புதன், 19 அக்டோபர், 2011

நாம் சாதி தமிழர் "சீமானின் மறுபக்கம்"




சீமான் வாக்கு அரசியலுக்கு முத்துராமலிங்கத்தையும், தமிழ்த்தேசிய அரசியலுக்கு மேதகு பிரபாகரனையும் முற்போக்கு அடையாளத்துக்குத் தந்தை பெரியாரையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.
  • சீமானுக்கு, முத்துராமலிங்கத் தேவர், பெரியார், சேகுவாரோ, பால்தாக்கரே என எல்லோருமே தேவைப்படுகிறார்கள், அரசியலுக்காக. அப்படியானால் அவருடைய கொள்கைத்தான் என்ன? நாம் கேட்க வேண்டியுள்ளது. சீமானின் இந்தக் குழப்பமான அரசியல் சிந்தனையின் தொடர்ச்சியாகத் தான் பெரியாரும், முத்துராமலிங்கத் தேவரும் ஒத்த சிந்தனையுடையவர்கள் என்றும், இருவரும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர்கள் என்றும் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். பெரியாரின் கருத்துக்களை மறுக்கவோ, எதிர்த்துப் பேசுவதோ சீமானின் தனிப்பட்ட சனநாயக உரிமை. ஆனால், பெரியாரின் கருத்துக்களைத் திரித்துப் பேசுவதற்கு சீமானுக்கு எந்த உரிமையும் கிடையாது. நமது நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் தலைவர் என்று எவரும் கிடையாது. தான் பிறந்த சாதிக்குத்தான் ஒவ்வொருவரும் தலைவராகிறார்கள். ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் யாரும் இதுவரை தலைவராக இருந்தது கிடையாது. தன் சாதியைத் தாண்டி சிந்திப்பவன், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் தலைவனாகி விடுகிறான். அந்த வகையில், பெரியார், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குமான மகத்தான தலைவர். அப்படிப்பட்ட தமிழினப் போராளி பெரியாரைப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் தலைவராகப் பார்ப்பது சீமானின் பிழையான பார்வையைப் பட்டவர்த்தனமாக காட்டுகிறது. தனக்கோ, தனது அமைப்பிற்கோ தெளிவான சிந்தனை இல்லை என்பதைச் சீமான் வெளிப்படுத்தியுள்ளார். 'நாம் தமிழர்' இளைஞர்களுக்குச் சாதி ஒழிப்பு சிந்தனையோ, நாத்திகச் சிந்தனையோ, பார்ப்பன எதிர்ப்போ வர்க்க விடுதலையோ பயிற்றுவிக்கப்படுவதில்லை. எந்த முற்போக்கு சிந்தனையையும் பயிற்றுவிக்காமல், பொருள் முதல்வாதச் செயல்பாடுமில்லாமல் இவர்கள் எப்படிட்ட தமிழ்த்தேசியத்தைக் கட்டமைக்க போகிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக