செவ்வாய், 27 செப்டம்பர், 2011
பரமக்குடி துப்பாக்கி சூடு தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்
மதுரை : பரமக்குடி துப்பாக்கிசூடு நடந்த இடத்தை லோக் ஜனசக்தி அமைப்பின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இமானுவேல் சேகரன் குருபூஜை தினத்தன்று பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 6 பேரையும், அதற்கு முன்னதாக சிறுவன் பழனிக்குமாரையும் தமிழகஅரசு கொன்றுள்ளது. 100 பேர் திரண்டிருந்த கூட்டத்தை அடக்க முடியாமல் கலவரத்தை கட்டவிழ்த்து கண்மூடித்தனமாக திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
ஜனாதிபதி பிரதீபாபாட்டீலிடம் 5 அம்ச கோரிக்கை மனுவை அளித்துள்ளேன். அதில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும், காயம்பட்டவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வளவு நடந்தும் சம்பவ இடத்தை ஜெயலலிதா இன்னும் நேரில் சென்று பார்வையிடவில்லை. அவர் எப்படி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறார் என புரியவில்லை. தனக்காக நாக்கை வெட்டிக்கொண்ட பெண்ணுக்கு அரசு வேலையும், ரூ.5 லட்சம் நிவாரணமும் வழங்கிய ஜெயலலிதா, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் வழங்குவது எந்த வகையில் நியாயம்.
எங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வரும் செப்.28ல் நாக்பூரில் அனைத்து தலித் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பிறகும் கோரிக்கை ஏற்கபடவில்லையென்றால் தலித்துகளுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி நவம்பர் 30ம் தேதி 10 லட்சம் பேரை திரட்டி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
விசாரணை கமிஷன் மீது நம்பிக்கை இல்லை&திருமாவளவன்
துப்பாக்கி¢ச்சூட்டில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை திருமாவளவன் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில், ‘அதிமுக அரசு இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணை கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
ஏனெனில் அதில் தமிழக அரசின் தலையீடு இருக்கும். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தலித்துகள் மீது வன்முறையும், அடக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதுகுறித்து தேசிய தீண்டாமை ஒழிப்பு அமைப்பின் சார்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் மனு கொடுக்க உள்ளோம். தியாகி இமானுவேல் சேகரனுடைய நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது‘ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக