புதன், 30 மார்ச், 2011

அனைத்து கிராமத்திற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் - டாக்டர். கிருஷ்ணசாமி























ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி குறிஞ்சிநகர், பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.



வாக்குகள் சேகரித்து டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில், "தூத்துக்குடி மாநகராட்சி, சங்கரப்பேரி, மாப்பிள்ளையூரணி, தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி பகுதிகளில் மக்கள் குடிநீர் பிரச்சனையாலும், மின்வெட்டு பிரச்சனையாலும் அவதிப்பட்டு வருகின்றனர். என்னை வெற்றி பெற செய்தால் ஆறு மாதத்திற்குள் அனைத்து கிராமத்திற்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி வகை செய்வேன். பொதுக் கழிப்பிடம், தனி நபர் கழிப்பிடம் அனைத்து கிராம, நகர மக்களுக்கும் கிடைக்க செய்வேன். சாலை வசதி, போக்குவரத்து வசதி மட்டுமின்றி அனைத்து அடிப்படை வசதிகளையும் சட்டசபையில் போராடி பெற்றுத் தருவேன். அரசு திட்டங்கள் அனைத்தும் நேரிடையாக கிடைத்திட, லஞசம், லாவண்யமற்ற முறையில் மக்கள் பயன் பெற பாடுபடுவேன். வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் வகையில் மாசில்லாத தொழில் நிறுவனங்களை தென் தமிழகத்தில் அமைத்திட குரல் கொடுப்பேன்" என்றார்.





மேலும், "தி.மு.க. அரசில் கிலோ அரிசி ஒரு ரூபாய் ஆனால் குடிநீர் விலை 3 ரூபாய், 5 ரூபாய். பருப்பு 100 ரூபாய், எண்ணெய் விலை 100 ரூபாய், உப்பு விலை பத்து ரூபாய் இந்த நிலையில் மக்களை பணம் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கி விடலாம் என தி.மு.க. வினர் வருகின்றனர். தாமிரபரணி, வைகை, பாலாறு என ஆற்று மணலை கொள்ளையடித்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தை வைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என நினைக்கின்றனர். மக்கள் வாக்குகளை விற்று தங்கள் உரிமைகளை இழந்து விடக்கூடாது. தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.





ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அம்மையார் அவர்கள் ஏழைகளே இருக்க கூடாது என திட்டம் தீட்டியுள்ளார். மீனையும் கொடுத்து, மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கவும் உள்ள திட்டம்தான் கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம். இதனால் தானாகவே மக்கள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்" என்று டாக்டர்.கிருஷ்ணசாமி பேசினார்.



அ.இ.அ.தி.மு.க., சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., மூவேந்தர் முன்னேற்ற கழகம், பார்வர்ட் பிளாக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக