சனி, 17 செப்டம்பர், 2011

சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு

கடந்த (11/09/2011) ஞாயிறன்று பரமக்குடியில் நடந்ததை கலவரம் என்கிறார்கள் சிலர். சாதிக்கலவரம் என்கிறார்கள் வெகுசிலர். காவலர்களைத் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு என்கிறார்கள். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்து வன்முறை என்கிறார்கள். அனைவரும் சிந்திக்க மறுப்பவர்களா? அல்லது உண்மையைப் பேசுவதில்லை என சத்தியம் செய்தவர்களா? செய்தி ஊடகங்கள் அனைத்தும், காட்சி ஊடகங்களானாலும், அச்சு ஊடகங்களானாலும் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு ஏழுபேர் மரணம் என்று தான் தம் வாசகர்களிடம் பூசுகின்றன. காட்சி ஊடகங்கள் இன்னும் சற்று மேலே போய் பேருந்துக்காக காத்திருப்பவர்களை, தாங்கள் நெடுந்தொலைவிலிருந்து வந்து செய்வதறியாது பதைத்து நிற்கிறோம் என்று கூறவைத்து, கலவரத்தின் பாதிப்பாக காட்சிப்படுத்துகிறார்கள். ஆனால், அங்கு நடந்திருப்பது திட்டமிடப்பட்ட போலிமோதல் (என்கவுண்டர்) கொலைகள். வழக்கமான போலிமோதல்களில் குறிப்பிட்ட ஒருவரோ, பலரோ கொல்லப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பார்கள். பரமக்குடியில் குறிப்பாக யார் என்பது முடிவு செய்யப்படவில்லை, அவ்வளவு தான் வித்தியாசம். கடந்த சில ஆண்டுகளாகவே இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்ட நாள் இம்மானுவேல் சேகரன் குருபூஜையாக தேவேந்திரகுல மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற குருபூஜைகள் சாதிவெறிக்கு எதிரான போராட்ட குணத்தை கூர்தீட்டும் என்றோ, ஆதிக்க சாதியினரை கேள்விக்கு உள்ளக்கும் என்றோ கூறிவிட முடியாது. ஒருவகையில் பார்ப்பனிய பண்பாட்டு விழுமியங்களுடன் நடக்கும் இதுபோன்ற குருபூஜைகள் அவர்களை இன்னும் சாதிய அமைப்புகளுக்குள் கண்டுண்டு கிடக்கச் செய்யவே உதவும். என்றாலும், முத்துராமலிங்கத்தின் குருபூஜை அரசு மதிப்புடன், குறிப்பிட்ட நாட்களுக்கு விடுமுறை அறிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் அரசே ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதிவெறிக்கு குறியடையாளமான முத்துராமலிங்கத்தின் குருபூஜையே அந்தப்பகுதி தேவேந்திரகுல மக்களின் பதைப்பையும், பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல் ஆண்டுதோறும் நடந்து கொண்டிருக்க; சாதிவெறி ஆதிக்கத்திற்கு எதிராக போராடி அந்த சாதி வெறியர்களாலேயே கொலையுண்டு போன இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அதே போல் ஏன் கொண்டாடக் கூடாது எனும் எதிர்ப்புணர்ச்சியின் காரணமாகவே இம்மானுவேல் சேகரன் குருபூஜை நடத்தப்படுகிறது. ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றாலே அதற்கு தகுந்த பாதுகாப்பளிப்பது அரசின் வேலை. சாதிவெறியின் அடையாளமான பசும்பொன் குருபூஜைக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் அரசு, குறிப்பாகச் சொன்னால், ஓட்டுப் பொறுக்க உதவும் என்பதால் படம்காட்ட வரும் அத்தனை ஓட்டுப் பொறுக்கி தலைவர்களையும் ஒரே நேரத்தில் வந்தால் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று தனித்தனியாக நேரம் ஒதுக்கிக் கொடுத்து படம் காட்டச் சொல்லும் அரசு, வழிநெடுக தேவேந்திரகுல மீது தேவர் சாதிவெறியர்களின் சீண்டலை கண்டும் காணாமல் இருக்கும் அரசும் காவல் துறையும் ஜான் பாண்டியனை மட்டும் ஏன் கைது செய்து வரவிடாமல் தடுக்க வேண்டும்? சட்டம் ஒழுங்கு பூச்சாண்டி காட்டி இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை தடுத்து நிறுத்த வேண்டும். அதை முத்தராமலிங்கத்தின் குருபூஜைக்கு இணையாக வளரவிடக் கூடாது என்பது தான் தமிழக அரசின் நோக்கமாக இருக்கிறது. அதிமுக தேவர்சாதி ஆதரவுக் கட்சி என்பது அனைவரும் அறிந்தது தான். ஊழலுக்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு ஓபியை முதல்வராக்கியபோது, “நான் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தேவர் சமுதாயம் மீது நான் எவ்வளவு பற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு ஓபியை முதல்வராக்கியதே சான்று” என்று வெளிப்படையாக அறிவித்தார் ஜெயா. ஓட்டுப் பொறுக்கி அரசியல் என்பதைத்தாண்டி சட்டமன்றத்திலேயே தன்னை ’பாப்பாத்தி’ என்று அறிவித்த ஜெயா, இயல்பாகவே ஆதிக்க சாதியின் மீது விருப்பும் தேவேந்திரகுலமக்களின் மீது வெறுப்பும் கொண்டவராகவே தன்னை எப்போதும் வெளிக்காட்டியிருக்கிறார். மட்டுமல்லாது, கடந்த தேர்தலில் தேவர்சாதியின் ஒரு பிரிவினர் திமுகவை ஆதரித்ததும், அவர்களை மீண்டும் அதிமுக வாக்குவங்கியாக தக்கவைத்துக் கொள்ளும் தேவையும் சேர்ந்துகொள்ள, கலவரபயத்தை விதைத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி படிப்படியாக இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை இல்லாமல் செய்துவிட வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த போலிமோதல் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஜான் பாண்டியனை இரண்டு நாள் ஏன் தடுத்து வைத்திருந்தீர்கள்? ஏன் எந்த நீதிமன்றத்திலும் நேர்நிருத்தவில்லை? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இப்போது, பரமக்குடி பகுதியில் ஒரு சிறுவன் சிலரால் கொல்லப்பட்டதற்கு ஆறுதல் தெரிவிக்க ஜான் பாண்டியன் அந்த வீட்டுக்குச் சென்றால் பதட்டம் ஏற்படும் கலவரம் வரும் என்று காரணம் கூறுகிறார்கள். இப்போது மட்டும் என்ன நடந்திருக்கிறது? ஜான் பாண்டியனை கைது செய்தால் சாலை மறியல் உள்ளிட்ட பிரச்சனைகள் எழும் என்று காவல் துறைக்கு தெரியாதா? ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பரமக்குடி பகுதியில் மூவாயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதற்காக சாலை மறியல் செய்ததோ இருநூறு பேர். இவர்களை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஒரு வாரமாக அங்கு காவல்துறை செய்தது என்ன? கூட்டம் கட்டுக்கு அடக்கவில்லை என்றால், எச்சரிக்கப்படும், தடியடி நடத்தப்படும், கண்ணீர்புகை குண்டுகள் வீசப்படும், ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்படும், அதையும் மீறினால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பேரில் கால்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்போதும் கலையவில்லை என்றால் வேறுவழியில்லாமல் மரண நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும். இப்போது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலையவில்லை என்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்கிறார்கள். கொல்லப்பட்ட அனைவரும் மார்பிலும் தலையிலும் குண்டு தாக்கி இறந்திருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். முதலில் அமைதியாக சாலை மறியல் மட்டுமே நடந்திருக்கிறது. என்றால் அதை கலவரமாக மாற்றி துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது யார்? அப்போது காவல் துறை என்ன செய்து கொண்டிருந்தது? மாவட்ட ஆட்சியரிடம் துப்பாக்கிச் சூடு நடத்த முறைப்படி அனுமதி பெறப்படவில்லை என்பதும் தெரிகிறது. மேலே இருக்கும் படம் கற்களை குவித்து வைத்துக் கொண்டு காவல்துறையினர் வாய்ப்புக்கு காத்திருந்ததை தெளிவாகக் காட்டுகிறது. என்றால் இது திட்டமிடப்பட்ட போலிமோதல் கொலைகள் தான் என்பதற்கு இதற்கு மேலும் சான்றுகள் வேண்டுமோ? காஷ்மீரிலும், வடமேற்கு மாநிலங்களிலும் எப்படி மக்களைக் கொல்கிறதோ அதுபோலவே இங்கும் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கூறப்படும் காரணங்கள் வேறு, நடத்தப்பட்ட நாடகங்கள் வேறு. அங்கு அது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இங்கு கலவரத்தை தடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. எங்கும் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக காட்டிக் கொண்டே அரசால் மக்களை கொன்று குவிக்க முடிகிறது, அதுவும் வேறு வழியில்லாமல்தான் நடவடிக்கை எடுக்க நேர்ந்தது என்று காட்டிவிட்டால் போதும், மக்களின் ஆதரவும் கிடைத்துவிடும் என்று தான் அரசுகள் எண்ணுகின்றன. அன்று மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது ஊர்வலம் நடத்தியவர்கள் பெண் காவலாளியை மானபங்கப் படுத்த முயன்றார்கள் என்று கூறப்பட்டது. இன்றும் காவல்துறை உயரதிகாரிகள் காயம்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. தங்கள் மீது கல்லெறி நடந்துவிட்டாலோ, காயம்பட்டுவிட்டாலோ, மக்கள் மந்தைகளைப் போல் சுட்டு வீழ்த்தப்படுவார்கள் என்றால் காவல்துறையை வெறிகொண்ட விலங்குகள் என்று கூறுவது எப்படி தவறாக இருக்க முடியும்? எப்போதுமே பிரச்சனையை திசை திருப்புவதே அதை நீர்த்துப் போகச் செய்வதற்கான உத்தியாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் எந்த ஓட்டுக்கட்சியும் இது குறித்து பேச மறுக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டிருக்கிறது, துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே கலவரத்தை அடக்கியிருக்க முடியும், இழப்பீட்டுத்தொகையை இன்னும் அதிகரித்துத் தரவேண்டும், விசாரணைக் கமிசன் போதாது சிபிஐ விசாரணை வேண்டும். சட்டசபையில் விவாதிக்க வேண்டும், தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் இதுபோன்ற ஓலங்களைத்தான் எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் ஒச்சமிட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மாதகால முடிவில் அல்லது நீட்டப்படும் காலங்களின் முடிவில் விசாரணை அறிக்கை எப்படி இருக்கும் என்பதோ, அதன் பரிந்துரைகளுக்கு அரசு என்ன மதிப்பளிக்கும் என்பதோ யாருக்குமே தெரியாத ஒன்றல்ல. கயர்லாஞ்சிகளும், திண்ணியங்களும், இரட்டைக் குவளைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலம் ஒடுக்கப்பட்டுக் கிடந்தவர்கள் சிறு அளவில் எதிர்ப்பைக் காட்டினாலும் இது தான் நடக்கும் என்று அரசு துப்பாக்கியை உயர்த்திக் காட்டுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை காலம்தான் இந்த ஓட்டுக் கட்சிகளின் ஒட்டப்பட்ட வாலாக இருப்பது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் முடிவு செய்தாக வேண்டிய காலம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக