திங்கள், 17 அக்டோபர், 2011

ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு ......

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 11/09/2011 அன்று பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் விழாவில் மூவரைச் சுட்டுக்கொன்றதன் மூலம் மனித ரத்தம் குடிக்க வெறி பிடித்து அலைவதில் இந்திய ராணவத்திற்கும், அமெரிக்க ராணுவத்திற்கும், சிங்கள ராணுவத்திற்கும் நாங்கள் பங்காலிகள் எனக்காட்டியிருக்கிறது தமிழகப்போலீசு.
விழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஏராளமான போலீசை கும்பல் கும்பலாக இறக்கிவிட்டு பரமக்குடி நகரில் அலையவிட்டிருந்தது தமிழக அரசு. மக்களைப் பீதியூட்டுகிற வழக்கமான நடைமுறை என்று அப்போது தோன்றினாலும், ஒரு பயங்கரமான சதிதிட்டத்தை அரங்கேற்றத்தான் இந்தப் போலீசுக் கும்பல் வந்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது.
விழாவிற்கு வந்துகொண்டிருந்த ஜான்பாண்டியனை அவர் வந்தால் கலவரம் ஏற்படும் எனக்காரணம் கூறி காலை 11 மணிக்கு எட்டுக் குடியருகே கைது செய்கிறது போலீசு.  முத்துராமலிங்கம் குருபூசைக்கு வருகிற ஒட்டுக்கட்சித் தலைவர்களையெல்லாம் வப்பாட்டியைப் போல மிகப் பாதுகாப்பாக அணைத்துக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வருகிற போலீசு, ஜான்பாண்டியனை மட்டுக் கலவரம் செய்பவராகக் காட்டி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் துவக்கி வைக்கிறது.
தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தலித் மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.
இதற்கு எதிர்வினையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஆதிக்க சாதிக்கூட்டத்திற்கு பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைது செய்வது, தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைது செய்வது தமிழகப் போலீசின் சாதி வழக்கம்.
7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -இமானுவேல் சேகரன்
ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். பரமக்குடியில் இருக்கிற அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். விடுதலை செய்ய மறுக்கும் போலீசு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சாலைமறியல் செய்கிறார்கள். சாதாரணமாக, ஓட்டுக்கட்சிகள் உள்படப் பலரும் செய்கின்ற அதே சாலைமறியல்தான். ஆனால், இப்போது அதை ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதைப்போல மாற்ற முயலும் முயற்சியாகத் தனது வேட்டையைத் தொடங்கியது. காட்டடி, மாட்டடி என்று சொல்வார்களே அப்படிப்பட்ட  போலீசின் வழக்கமான காட்டுமிராண்டித்தனமான அடியை அடிக்க ஆரம்பிக்கிறது. இன்னோரு வகையில் சொல்லப்போனால் வெறிகொண்ட தெருநாய்கள் பாய்ந்து பிறாண்டிக் கடித்துக் குதறுமே அதைபோல அ(க)டிக்கத் துவங்கியது. சிதறி ஓடுகிறார்கள் மக்கள். விரட்டி விரட்டியடிக்கிறது போலீசு.      கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் திமுககாரர்களையோ, ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் அதிமுககாரர்களையோ என்றாவது தமிழகப்போலீசு விழுந்து பிறாண்டியிருக்குமா? இல்லை தேவர் சிலையில் காக்கா கக்கா போனதற்காக சாலை மறியல் செய்யும் தேவர் சாதி வெறியர்களை என்றாவது தாக்கியிருக்கிறார்களா? தலித்துக்கள் சாலை மறியல் செய்தால் மட்டும் அது பயங்கரவாத நடவடிக்கையா?
அடிதாங்க முடியாமல் சில இளைஞர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்த போலீசு அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து சாலையில் போட்டு அடித்துத் துவைக்கிறது. இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.
பிறகு அங்கிருந்து திரும்புகிறார்கள், சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசாகிய நாங்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கான உத்தரவோடு வந்தார்கள். சுட்டார்கள். பொதுமக்களில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான காயங்களோடு இரண்டுபேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழுபேர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்டவர்கள் யாரென்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. சுடப்பட்டவர்களின் உடல்கள் ஐந்துமுனை ரோட்டிலேயே கிடக்க போலீசு மீண்டும் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டிக்கொண்டு ஒடியது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்போதும் போலீசு சுடுகிறது. மதுரை ராமநாதபுரம் ரோட்டில், நடுச்சாலையில் நின்றுகொண்டு ஓடுகின்ற மக்களை நோக்கிக் குறிவைத்துச்சுடுகிறது போலீசு.
ஒரு போர்க்களத்தை நினைவூட்டுகிறது அந்தக்காட்சி.
ஏற்கனவே சாதி வெறியூட்டப்பட்ட ரெளடிக் கும்பலாக வளர்க்கப்பட்டிருக்கிற போலீசு, ஒரு பக்கா பாசிஸ்ட்டான, சாதித்திமிரின் மொத்த உருவமான, பார்ப்பன ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்தோடு தங்களின் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவே சுடுகிறது. மேலும் பாசிச ஜெயா பதவிக்கு வந்த உடன் போலீசுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கி அவர்களை குளிப்பாட்டி பலமுறை பேசியிருக்கிறார். இப்படி ஜெயாவால் அதிகார போதை வெறியேறிய போலீசு இப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. எல்லாம் அம்மா கொடுத்திருக்கும் அதிகாரம் என்பது போல நடந்திருக்கிறது.
முத்துராமலிங்கம் குருபூசையின் போது அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளின் போது எந்த ஓட்டுக்கட்சித் தலைவனும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதைப்பற்றிக்கூடச் சிந்திக்காமல் அந்த ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித் இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் படங்களைத் தாங்களே பிளக்ஸ் பேனர்களில் போட்டுக்கொண்டு அவர்களும் இந்த விழாவிலே கலந்துகொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.
இதோ, திட்டமிட்டே, ஜெயாவின் ஆசிகளோடு,  துப்பாக்கியால் சுட்டு 4 பேரைக்கொலை செய்திருக்கிறது போலீசு. ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியினால் சுட்டு இருவரைக் கொன்றிருக்கிறார். மதுரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே என்ன எழுதப்போகிறார்கள்? கலவரம் செய்தார்கள், அதை அடக்கப்போன போலீசாரைத் தாக்கினார்கள், கலவரத்தை அடக்க போலீசார் சுட்டனர் என்றுதான் எழுதப்போகிறார்கள்.
“இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள். பரப்புவார்கள். கலவரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களது அகராதியில் போலீசு எப்போதுமே கலவரம் செய்யாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்களோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கைக் கெடுத்தது போலீசுதான் எனச்சொல்லமாட்டார்கள்.
இந்த துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயை வீசியிருக்கும் பாசிச ஜெயா யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். வன்முறையில் ஈடுபட்டது ஜெயாவில் காவல் நாய்களான தமிழக போலீசு. வன்முறைக்கு பலியானது தலித் மக்கள். எனில் ஜெயாவின் வேண்டுகோளுக்கு என்ன பொருள்?   இனி இந்த ‘கலவர’ வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கான தலித்துக்கள் மீது பொய் வழக்கு போடப்படும். அவர்கள் இனி வரும் ஆண்டுகள் முழுவதும் வழக்கு, வாய்தா, சிறை என்று அலைய வேண்டும். இது கொடியங்குளம் ‘கலவரம்’ போதே நடந்திருக்கிறது. அந்த வழக்குகளுக்காக பல கிராம தலித் மக்கள் இன்றும் நீதிமன்றங்களுக்கு அலைகிறார்கள். சுட்டுகொன்றது போதாது என்று இப்படி நீதிமன்றங்கள் மூலமும் சித்திரவதை செய்கிறார்கள்.
ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது. எல்லாத்துறைகளிலும் ஆதிக்கசாதி உணர்வுதான் வெளிப்படுகிறது. அதுதான் இப்போது ஆறு பேரைப் பழிவாங்கியிருக்கிறது. இனியும் இது அதிகரிக்கவே செய்யும். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.
இப்போது பாசிச ஜெயா போலீசை வைத்து செய்திருக்கும் இந்தக் கொலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சே.கு தமிழரசன் போன்ற விலை போன தலித் அமைப்புத் தலைவர்கள் வக்காலத்து வாங்குவார்கள். இத்தகைய பிழைப்புவாதிகளையும் தலித் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பதும் ஜெயாவின் ஆட்சிக்காலங்களில் அது இரட்டிப்பாகிறது என்பதும், ஒட்டுக்கட்சிகள் இதை எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் போலீசிலும் ஓட்டுக் கட்சிகளிலும் இனியும் நாம் இருக்கமுடியுமா என தலித்துகள் உடனடியாக முடிவு செய்யவேண்டும். வெளியேற வேண்டும். உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக