப் பாதுகாக்க வருகிறார். அப்போது ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கட்டபொம்மனைக் கொல்ல பாய்ந்து வருவதைக் கண்ட சுந்தரலிங்கம், தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்தார். கட்டபொம்மன் அப்போது தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கட்டபொம்மனின் தோளுடன் தோளாக நின்று, கடைசிவரை அவருடன் சேர்ந்து போராடித் தம் உயிரைத் தந்தவர்கள் தேவேந்திரர்களும் பகடைகளுமே. 5.9.1799ம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை இடப்பட்டு அன்றே தாக்கப்பட்டது. சுந்தரலிங்கத் தேவேந்திரர் தலைமையில் காலாடிக் கருப்பத் தேவேந்திரர், வீரமல்லு நாயக்கர், கந்தன் பகடை, பொட்டிப் பகடை முதலான துணைத் தளபதிகளின் வழிகாட்டுதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் ஆங்கில வீரர்களுடன் மோதினார்கள். மிகவும் உக்கிரமாக நடைபெற்ற முதல் நாள் போரில் ஐந்து முக்கிய ஆங்கிலத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பகுதிக்குப் பெரும் சேதம் விளைந்தது. மறுநாள் 6-ம் தேதி இரவு கட்டபொம்மன், தன் தம்பி ஊமைத்துரையோடு கோட்டையைவிட்டு வெளியேறி, படை திரட்டும் பொருட்டுக் கோலார்பட்டிக்குச் செல்கிறார். மறுநாள் கோட்டை இடித்துத் தள்ளப்படுகிறது. அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தேவேந்திரர்கள், அதே அளவு அருந்ததியர்கள். களத்தில் பலியானார்கள் என்பது வரலாறு அதே சமயம் கோலார்பட்டியில் இருந்து கொண்டு படைதிரட்டிக் கொண்டிருந்த கட்ட பொம்மனையும் ஊமைத் துரையையும் எட்டயபுரம் படையும், ஆங்கிலேயர் படையும் சுற்றிக்கொண்டது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தப்பித்து வெளியேறினர். சுந்தரலிங்கம்தலைமறைவாகிறார். கட்டபொம்மனைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகில் கலியபுரம் எனும் இடத்தில் 23.9.1799 அன்று தொண்டைமான் ஆட்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர் மற்றும், ஏழுபேரைக் கைது செய்கிறார்கள். 5.10.1799 அன்று அவர்கள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு 16.10.1799 வரை சிறையில் வைக்கப்படுகிறார்கள். 16.10.1799 அன்று காலை கட்டபொம்மு மீது விசாரணை நடத்தப்படுகிறது. தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்குகிறார் பாளர்மேன். ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். ‘ஏதேனும் கூற விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனிடம் கேட்கிறான். பாளர்மேனை அலட்சியப்படுத்துகிறார் கட்டபொம்மன். வேடிக்கை பார்க்க வந்த ஆங்கில விசுவாசிகளான எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை மிக ஏளனத்துடன் பார்க்கிறார். தூக்குமேடைக்கு மிகுந்த வீரத்துடன் நடந்து செல்கிறார் கட்டபொம்மன். கயத்தாறு பழைய கோட்டைக்கு எதிரே உள்ள புளிய மரத்தில், கட்டபொம்மன் தன் உயிரைச் சுதந்திரத்துக்கு விலையாகக்கொடுத்தார். பாஞ்சாலங்குறிச்சி போரின் அடுத்தகட்டம், ஊமைத்துரையோடு ஆரம்பமாகிறது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கதாநாயகன் சுந்தரலிங்கத் தேவேந்திரன்தான். பாளையங்கோட்டைச் சிறையில் அகப்பட்டு, தூக்குக்குக் காத்திருந்த ஊமைத்துரையையும் மற்றும் உள்ள பாஞ்சை வீரர்களையும் மிகப் பெரிய சாகசம் செய்து தப்பிக்கச் செய்தவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், ஆங்கிலேயருக்கு எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத்தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக. கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபோது (16.10.1799) ஊமைத்துரையும் அவரோடு சேர்ந்து மொத்தம் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக விழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர். அதே நேரத்தில் 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிதான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார்செய்து கொண்டிருந்த சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும் ஊமைத்துரைக்கும் சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர். பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்யதார் பாளையம்கோட்டை சிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளை சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார். இதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழைஇலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார். அதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யாதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்த’ வியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு, ஊமையன் குழுவினர் வெளியேறினர். சுந்தரலிங்கத்தேவேந்திரர் மற்றும் புரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று ஆங்கில அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது. ஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் ஆறே நாளில், கட்டி எழுப்பினார்கள். சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம்12அடிகள். கோபம் கொண்ட ஆங்கிலப்படை மீண்டும் பஞ்சகுறிச்சி கோட்டைமீது படையெடுப்பை தொடங்கினார்கள். கயத்தாற்றை நோக்கி ஆங்கிலபடைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கெரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது ஆங்கில படை. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் ஆங்கிலப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டைசிதைந்தது. போரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம் ‘என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (ஊமைத்துரை) காப்பாற்றும்மா’ என்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார். உடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமையனுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, ஆங்கிலேயர்கள் சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரானபோர் பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது. பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முக்கியமானவர்களாக, கட்டபொம்மன், ஊமைத் துரை, சுந்தரலிங்கம், சிவத்தையா, தானாபதிப்பிள்ளை, தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள். பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை தான். பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப்படுகின்றன. 1847-ம் ஆண்டு, ஆங்கில அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு இசையத் தம் பாடல்களைப்பாடி இருக்கிறார்கள். கட்டபொம்மனின் படையில் அதிக அளவு வீரர்கள், தாழ்த்தப்பட்ட. சமுதாயத்தை சார்ந்தவர்களே என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். ஆனால் இன்று புனை பாத்திரங்களான வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாளுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கும் மேலாஆதிக்க தமிழகரசுகள் கட்டபொம்மனின் உண்மையான தளபதிகளான சுந்தரலிங்கத் தேவேந்திரர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை மற்றும் அவர்களோடு நின்று ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்ட தலித் மக்களை வரலாற்றில் இருந்து முழுமையாக புறக்கணித்துவிட்டது என்பது கசப்பான உண்மையே. 10.9.1798 - அன்று நடந்த பேச்சு வார்த்தையின்போது கட்டமொம்மனை சதித்திட்டம் செய்து ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கொலைசெய்ய முயர்ச்சித்தபோது, தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்து. கட்டபொம்மனை காப்பற்றினார் தேவேந்திரனார் அப்போது கட்டபொம்மன் தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். பாளையம்கோட்டை சிறையில் தூக்கு தண்டனை எதிர்பார்த்திருந்த மாவீரன் ஊமைதுறையை 1801-ஜனவரி இரண்டாம் தேதி சிறையை உடைத்து வெளிக்கொண்டுவந்தவர் வீரன் சுந்தரலிங்கத் தேவேந்திரர் தான். இப்படி பஞ்சலகுரிச்சி வீரர்களோடு மட்டுமல்ல மருது சகோதர்களோடும் இணைந்து ஆங்கிலேயனுக்கு எதிராக இறுதிவரை போராடி வீரசாவடைந்த அந்தமாவீரனுக்கு இந்த அரசுகள் செய்த மரியதைஎன்ன தெரியுமா? பேருந்துகளுக்கு அவர் பெயர்வையுங்கள். என கோரிக்கை வைத்ததற்காக ஒட்டுமொத்த தமிழக பேருந்துகளின் பெயரயும் மாற்றியதே இந்த அரசுகள் அவருக்கு செய்த மரியாதை. இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன். இந்தியாவில் தலித் மன்னனாக இருந்தாலும் சரி, சராசரி மனிதனாக இருந்தாலும் சரி. அவன் சாதனைகள் வரலாற்றில் மறைக்கபடும். என்பதற்கு தமிழகத்தில் பேருந்துகளுக்கு சுந்தரலிங்கனார் பெயரா? என்பதற்காக எல்லா பேருந்துகளின் பெயர்களின் மற்றபட்டதே உண்மையான சாட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக