திங்கள், 10 அக்டோபர், 2011

இமானுவேல்சேகரன் பிறந்தநாள் துப்பாக்கிசூடு நடந்த இடத்தில் 5 ஆயிரம் பேர் அஞ்சலி


பரமக்குடி : இமானுவேல்சேகரன் பிறந்ததினமான நேற்று பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல்சேகரன் குருபூஜை நிகழ்ச்சியின் போது திடீர் கலவரம் வெடித்தது. கலவரத்தை அடக்க போலீ சார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். இந்தப் பரபரப்பு அடங்காத நிலையில், இமானுவேல்சேகரன் பிறந்த தின விழா பரமக்குடியில் நேற்று நடந்தது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் அவரது நினைவிடத்தில் இருந்து ஊர்வலமாக துப்பாக்கிச் சூடு நடந்த பரமக்குடி ஐந்து முனை சாலை பகுதிக்கு சென்றனர். அங்கு, துப் பாக்கி சூட்டில் பலியான தீர்ப்புக்கனி, முத்துக்குமார், வெள்ளைச்சாமி, கணேசன், ஜெயபால், பன்னீர்செல்வம் ஆகியோர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.



துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த போலீஸ் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை போலீசார் வாபஸ் பெறவேண்டும்.



இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம், அரசு வேலையும், காயம்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். இமானுவேல்சேகரன் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைளை அரசு நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 2ம் தேதி அனைத்து பிற்பட்ட சமுதாய மக்களையும் சேர்த்து கண்டன பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். 3ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளோம்,‘‘ என்றார்.



போலீஸ் தலையையே காணோம்



5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்த கொண்ட பேரணியில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது,‘‘பேரணி தொடர்பாக யாரும் எங்களிடம் அனுமதி கேட்கவில்லை‘‘ என்றனர். செப்டம்பர் 11ம் தேதி நடந்த கலவரத்திற்கு போலீசார் முறையாக திட்டமிடாததே காரணம் என கூறப்படுகிறது. நேற்று தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த பேரணியால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக