திங்கள், 17 அக்டோபர், 2011

பரமக்குடி படுகொலை – ஜெயலலிதா அரசின் தமிழர் விரோதம்: இளம்பரிதி

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் மீதான அரசு வன்முறை படுகொலைகளுக்குப் பிறகு, வீரியம் பெறத் தொடங்கியது இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்வு. அவரின் 50 ஆம் நினைவாண்டு நிகழ்ச்சி நிரலின் அடர்த்தியோ “தேவர்’சாதியினரின் வன்மத்தை ஊதிப் பெருக்கியது. முதுகுளத்தூர் வட்டார “ஆப்ப நாடு மறவர் சங்க’த்தின் பெயரில் சுற்றறிக்கை ஒன்று, இப்பகுதி வாழ் மறவர் கிராமங்களுக்கு சில மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்டதாகவும் அதில், “நம் தெய்வீகத் திருமகனுக்கு நிகராக, இம்மானுவேலின் நினைவு நாள் வளர்ந்து வருகிறது. அரசு விழாவாக அது அறிவிக்கப்படும் முன்னர், அதை அச்சமூட்டும் நிகழ்வாக மாற்றிவிட வேண்டும்.” என கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. இச்செய்தி உறுதி செய்யப்பட்டதாகவே இருப்பினும், கடந்த நான்கு வருடங்களாக இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை சீர்குலைக்க, சாதி இந்து மறவர்கள் இப்பகுதியில் திட்டமிட்டு வருகின்றனர் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியும்.
2008, அக்டோபர் 29 அன்று, முதுகுளத்தூர் அருகிலுள்ள வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியர் வின்சென்ட் (வயது 34) படுகொலை. 2009, செப்டம்பர் 9 அன்று, அதே வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் அறிவழகன் – வயது 30 (வின்சென்ட்டின் மைத்துனர்) படுகொலை. 2010, ஆகஸ்ட் 29 அன்று, திருப்புவனம் அருகிலுள்ள கொந்தகை எனும் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 19) படுகொலை என சமூகப் பதற்றத்தை உருவாக்க, சாதிவெறி மறவர்கள் தொடர்ந்து இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளையொட்டி படுகொலைகளைச் செய்து வந்தனர். ஆனால், கலவரச் சூழலை உருவாக்கும் அவர்களது கனவு ஈடேறவில்லை.
“பசும்பொன்’ முத்துராமலிங்கத்தின் “தெய்வீகத் திருமகளாக’ “தேவர்’ சாதியினரால் கொண்டாடப்படும் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள தருணத்தில், 2011 செப்டம்பர் 9 அன்று, ராமநாதபுரம் மாவட்டம் பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகனும் ஆனைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவனுமாகிய பழனிக்குமார் (வயது 16) முத்துராமலிங்கபுரம் என்ற கிராமத்தில் நடைபெற்ற நாடகத்தைப் பார்த்துவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதைக் கண்டித்து, மள்ளர் சமூகத்தினர் கிளர்ந்தெழுவர்; கலவரம் பரவும், அதைக் காரணமாக்கி, இம்மானுவேல் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்தி விடலாம் என சாதி இந்து மறவர்கள் திட்டமிட்டனர். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. இருந்தும், பதற்றம் ஏற்படும் எனக் காரணம் கூறி, நினைவேந்தல் நிகழ்வில் நீண்டநாள் சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலையாகியிருக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜான்பாண்டியன் கலந்து கொள்ள தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடை விதித்தது.
ஆனால், 11.9.2011 அன்று ஜான்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் தடையை மீறி புறப்பட்டபோது, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்யப்பட்டு, அருகிலுள்ள காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மய்யத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார். இதைக் கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள் சுமார் 500 பேர் பரமக்குடி அய்ந்து முனை சந்திப்பில் பிற்பகல் 12.30 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஜான் பாண்டியனை விடுதலை செய்யக் கோரி, அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த மறியலைக் கைவிட, காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை அடையாறு காவல்துறை துணை ஆøணயராகப் பணியிலிருந்த செந்தில்வேலனுக்கும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில்தான் வாக்குவாதம் முற்றியதாகக் கூறப்படுகிறது. இவர், தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, ஆயிரக்கணக்கில் நகர்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்திலிருந்து யாரோ கல்வீசியிருக்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட காவல் துறை மறியல் செய்தவர்கள் மீது தடியடிப் பிரயோகம் நடத்தியது. அதிரடிப்படை காவல் பிரிவில் பணியாற்றும் இளைய வயதுடைய சிலர் சீருடை அணியாமல் கூட்டத்தில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தனர் என, சந்தேகத்தின் ஒரு புள்ளியை சம்பவ இடத்திலிருந்த ஒருவர் கூறுகிறார். சீருடை அணியாத உளவுப் பிரிவு காவல் துறையினர் சந்தேகிக்க இடமில்லாத வகையில்தான் இருப்பர். அதனால், அவர்கள் உளவுத்துறையினரும் அல்லர். ஆயிரக்கணக்கில் நகர்ந்து கொண்டிருந்த மக்களும் மறியலில் ஈடுபட்டிருந்த சிலநூறு பேர்களும் ஒரே சமூகத்தினரே எனும் போது, உணர்வு பூர்வமான ஒரு நிகழ்வை சீர்குலைக்கும் நோக்கில், அந்த முதல் கல்லை எறிந்த நபர் யாராக இருக்க முடியும்?
மறியல் செய்த சில நூறு நபர்களை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். அடி வாங்கும் மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என்று கணித்த காவல் பட்டாளம், திருப்பி அடித்தே பழக்கப்பட்ட அம்மக்களை எதிர்கொள்ளத் திணறியது. கைகளில் கிடைத்த கற்களாலும் தடிகளாலும் மட்டுமே, காவல் பட்டாளத்தை விரட்டியடிக்கத் துணிந்தனர். அவர்கள் தரித்திருப்பவை கனரக ஆயுதங்கள் என்பதை உணர்ச்சிபூர்வமான அம்மக்கள் உணரத் தவறிவிட்டனர்.
இச்சூழலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காவல்துறையினரின் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்திருக்கின்றன. இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு வரும் வாகனங்கள் பரமக்குடி நகரின் எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டுவிடும். காவல் உயர் அதிகாரிகள், மிக முக்கிய நபர்கள் மட்டுமே சிறப்பு அனுமதியின் பேரில் வாகனங்களில் வர இயலும். அதே போல, மதுரையிலிருந்து ராமேசுவரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கும். மேலும், பரமக்குடி நகர எல்லைக்குள் சிறு பெட்டிக் கடை கூட திறந்திருக்க அனுமதியில்லை. இத்தகைய வாய்ப்புகளின் நடுவில் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைக்க, ஒரு தீக்குச்சி மட்டும் போதுமா? தமது சொந்த மக்களின் கொண்டாட்டத்திற்கு நெருப்பு வைக்கும் முட்டாள்களோ, இழி பிறவிகளோ அல்லர் அம்மக்கள். நெருப்பு வைத்தவர்கள் யார்? கட்டுச் சோறு பொட்டலங்களோடும், காலி வயிறுகளோடும், மலர் மாலைகளோடும் லட்சக்கணக்கில் அணி திரளும் மக்கள், தமக்குத் தாமே வெடிவைத்துக் கொள்ள பெட்ரோல் குண்டுகளையும் கொண்டுவருவார்களா என்ன?
“தேவர்’ சாதி ஆதிக்கவாதிகளின் பிரதிநிதியான சசிகலா மற்றும் சாதி இந்துக்களின் படையணியை வழிநடத்தும் பார்ப்பன முகமான ஜெயலலிதாவும் ஆட்சியதிகாரத்திற்கு வந்திருக்கும் நிலையில், நிகழ்ந்திருக்கும் இப்படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டவை. நீண்ட காலமாக வன்முறை முத்திரை குத்தப்பட்டிருக்கும் மள்ளர் சமூக மக்களின் போராட்ட உணர்வையும் இம்மானுவேல் சேகரனுக்குப் பிறகு, அம்மக்களுக்குத் தலைமையேற்ற ஜான்பாண்டியனையும் முன்னிலைப்படுத்துவதன் மூலம், தமது படுகொலை திட்டங்களை நியாயப்படுத்திவிடலாம் என, பார்ப்பன – சாதி இந்து அரசதிகாரம் கருதுகிறது.
ஜான்பாண்டியன் நிகழ்விடத்திற்கு வர அனுமதிக்கப்படாத நிலையில், அதிலும் காவல் துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகு, கலவரத்தைத் தூண்டியதில் அவரின் பங்கு என்னவாக இருக்க முடியும். “சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற வன்செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என ஜெயலலிதா சட்டப்பேரவையில் பதிவு செய்திருப்பது, எவ்வகையிலும் நியாயமற்றது என்பதை பொது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், “அந்த கிராமத்தில் ஒரு சுவரில் “பசும்பொன்’ முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமாரின் கொலை நடந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து தான் ஜான்பாண்டியன் அங்கே “படையெடுத்து’ புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்த கலவரங்கள் எல்லாம் நடைபெற்று இருக்கின்றன. ஆகவே, ஒரு சங்கிலித் தொடர்போல இந்த நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன. இத்தகைய சம்பவங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காகத்தான், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எங்கள் அரசு எடுத்து வருகிறது” என்கிறார் ஜெயலலிதா. எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஒரு பள்ளி மாணவரின் படுகொலையை நியாயப்படுத்தும் விதமாகவும் ஜான்பாண்டியனைத் தொடர்புபடுத்தி, காவல் துறையின் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளுக்குக் காரணங்களை கற்பிக்கும் விதமாகவும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதில், அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சரே ஈடுபடுவதை என்னவென்று சொல்வது? “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் முன்கூட்டியே எடுத்திருக்கலாம்” என தூபம் போடும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இன அழிப்புப் போர்ச் சூழலில் பூசிக்கொண்ட கரி போதாது என்று நினைக்கிறாரோ?
‘காவல் துறையின் வாகனங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கும் முன்னரே, கண்ணீர்ப்புகை குண்டுகளை காவல் துறையினர் வீசத் தொடங்கிவிட்டனர். சில மணித் துளிகளிலேயே துப்பாக்கியால் சுடவும் தொடங்கினர். ஜெயலலிதாவின் நேரடி அனுமதி பெற்றே, இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று குற்றம் சாட்டுகின்றனர், இந்நிகழ்வை நேரில் அவதானித்த சிலரும் பாதிக்கப்பட்ட மக்களும். கூட்டத்தைக் கலைக்க, வானத்தில் சுட்டு எச்சரிக்கை விடுவதோ கால்களில் சுட்டு அச்சமூட்டுவதோ அல்லாமல், தலையிலும் மார்பிலும் வயிற்றுப் பகுதியிலும் நேரடியாகச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். துப்பாக்கி சூட்டிற்கு மாவட்ட ஆட்சியரோ, காவல்துறை மண்டலத் தலைவரோ அனுமதி அளித்திருந்தால் இத்தனை துணிச்சலாக காவல் பட்டாளம் செயல்பட்டிருக்க முடியாது.
ஆகவே, நேரடிக் குற்றச்சாட்டுக்குரியவராக மாநில முதலமைச்சரே இருக்கிறார். தன்னுடைய “போலிஸ் ராஜ்ஜியத்திற்கு’ எதிராக, தானே நியமித்துக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் செய்யப்போவது ஒன்றுமில்லை. அதன்மீது நம்பிக்கை வைப்பது, “மோசடி நாடகம்’ ஒன்றைக் காண காத்திருப்பது போலத்தான். தமிழகத்தில் நியமிக்கப்பட்ட, போராடும் மக்களுக்கு எதிரான அனைத்து விசாரணை ஆணையங்களும் அரசுக்கு ஆதரவானவையே என்பதற்கு ஆய்வுகள் தேவையில்லை.
காவல் பட்டாளத்தின் குண்டடிபட்டு நிகழிடத்திலேயே மாண்டு போனவர்கள், படுகாயம் அடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் என எந்தப் புள்ளிவிவரமும் வெளிவந்து விடாமல் பார்த்துக் கொள்கிறது அரசு. ஊடகங்களும் ஜெயலலிதா அரசின் பச்சைப் படுகொலைக்குத் துணைபோகும் விதத்தில் மவுனம் காக்கின்றன. குண்டடிபட்டு வீழ்ந்தவர்களின் மீதும் உயிருடன் பிடிபட்டவர்களின் மீதும், ஆதிக்க சாதி – அரசதிகார வெறியூட்டப்பட்டிருக்கும் காவல் மிருகங்கள் துப்பாக்கிகளின் பின்புறக் கட்டையால் மென்மேலும் தாக்கியுள்ளனர். அதில் அரைகுறை உயிருடன் இருந்தவர்கள் இறந்துபோக, ஏனையோர் குறை உயிருடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். தங்கள் வாகனங்களில் தூக்கி வந்த காயம்பட்டவர்களை மருத்துவமனையின் தரைகளில் வீசிச் சென்றிருக்கின்றனர் காக்கியுடை கயவர்கள் அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சையும் முதலுதவியும் கூட செய்யப்படவில்லை. இதுவும் கூட “அரச’ கட்டளையாக இருக்கலாம்.
யாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால், இறந்து போனவர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைப்பதற்காக, முறையாக ஓரிடத்தில் மருத்துவம் செய்ய அனுமதிக்காமல் அவர்களை, பரமக்குடி – இளையாங்குடி – மதுரை – அருப்புக்கோட்டை – ராமநாதபுரம் என பல மருத்துவமனைகளுக்கும் “சடப்பொருள்கள்’ போல, பிரித்து அனுப்பி, அலைக்கழித்து வருகின்றனர். பரமக்குடியைத் தொடர்ந்து மதுரையிலும் மறியலில் ஈடுபட்டவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிவகங்கை மாவட்டம் கொந்தகை அருகே உள்ள பாட்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்த “இருவர் லேசான காயம் அடைந்தனர்” என ஜெயலலிதாவும் ஊடகங்களும் ஊதினர். ஆனால், அவ்விடத்தில் குண்டுக்காயம் அடைந்தவர்கள் ஏழுபேர் என்றும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார் என்றும் நமக்கு ஆதாரப்பூர்வ தகவல் இருக்கிறது. காயமடைந்தவர்கள் ஒருவரோடு மற்றவர் தகவல் பரிமாறிக் கொள்வதைக் காவல்துறை தடுத்து வந்தாலும், அவர்களில் பலரை சந்தித்து கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் வழியே இறந்து போனவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் மேல் என்பதை உறுதிப்படுத்துகிறோம். அரசு நீண்டநாள் இதை மூடி மறைத்து விட முடியாது. உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரத்தான் போகின்றன. மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் 18 பேரும், பரமக்குடியில் 4 பேரும், ராமநாதபுரத்தில் இருவரும், அருப்புக்கோட்டையில் இருவரும் என நமக்குத் கிடைத்த வரையில், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை முப்பதைத் தாண்டியும் சிறு அளவில் காயமுற்று வெளிநோயாளிகளாக இருப்பவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் எனவும் அறிய முடிகிறது. இறந்துபோன இன்னும் சிலரின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து, விபத்தில் இறந்து விட்டதாகப் பதிவு செய்வதும் “போலிஸ் ராஜ்ஜிய’ அரசின் திட்டமாக இருக்கிறது.
இத்தனையும் போதாதென்று, ராமநாதபுரம் மாவட்டத்தை, இந்தியக் குற்றவியல் சட்டம் 144 ன் கீழ் கடந்த செப்டம்பர் 11 இரவு முதல் வைத்திருக்கும் தமிழக அரசு, இம்மாவட்டத்தில் மள்ளர் சமூகத்தினர் வாழும் கிராமங்களிலெல்லாம் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2000 பேர் மீது வழக்குகள் புனையப்பட்டு, ஒட்டுமொத்த சமூகத்தையும் முடக்கிப்போட திட்டமிட்டுள்ளது ஜெயலலிதா அரசு. 13.9.2011 அன்று இரவு ராமநாதபுரம் அருகிலுள்ள தொருவளூர் என்ற கிராமத்தில் தேடுதல் வேட்டைக்குச் சென்ற காவல் படையின் அடக்குமுறைக்குப் பயந்து, வயற்காட்டிற்குள் ஓடி ஒளியச் சென்ற வேலு (வயது 45) என்பவர் தடுக்கி விழுந்து, அடிபட்டு இறந்து போயிருக்கிறார். சத்திரக்குடி அருகிலுள்ள களக்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தேடுதல் வேட்டைக்குப் பயந்து முள்காட்டில் ஒளிந்திருந்த போது 14.9.2011 அன்று, பாம்பு கடித்து இறந்து போயிருக்கிறார். இன்னும் பல கிராமங்களில் ஆண்கள் அனைவரும் இரவு நேரத்தில் வீடுகளில் இருக்க இயலாமல், வயல்காட்டிலும் முள் புதர்களிலும் ஒளிந்து கொண்டிருக்கும் அசாதாரணமான சூழலை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிவாரணம் என உயிருக்கு விலைபேசி முடித்துள்ளது ஜெயலலிதா அரசு. ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மலிவானது தானே என மவுனம் காக்கிறது தமிழ்ச் சமூகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக