திங்கள், 17 அக்டோபர், 2011

தேவர் அல்ல அசுரர்.....


பரமக்குடி படுகொலைகளை முன்வைத்து இணையத்தில் நடைபெறும் விவாதங்களில் கீழ்கண்ட கேள்விகளும் கவலைகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன.
‘தெய்வத் திருமகன் என்று தேவர் அழைக்கப்படும்போது, கொண்டாடப்படும்போது ஏன் அநாவசியமாக இம்மானுவேல் சேகரனுக்கும் அதே பெயரை வைக்கவேண்டும்? எதற்காக இம்மானுவேலுக்குக் குரு பூஜை செய்யவேண்டும்? எதற்காக தேவர்களை அநாவசியமாக உசுப்பேத்தி தூண்டிவிடவேண்டும்? இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்துவதுதான் நோக்கம் என்றால் அமைதியாகச் செல்லவேண்டியதுதானே? போயும் போயும் ஜான் பாண்டியன் போன்ற ஒரு ரவுடியின் கீழ்தான் தலித்துகள் திரளவேண்டுமா?’
‘பரமக்குடிக்கு எதற்கு எல்லாரும் படையெடுத்துச் செல்லவேண்டும்? அவரவர் வீட்டிலேயே அமைதியாக இம்மானுவேல் நினைவைப் போற்றியிருக்கலாமே? முத்துராமலிங்கத் தேவர் இன்று கடவுளாகக் கட்டமைக்கப்பட்டடிருக்கிறார் என்னும்போது எதற்காக அவரைப் பற்றி தலித்துகள் இழிவாகப் பேசவேண்டும்?’
‘கொல்லப்பட்டவர்களைத் தலித் என்று அழைப்பதே தவறு. அவர்கள் தங்களை தேவேந்திரக் குல வேளாளர்கள் என்றே அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். தலித், தலித் என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் தேவையின்றி ரணம் கிளறப்படுகிறது.’
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக நேரிடும் பெண்கள் பற்றியும் இப்படிப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ‘அநாவசியமாக ஆண்களைத் தூண்டிவிடுகிறார்கள்’. ‘அடக்கமாக இருப்பதில்லை. பெண் என்பதையே மறந்துவிடுகிறார்கள்.’ ‘அவரவர் வீட்டிலேயே இருந்திருந்தால் பிரச்னை இருக்குமா?’ ‘பெண்களுக்கான ஆடைகளை அணியாமல் ஆண்களைப் போல் இருக்க ஆசைப்படுகிறார்கள். தகுதி, தராதரம் இல்லை.’ ‘சம்பந்தப்பட்ட பெண்ணின் நடத்தையே சரியில்லை என்று சொல்கிறார்களே?’
தவறிழைப்பவர்களும் அவர்களுக்குத் துணை போகிறவர்களும் தங்களைத் தற்காத்துக்கொள்ள பயன்படுத்தும் ஆயுதம் இது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக மாற்றுவது. குற்றம் நடைபெற்றதற்குக் காரணமே அவர்கள்தான் என்று திரிப்பது. அவர்களுடைய குறைகளை, போதாமைகளை, தடுமாற்றங்களைப் பெரிதுபடுத்திக் காட்டி, அவர்களைச் சிறுமைப்படுத்துவது. இப்படிப்பட்டவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதில் தவறில்லை என்னும் கருத்தை பொதுப்புத்தியில் பரப்பிவிடுவது. எனவேதான் கொன்றவர்களை விடுத்து, கொல்லப்பட்டவர்களின் சமூகத்தை நோக்கி இத்தனை குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
தேவர்களின் சாதி வெறி ஊர் உலகம் அறிந்தது. இணையத்திலும்கூட அவர்கள் கிட்டத்தட்ட ஒரு நாஜிப்படையைப் போல் இயங்கிக்கொண்டிருப்பதையும் கண்டுபிடித்துவிடலாம். ‘ஒரு தலித் நாய் செத்தது’ என்று சியர்ஸ் சொல்லி கொண்டாடும் ஃபேஸ்புக் உரையாடல்களை இணையத்தில் காணலாம். முத்துராமலிங்கத் தேவரை ஒரு தேசியவாதியாகவும், இறை பக்தனாகவும், உத்தமனாகவும், கடவுளாகவும் உயர்த்திப் பிடிப்பவர்கள் இவர்கள். தெய்வத் திருமகள் என்று திரைப்படத்துக்குப் பெயர் வைத்தபோது கலாட்டா செய்த செயல்வீரர்கள். தெய்வத் திருமகன் என்றால் பசும்பொன் தேவர் மட்டுமே. அவரை எதிர்த்து ஒரு குரல் ஒலித்தாலும் ஒரு சொல் உச்சரிக்கப்பட்டாலும் வன்மத்துடன் பாய்ந்து வருபவர்கள் இவர்கள்.
சாதிய ஆதிக்கம் என்பதையும் தாண்டி, சர்வ வல்லமை படைத்த ஒரு பாசிச சக்தியாக தேவர்கள் உருமாறிக்கொண்டிருப்பதையே பரமக்குடி படுகொலைகள் நிரூபிக்கின்றன. முதுகளத்தூர் கலவரம் தொடங்கி பரமக்குடி படுகொலை வரை ஒரு தொடர்ச்சி இருப்பதைக் கவனித்தாலே இதனைப் புரிந்துகொள்ளமுடியும். அரசியல்வாதிகளின் பலத்தையும் ஆயுத பலத்தையும் நம்பி வளர்ந்தவர்கள் இவர்கள். பரமக்குடியில் இந்த இரண்டும் ஒன்றிணைந்து வினை புரிந்திருக்கின்றன.
முத்துராமலிங்கத் தேவர் ஆதிக்க தேவர் சாதியின் அடையாளம் என்றால், இம்மானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தினரின் அடையாளம். நடைபெறுவது ஆதிக்கச் சாதியினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையிலான போராட்டம் என்னும் நிலையில், முத்துராமலிங்கத் தேவர் என்னும் அடையாளத்துக்கு எதிராக இம்மானுவேல் சேகரன் என்னும் அடையாளத்தை தலித் மக்கள் உயர்த்திப் பிடிக்கும்போது தேவர்களை ஆத்திரமடைகிறார்கள். இம்மானுவேல் என்னும் போர்க்குணம் மிக்க அடையாளத்தை தேவர்கள் வெறுக்கிறார்கள். அந்த அடையாளத்தை அழிக்கவும் அகற்றவும் விரும்புகிறார்கள்.
அம்பேத்கர் தமிழகம் முழுவதும் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதையும், முத்துராமலிங்கத் தேவர் கம்பீரமாக மாலை, மரியாதையுடன் காட்சியளிப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இங்கே ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதும் அடிமைத்தளத்தில் இருந்து விடுபட போராடுபவர்கள் யார் என்பதும் தெரியும். வன்முறையாளர்கள் யார் என்பதும், வன்முறைக்குப் பலியாகிக்கொண்டிருப்பவர்கள் யார் என்பதும் தெரியும்.
‘பரமக்குடி படுகொலையை நிகழ்த்தியவர்கள் தேவர்கள் அல்லர், காவல்துறையினர். அவர்களில் சிலர் தலித்துகளாகவும் இருக்கிறார்கள் அல்லது இருக்கலாம். இந்நிலையில் எதற்காக தேவர்களைக் கண்டிக்கவேண்டும்?’ ஏனென்றால், அரசு எப்போதுமே ஆதிக்கச் சாதியினரின் கருவியாகவே செயல்பட்டு வருகிறது. அதன் இயல்பு அப்படி. அந்த வகையில், பார்ப்பனர்களின் கருத்தாக்கம் எப்படி மேலானதாக மாறுகிறதோ அப்படியே தேவர்களின் கருத்தாக்கமும் மேலானதாக மாறிவிடுகிறது. ஆதிக்கச் சாதியினர் தங்கள் காரியத்தை அரசின் துணைகொண்டு சாதித்துக்கொண்டுவிடுகிறார்கள்.
எனவேதான், தலித்துகள் ‘வன்முறையாளர்களாக’ ஊடகங்களில் வலம் வருகிறார்கள். அவர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் ‘கலவரம்’ நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தலித்துகள் மேற்கொள்ளும் ‘தாக்குல்களைத்’ தடுத்து நிறுத்த துப்பாக்கிச் சூடு நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் காவல்துறையினருக்கு ஏற்படுகிறது.
பரமக்குடி படுகொலைகளைப் பொறுத்தவரை காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தேவர்களின் பாசிசத்தையும் சேர்த்தே கண்டிக்கவேண்டியிருக்கிறது. இரண்டையும் ஒருசேர எதிர்த்தே போர்க்கொடி உயர்த்தவேண்டியிருக்கிறது. தேவர்கள் மட்டுமல்ல, ஆதிக்கச் சாதியினர் அனைவருக்கும் இது பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக