செவ்வாய், 11 அக்டோபர், 2011

இமானுவேல்சேகரன் நினைவு நாள்: நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு





மதுரை, செப். 8:    இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சமூக நிர்வாகிகள் அடங்கிய அமைதிக் குழுவைக் கூட்டித் தேவையான பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.  இது தொடர்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த ஜீவன்குமார் தாக்கல் செய்த மனுவில், இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வருவார்கள். அவர்களது போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதார வசதிகளைச் செய்து தர, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனுவுக்கு, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. காளிராஜ் மகேஸ்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள மருத்துவ வசதி, தீயணைப்பு வண்டி, ஆம்புலன்ஸ், சுகாதார ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகளும் தேவையான அளவுக்குச் செய்து தரப்பட்டு வருகிறது. உணவு வசதியைப் பொறுத்து, கடைகளை மூடுமாறு வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ எந்தவித உத்தரவும் கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை. அது கடை வியாபாரிகளைப் பொறுத்தது.  நினைவு அஞ்சலிக்கு வருவோர் குறிப்பிட்ட பாதைகள் வழியாகச் செல்லவும், சில பாதைகள் வழியாகச் செல்வதை போலீஸôர் கட்டுப்படுத்தியும் வருகின்றனர். சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கவே போலீஸôர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர். சுதாகர், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக நிர்வாகிகள் அடங்கிய அமைதிக் குழுவைக் கூட்டி ஆலோசித்து, தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக