சனி, 17 செப்டம்பர், 2011

பரமக்குடி கலவரம்?

பரமக்குடி, மதுரை, இராமநாதபுரம் என தொடரும் கலவரங்கள். அங்கும் இங்கும் அலைந்து திரியும் அப்பாவி மக்கள். நினைவு தினத்தை அனுசரிக்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நிற்க்கும் கூட்டங்கள். வீட்டுக்கு உபயோக பொருள்கள் வாங்க, குழந்தைக்கு மருத்துவம் பார்க்க, உறவினர் வீட்டிற்கு என்று வந்த பெண்கள், குழந்தைகள் திரும்பி செல்ல பேருந்து இல்லாமல் அலையும் அவலம். கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டு, அலறி ஓடும் ஆண்களை கண்டு அஞ்சி நடுங்கி சாலையின் ஓரங்களிலும், பேருந்து நிலையங்களின் இடுக்குகளிலும் நுழைந்து மரண பீதியில் கதறும் குடும்பங்கள். கையில் நீண்ட லத்தி, தங்களை பாதுகாத்து கொள்ளும் கவச ஆயுதம், துப்பாக்கி முழக்கம், திரும்பும் திசை எங்கும் காக்கி கும்பல்கள் என ஒரு கனம் நம் கண்முன் கஷ்மீரின் அவலநிலை வந்து சென்றது. என்ன நடக்கிறது என்பதனை யூகிப்பதற்குள் 5 பேரின் உயிர் பலிகொடுக்கப்பட்டுவிட்டது. ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. அப்படி என்ன? நடந்தது பரமக்குடியில். ஒரு இனம் ஆண்டாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்டு, அநியாயதிற்குள்ளாக்கபட்டு, அடக்குமுறைகளுக்குட்பட்டு கிடந்தது. அதிலிருந்து விடுதலை பெற, உரிமைகளை மீட்டெடுக்க வழிதெறியாது விழி பிதுங்கி நிண்ட நேரத்தில். அவர்களுக்காய் குரல் கொடுத்து, உரிமையை பறித்தெடுக்க போராடியவர் இமானுவேல் சேகரன். சுதந்திர போராட்ட தியாகி, இராணுவ வீரன் என தனது இளமை பருவம் தொட்டு போராட்ட களத்தை நோக்கி பயனித்தார் இமானுவேல். இரட்டை குவளை, நாய் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதிக்கும் கூட்டம் மனிதன் தண்ணீர் எடுக்க தடைவிதிப்பதா? என்று ஆதிக்க சக்திகளை எதிர்த்து விவேகத்துடன் போராட்டத்தை தொடங்கினார். 1950-ல் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்” என்று ஆரம்பித்து ஒரு சில வருடங்களுக்குள் தன் சமூக பலத்தை அரசியல் சக்தியாக மாற்றினார். 1957-ல் நடந்த தேர்தலில் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான கடும் உழைப்பினால் தங்கள் இனத்தின் சக்தியை நிரூபித்தார். அதன் பின் பல பிரச்சனைகள், சமரச கூட்டங்கள், சிறைகள் என கழிந்து கொண்டிருந்தன நாட்கள். 5-9-1957 அன்று லாவி என்னும் கிராமத்தில் குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண 10-9-1957 அன்று பணிக்கர் என்னும் உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த இமானுவேல் வருகிறார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்ற போதிலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக அங்கே தங்கிய இமானுவேல் அடுத்த நாள் 11-9-1957 பரமக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின் சுமார் 9 மணி அளவில் தன் சொந்த கிராமத்திற்க்கு புறப்பட்ட இமானுவேல் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அன்று முதல் தங்கள் சமூகத்திற்காக தனது உயிரை கொடுத்த வீரர்களின் பட்டியலில் சேர்ந்து தலித் சமூக மக்கள் மனங்களில் என்றும் மறையா இடத்தை பிடித்தார். இதன் காரணமாக ஒவ்வொரு 9/11 போது இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாள் அமைதியான முறையில் நீண்ட காலம் நடைபெற்று வந்தது குறிப்பிடதக்கது. அதன் பின் சுமார் 4 வருடங்களாக 1000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மரியாதை செய்யும் நிகழ்சியாக உருவெடுத்தது. இதற்கு அரசியல் ரீதியான பல காரணங்கள் மறைந்து கிடக்கின்றன. பொதுவாகவே ஆண்டாண்டு காலமாக தேவர்-பள்ளர் பிரச்சனை வழக்கத்தில் இருந்து வருகிறது. எதேனும் விழாக்கள் நடத்தப்பட்டு மக்கள் அதிகமாக கூடும் காலங்களில் இது கலவரமாக வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படியிருந்தும். தேவர்கள் தங்கள் இனத்தலைவரான் முத்துராமலிங்க தேவர் நினைவாக ஒவ்வொரு அக்டோபர்-2 அன்று தேவர் குருபூஜை என்று விழா எடுப்பதும். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அசிங்கபடுத்துவதும், அவர்களை வம்புக்கிழுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நேரங்களில் காவல் துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்ற போர்வையில் கலவரம் செய்பவர்களை கட்டுப்படுத்தாமல் தலித் மக்கள் வாழும் பகுதிக்குள் போலீஸை குவித்து வழக்கம் போல் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்து செல்ல தடை என பதற்றம் பற்றி கொள்ளும். ஆனாலும் அரசியல் தலைவர்கள் பாகுபடின்றி இப்பூஜையில் கலந்து கொண்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி செல்வர். அதில் ஜெ, ஸ்டாலின், காங்கிரஸ்காரர்கள், விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைவரையும் அங்கு காணலாம். இதற்கு மாற்றமாக தலித் மக்கள் சார்பில் இமானுவேல் சேகரனது நினைவு தினம் விமர்சியாக்கப்பட்டது. ஆனால் தேவர் குரு பூஜைக்கு கொடுத்த முக்கியத்துவமும், அந்தஸ்தும் இமானுவேல் சேகரனது குரு பூஜைக்கு கொடுக்கபடவில்லை. அதை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கண்டுகொள்வது கூட இல்லை. தலித் கட்சி தலைவர்களைத் தவிர. இது அம்மக்கள் மத்தியில் குமைச்சலாக புகைந்து கொண்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் 9/11 குருபூஜைக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பாதுகாப்பு என்கிற போர்வையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிகழ்வில் தமிழக மக்கள் கழக தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிரார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக நினைவிடத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். தீடீர் என ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கூட்டத்தில் கசிந்தவுடன் “தாங்களும் வருவதில்லை வருபவனையும் விடுவதில்லையா?” என்று ஆத்திரம் கொண்ட மக்கள் பரமக்குடியின் முக்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஆதிக்க சக்தியின் கைக்கூலிகளான காக்கிகள் கூட்டத்தை களைக்க தடியடியை தொடங்கியிருக்கிறார்கள். கூட்டத்தை கலைக்கிறோம் என்று ஆரம்பிக்கப்பட்ட தடியடி தான், மறியல் போராட்டம் மிகப்பெரும் கலவரமாக மாற வித்திட்டது. அதன் பின் போலீஸ் வாகனம் எரிப்பு, கல்வீச்சு, அதிகாரிகள் காயம் என அனைத்தும் ஒன்று சேர்ந்து 7 அப்பாவிகளின் உயிர் துப்பாக்கிக்கு இரையாக்கப்பட்டுவிட்டது. பலமுல்ல காவல்துறை கையில் தடி, பாதுகாப்பு கவசம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகணம், கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டு என கலவரத்தை தடுக்க பல வழிகள் இருந்தும் போராடியவர்கள் சிறுபான்மை சமூக மக்கள் ஆதாலால் தனது ஆதிக்க வெறியை தன் கையில் இருந்த துப்பாக்கியின் மூலம் தனித்து இருக்கின்றனர். துப்பாக்கியால் மனித உயிர்களை காவு கொண்டது நிச்சயம் கண்டனத்திற்குரியது. மற்ற சமூகத்தை இழிவுபடுத்துவதற்காகவும், மனித சமூகத்தை பிரிவினைபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த கொண்டாடப்படும் விழாக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. வட நாட்டின் இறக்குமதியான விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்து ஆரத்தியெடுத்து பாதுகாப்பு கொடுக்கும் ஆதிக்க, பார்ர்ப்பன சக்திகள் மற்றும் அதன் கைகூலிகள் அமைதியான முறையில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அனுமதிமறுப்பதும், அதுவே சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்தால் அடக்குமுறைகளை கையாள்வதும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் அமைப்பு சுதந்திர தினத்தை கொண்டாட சட்ட ரீதியான அனைத்து ஒழுங்குகளையும் கடைபிடித்து, அரசிடம் உரியமுறையில் அனுமதி பெற்றிருந்தும் கடைசி தருவாயில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று உப்பு சப்பில்லாத காரணங்களை காட்டி சுதந்திர தின கொண்டாட்டதை தடை செய்தது. அத்துடன் நிகழ்ச்சி நடக்கயிருந்த மேலப்பாளையத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்து பதட்டமான சூழ்நிலை போல் படம் காட்டியது குறிப்பிடதக்கது. தேவர் குரு பூஜையையோ அல்லது விநாயகர் ஊர்வலத்தையோ தடை செய்து பாருங்கள் என்ன நடக்கும் என்று தெரியும். சட்டம் ஒழுங்கு பற்றி புரியும் என்று அவர் கூரிய வரிகளின் எதிரொளியை இன்று நாம் காண்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக