புதன், 19 அக்டோபர், 2011

நாம் தமிழராய் இருப்போம், .நாம் சாதி தமிழர் சீமானுடன் அல்ல.


சீமான்
சீமான்
அண்ணன்: சீமான்.
முக்கிய தலைவர்: பிரபாகரன்.
உதிரி தலைவர்கள்: முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர், இன்னும் சிலர்.
முன்னாள் தலைவர்: பெரியார்.
முன்னாள் தோழர்கள்: ‘பெரியார் தி.க’வினர், NRIக்கள் .
இந்நாள் தோழர்கள்: NRIக்கள் மட்டும்.
முக்கிய எதிரி: ராஜபக்சே.
உதிரி எதிரிகள்: கலைஞர், வீரமணி (இவர்கள் முக்கிய எதிரிகளாய் மாறும் நாள் வந்துகொண்டேயிருக்கிறது!). தம்பிகள்: குழம்பிய நிலையில் தமிழ் இளைஞர்கள் சிலர். இதுதான் நாம் தமிழர் இயக்கம்!!
வெகுநாளாய் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டேயிருந்த எனக்கு, இனியும் எழுதாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தால் பைத்தியம் பிடித்துவிடுமென தோன்றியதன் காரணமே இந்தக் கட்டுரை. அதிமுக்கிய காரணம் கட்டுரையின் முடிவில்.
தமிழகத்தில் ஈழப் போராட்டப் படகை செலுத்த யாருமே இல்லாமல், ஈழ ஆதரவாளர்கள் தத்தளித்த நிலையில் படகை செலுத்த உரிமம் இல்லாவிடினும், நான் இருக்கிறேன் என வெகுண்டெழுந்த சீமானைப் பார்த்து புல்லரித்துப்போய், அவரின் பேச்சைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போய், “கடைசியாய் தமிழனுக்கு கிடைத்தே விட்டானடா ஒரு தலைவன்!” என ஆர்ப்பரித்த, அகமகிழ்ந்த இளைஞர்களில் நானும் ஒருவன்!!! அந்த புல்லரிப்பில் சில விஷயங்களை நாங்கள் மறந்தோம் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டோம்.
சினிமாவில் இருக்கும் சீமானுக்கு ஏன் இந்த திடீர் தமிழர் பற்று, ஈழப் பாசம்? அவர் முதல் படம் ‘தம்பி’ கிடையாதே, பின் எதற்காக ‘தம்பி’ போன்ற படங்களை எடுப்பதற்காகவே சினிமா துறைக்கு வந்ததைப்போல் பேசுகிறார்? பா.ம.கவின் விசுவாசியாக இருந்தாரே திடீரென ஏன் ஒதுங்கிவிட்டார். இப்படி சில கேள்விகள். ஆனால் ஈழம்வரை ஓங்கி, ஈழத்திற்காக ஒலித்த சீமானின் சிம்மக்குரல் எங்களை கட்டிப் போட்டது, கேள்விகளை மறக்க வைத்தது, தொலைக்காட்சியில் பார்க்க வைத்து, அழவும் வைத்தது. ஆனால் சீமானின் பேச்சுக்களும், செயல்களும் முரண்பாடுகளின் முடிச்சுக்களில் மூழ்கிப் போயுள்ள இந்நிலையில், ஈழத்தை சற்று இப்போதைக்கு தள்ளி வைப்போம். ஏனெனில் சீமான் அண்ணனின் இயக்கம் “நாம் ஈழத்தமிழர் இயக்கம்” அல்ல, தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட “நாம் தமிழர் இயக்கம்”.
ஈழப்போரின் கடைசிக்கட்டத்தில், கையாலாகாத தமிழக அரசியல் சூழலில், உண்மையான தமிழ் உணர்வு கொண்ட பேச்சாளருக்கும், போராளிக்கும் ஒரு வெற்றிடம் உருவான போது அந்நேரத்தில் சரியாக வந்து அந்த இடத்தில் பொருந்தியும், நம்மால் பொருத்தியும் வைக்கப்பட்டவர் சீமான். அவரின் ஒவ்வொரு மேடைப் பேச்சும் தலைவனற்று தனியாய் நின்ற இளைஞர்களைக் கட்டிப்போட்டது, அவரிடம் கொண்டு சேர்த்தது. ஈழப்பிரச்சினையில் சீமானின் பேச்சுக்களால் எந்த நன்மையும் ஏற்படவில்லையெனினும், ஈழப்பிரச்சினையை வைத்து தமிழ்நாட்டில் அவர் நடத்திய கூட்டங்களின் பயன், இளைஞர்கள் பலர் அவர் பின்னே அணிவகுத்தது! எல்லாம் ஆயிற்று, ஈழப்போர் முடிந்தது, கூட்டம் கலைந்தது, உடனிருந்த தலைவர்கள் சிலரும் கலைந்தார்கள், ஆனால் ஒரு இளைஞர் கூட்டம் ஈழப்போர் முடிந்தும் கலையாமல் சீமானின் பின்னே நின்றது! அந்தக் கூட்டத்தை வைத்து என்ன செய்வது? உதயமானது ‘நாம் தமிழர் இயக்கம்’.
“நான் பெரியாரின் பேரன், என் இனம் திராவிட இனம்” என பெருமை பேசி, பெரியாரின் பேரால், திராவிட இனத்தின் பேரால், தமிழ் மொழியின் பேரால் இளைஞர்களை இழுத்த சீமான் இன்று குழப்பத்தில் ஆழ்ந்து, முன்னுக்குப் பின் முரணாக பேசி, இளைஞர்களைக் குழப்பி வருவது எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இரண்டு வார்த்தை பேசினால் ஒண்ணே முக்கால் வார்த்தையில் முரண்.
ஒரு உதாரணம்,
“தனி ஈழம் அமைப்பேன்” எனச் சொன்ன ஜெயலலிதா இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன் என சொன்னார் சீமான். தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. அதாவது தனி ஈழம் அமைப்பதற்கான வாய்ப்பை அந்த அம்மாவுக்கு மக்கள் வழங்கவில்லை. இதில் ஜெயலலிதாவின் குற்றம் ஒன்றுமில்லை என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இப்போது கீற்றில் பேட்டி கொடுக்கும் சீமான் சொல்கிறார், “தமிழர்கள் எல்லோரும் தங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக கருதுகிற பிரபாகரனை குற்றவாளி என்று சொல்லும் தைரியம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? அதைத்தான் ஆபத்து என்று நாங்கள் சொல்கிறோம். அந்த ஆபத்து இனியும் தொடரக் கூடாது என்று விரும்புகிறோம்.”என்று. இதை முரண்பாடு என்பதா, குழப்பம் என்பதா, சந்தர்ப்பவாதம் என்பதா??!!!
சீமான் அண்ணே நீங்கள் ஜெயலலிதாவைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாங்கள் சிரித்துச் சும்மாயிருபோம். ஆனால் அதே பேட்டியில், “குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து எங்கள் அய்யா என்ன செய்தார்? எல்லா இடத்திலும் விமர்சனம் இருக்கிறது. பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் இல்லை என்ற விமர்சனம் இன்றும் இருக்கிறது.” என்ற மடத்தனமான, முட்டாள்தனமான, ஈனத்தனமான ஒரு வாக்கியத்தை நீங்கள் கூறியிருப்பதைக் கேட்டால் குமட்டிக்கொண்டு வருகிறது. பெரியாரைப் பற்றி பாடத்தில் படிக்கும் குழந்தைக்கு இருக்கும் அறிவு கூட உங்களுக்கு இல்லாமல் போனது வியப்பைத் தருகிறது. பெரியார் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் இல்லையாம், முத்துராமலிங்கத் தேவர் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராம்!! அதாவது தலித்துகள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லையாம், முக்குலத்தோர் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களாம்!! அருமை!
சாதியை மறந்து ஒன்று சேருவோம் எனச் சொன்ன உங்களின் முதல் மாலை முத்துராமலிங்கத் தேவருக்கு விழுந்தது. இசை வேளாளர் சமூகத்தில், பொட்டுக்கட்டப்பட்ட பெண்ணுக்குப் பிறந்த அண்ணாவை “தேவடியாள் மகன்” என பொதுக்கூட்டத்தில் திட்டிய பெருமகனுக்கு மாலை விழுந்தது. இப்போது உங்கள் தலைவர்களில் ஒருவரான காமராசரை, பெரியார் “பச்சைத் தமிழன்” எனப் புகழ்ந்த காமராசரை பெரியாரின் சொல்படி நடந்தார் என்பதற்காகவே முதல் எதிரியாக கருதிய முத்துராமலிங்கத் தேவருக்கு உங்கள் மாலை விழுந்தது. ஆனால் அந்த மாலையை, உங்களை நம்பிய இளைஞர்களுக்கு நீங்கள் அணிவித்த செருப்பு மாலையாகத் தான் நான் பார்க்கிறேன். கேட்டால், பிரிந்த சமூகத்தை ஒட்டவைக்கிறேன் என்கிறீர்கள். பிரிந்திருக்கும் இரு சமூகத்தை இணைக்க விரும்புபவன் ஒவ்வொருவராக தனித்தனியாக சென்று பார்க்க மாட்டான். இருவரையும் பொது இடத்திற்குத் தான் அழைப்பான்! நீங்கள் செய்தது பச்சை பச்சோந்தித்தனம். சாதியின் பேரால் ஓட்டு பார்க்க நினைக்கும் அயோக்கியத்தனம்! அதாவது யாருக்கு மாற்றாய் உங்களிடம் வந்தோமோ, அவர்கள் செய்யும் அதே வேலை!!
ஈழப்போரின் பின், அதாவது உங்களுக்கு உணர்சிகரமாய் பேசுவதற்கு தலைப்பு இல்லாத இந்த காலகட்டத்தில் வெளிவரும் உங்களின் பேட்டிகளை படிக்கப் படிக்க வெறுப்பே மிஞ்சுகிறது. உணர்ச்சிகரமாய் பேசுவதைத் தவிர்த்து வேறெதுவும் உங்களுக்குத் தெரியாது என்பதை தெளிவாக உணர்த்துகின்றன உங்கள் பேச்சுக்கள். கேரள-தமிழக அணைப் பிரச்சினைப் பற்றி நீங்கள் “இந்திய அரசும் தமிழக அரசும் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும், முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவேன் என்று கேரள அச்சுதானந்தனால் சொல்ல முடிகிறது. அப்படி உயர்த்தினால் தமிழகத்தில் இருந்து ஒரு பொருள் கேரளாவிற்குப் போகாது என்று சொல்ல இங்கு வலுவான தலைமை இல்லையே?” என சொல்லியதைக் கேட்டு தலையிலடித்துக் கொள்வதைத் தவிர்த்து என்ன செய்யமுடியும்? ஏனெனில் இப்பிரச்சினையில் அணையை உயர்த்த வேண்டும் எனக் கேட்பது நாம், அதாவது தமிழர்கள். உயர்த்த மாட்டோம் எனச் சொல்வது அவர்கள் அதாவது மலையாளிகள். இது மட்டுமா?
ஆரம்பத்தில் நான் திராவிடன், என் தலைவர் பெரியார் என்றீர்கள். ‘நாம் தமிழர் இயக்கத்தின்’ தோற்றத்திற்குப் பின் “நான் தமிழன், என் தலைவர் பிரபாகரன்” என்றீர்கள். “ஜெயலலிதாவை ஆதரி” என்றீர்கள். இப்போது “ஜெயலலிதா ஒரு ஆபத்து” என்கிறீர்கள். உங்கள் எண்ணங்களையும், தலைவர்கள் பெயரையும் என்றுமே மாற்றிக் கொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இப்போது, பெரியாரால் நடத்தப்பட்ட திராவிடப் போரால் தமிழனுக்கு உபயோகமில்லை எனக்கூறும் அளவுக்கு உங்கள் கிறுக்குத்தனம் போவதைதான் எங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
நண்பர்களே, என்னுடைய பயமெல்லாம் இதுதான். வரலாறே அறியாத, அரசியலும் தெரியாத, உணர்ச்சிகரமாய் பேச மட்டுமே தெரிந்த ஒரு மாபெரும் குழப்பவாதியின் பின்னால் சில இளைஞர்கள் இன்று நிற்கிறார்கள். வரலாற்றை தப்பும் தவறுமாயும், பெரியாரைப் பற்றிய பொய் பிரச்சாரங்களை தான்தோன்றித்தனமாயும் இளைஞர்களிடமும், ஊடகங்களிடமும் கொண்டு சேர்க்கும் சீமானை இனியும் கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் விட்டால் அது மாபெரும் வரலாற்று பிழையாகத்தான் முடியும். சீமானைப் புரிந்து கொண்டு அவரை புறக்கணிக்க ஆரம்பித்திருக்கும் தோழர்களும், அண்ணன்களும், சீமானின் பேச்சை வெளிப்படையாக எதிர்க்கவும் ஆரம்பிக்க வேண்டும். நான் மிகவும் மதிக்கும் அண்ணன்களில் சிலர் சீமானுடன் தோள் சேர்த்து நிற்பது எனக்கு பதற்றத்தையும், வருத்தத்தையும் தருகிறது. தவறான தலைவனின் பின்னால் நிற்கும் சரியான தொண்டனும் தவறானவனாகத்தான் கருதப்படுவான். பெரியாரின் கொள்கைகள் மேலும், தமிழ் இனத்தின் மேலும் உண்மையான பற்று கொண்ட தோழர்கள் இவ்வளவு நடந்த பின்னும் சீமானின் பின் நிற்பதென்பது தெரிந்தே தேளை வளர்ப்பதற்கு சமம். சீமானின் பேச்சுக்களும், செயல்களும் இதே தொனியில் தொடர்ந்து கொண்டிருந்தால் அதைப் பதிவு செய்து பார்க்கப்போகும் நாளைய சமுதாயம் பெரியாரின் கொள்கைகளையே தவறாய் புரிந்து கொள்ளக்கூடும் என்ற பயமும் எமக்கு இருக்கிறது. அது நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல் நம் கையில் தான் இருக்கிறது.
சீமானைப் போன்ற காளான்கள் முளைப்பது இன்னும் நாம் தலைவனைத் தேடும் பழக்கத்தில் ஊறியிருப்பதால்தான். பெரியாரின் கொள்கைகளையும், தொண்டுகளையும் இளைஞர் சமூகத்திடம் சரியான வரலாற்று செய்திகளுடன் கொண்டு சேர்ப்பதே நம் கடமையே தவிர, நம்மை வழிநடத்த தலைவனை தேடிக்கொண்டிருப்பதல்ல. இன்னும் எத்தனை நாள் தலைவனைத் தேடித் தேடி பெரியாரின் கொள்கைகளைத் தொலைக்கப் போகிறோம்? சீமானைப் போன்றவர்கள் “தாழ்த்தப்பட்டவர்களுக்காக பெரியார் என்ன செய்தார்?” எனக் கேட்கும் அளவுக்கு விட்டு வைத்திருப்பது பிழையாகத் தெரியவில்லையா? பெரியார் இல்லையென்றால் நாம் தமிழராய் என்ன, மனிதராயாவது நடமாட முடியுமா?! நாம் தமிழராய் இருப்போம், அறிவுடையவனின் தோள் கோர்த்து. சீமானுடன் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக