ஞாயிறு, 9 அக்டோபர், 2011

பரமக்குடி தாக்குதல்

தேவேந்திர குல மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் பரமக்குடியில் இருக்கிறது. அவரது நினைவு நாளான செப்டம்பர் 11-ல் தென் மாவட்டங்களில் இருந்து தேவேந்திர குல மக்கள் இங்கு ஏராளமாகக் குவிவார்கள்.  இந்த ஆண்டு நடந்த வரலாறு காணாத வன்முறை காரணமாக ஏழு உயிர்கள் பறிபோய்விட்டன. தமிழகத்​தின் சமீப கால வரலாற்றில் ஒரே நாளில் இத்தகைய பதற்றமும் துப்பாக்கி சூடும் ஏழு உயிர்கள் பறி போனதும் பெரும்சோகம்!
 செல்போனில் வந்த செய்தி!
இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பழனிக்குமார் என்ற 16 வயது தலித் மாணவன்  கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத் தலைவரைக் கிண்டல் செய்து சுவரில் எழுதியதாக கிளம்பிய விவகாரம் அது. ‘நான் இப்படிச் செய்யவில்லை’ என்று அந்த இளைஞன் மறுத்த நிலையில் அந்த இளைஞன் கொலை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் பரமக்குடி பகுதி அமைதியாகத்தான் இருந்தது. பல்வேறு அமைப்பினர் வரிசையாக அஞ்சலி செலுத்தி வந்தார்கள். ”இப்படியே முடிஞ்சிட்டா நிம்மதிதான்…” என்று சொல்லிக்​கொண்டு இருந்​தார்கள் பத்திரிகையாளர்கள். ஆனால், வெயில் உச்சிக்கு வர வர… பதற்​றம் தொற்ற ஆரம்பித்தது.
”ஜான்பாண்டியை அரெஸ்ட் பண்ணிட்​டாங்களாம்!” என்று செல்போனில் வந்த முதல் தகவல்தான் பரமக்​குடியின் பீதியைத் தொடங்கிவைத்தது.

”அஞ்சலி செலுத்துறதுக்காக ஜான் பாண்டியன், பரமக்குடிக்குப் புறப்பட்டு வந்துட்டு இருக்கிறார். அவரை வல்லநாட்டில் வெச்சு போலீஸ் மடக்கிட்டாங்க. பரமக்குடிக்குப் போகக் கூடாதுனு தடுத்துட்​டாங்க. நம்ம தலைவரைத் தடுக்கிறதுக்கு இவங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?” என்று ஒருவர் சத்தம் போட ஆரம்பித்திருக்கிறார். அது சுற்றிலும் இருந்தவர்களையும் கோபம் கொள்ள வைத்திருக்கிறது. உடனே அவர்கள் பரமக்குடியின் மையப் பகுதியான ஐந்து முனைச் சாலைக்கு வந்து, மறியல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் மிகச் சிலரே மறியலில் ஈடுபட்டதால், போலீஸார் கண்டுகொள்ளவில்லை. ”கொஞ்ச நேரத்துல கலைஞ்சிடுவாங்க…” என்று போலீஸ் அதிகாரிகளே சொல்லிக்கொண்டார்கள்!
விழுந்த போலீஸ்காரரும் பாய்ந்து வந்த கல்லும்!
நகரின் மையப் பகுதியில் மறியல் நடந்ததால், அந்த இடம் மெள்ள ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பியவர்களால், பரமக்குடியை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து கூட்டம் ஒரே இடத்தில் குவிய ஆரம்பித்தது. சென்னை துணை கமிஷனர் செந்தில்வேலன், சிறப்புப் பாதுகாப்புப் பணிக்காக இங்கு வரவழைக்கப்பட்டு இருந்தார். மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் இறங்கினார் அவர். போலீஸ் அதிகாரியிடம் பேசுவதற்காகப் பலரும் அவரை நோக்கி நகர்ந்து வர ஆரம்பித்தார்கள். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை சமாளிக்க முடியாமல் பரமக்குடி டி.எஸ்.பி. கணேசன் கீழே விழுந்தார். அப்போது எங்கோ இருந்து பறந்து வந்த ஒரு கல், கூட்டத்துக்குள் விழுந்தது. உடனேயே, ”லத்தி சார்ஜ்!” என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போலீஸார் லத்தியைச் சுழற்ற… அதைப் பார்த்து பலரும் தெறித்து ஓட… எதிர்த்து நின்று சிலர் கற்களை வீச… அந்த இடமே சில நிமிடங்களில் போர்க்களம் ஆனது. கண் மண் தெரியாமல் போலீஸ் லத்திகள் சுழன்றன. ஆனால் எதிரே பறந்து வந்த கற்களை  போலீஸ் லத்திகளால் சமாளிக்க முடியவில்லை. அதுவரை அமைதியாகப் படம் எடுத்துக்கொண்டு இருந்த புகைப்படக்காரர்கள்… இதையும் படம் பிடிக்க ஆரம்பித்ததும்… தாக்குதல் படலம் இந்தப் பக்கமும் திரும்பியது. நமது புகைப்படக் கலைஞர் பாண்டியைத் தாக்கினார்கள். அவரது கேமராவை உடைத்தார்கள். மற்றும் சில போட்டோகிராபர்களின் பைக், கேமராக்களும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.
சுட ஆரம்பித்தது போலீஸ்!
முதுகுளத்தூர் ரோடு, மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோடு என்று மூன்று பக்கம் இருந்தும் மும்முனைத் தாக்குதல் நடந்துகொண்டு இருந்தது. இது நடக்கப் போவதை எதிர்பார்த்து வந்தது மாதிரி போலீஸார் பெரும் கம்புகளை மட்டுமல்ல… நிறைய சரளைக் கற்களையும் கொண்டு வந்து குவித்து வைத்திருந்தார்கள். எனவே, ரோட்டில் விழுந்தவை போராட்டக்காரர்களுக்கு இணையாக போலீஸ் கற்களும் இருந்தன. ரத்தம் கொட்டக் கொட்ட பலரும் ரோட்டில் ஓடிக் கொண்டு இருந்தார்கள். வீசப்பட்ட கல் மழையில் சிக்கி  பலரும் சிதறினார்கள். இந்த நேரத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வந்து விழ ஆரம்பித்தன. அதிலிருந்து வீறிட்ட தீ எரியத் தொடங்கியது. காவல் துறையின் வஜ்ரா வாகனம் எரிய ஆரம்பித்தது. அடுத்து தீயணைப்பு வண்டி எரிந்தது. மேலும் சில வாகனங்கள் எரிக்கத் தொடங்கவே, அந்த இடமே எரியத் தொடங்கியது.

”கண்ணீர்ப் புகை குண்டு போட ஆரம்பித்தோம். அப்போதும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், துப்பாக்கி சூடு நடத்தத் தொடங்கினோம்…” என்கிறது போலீஸ். இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மட்டுமின்றி  வேடிக்கை பார்க்க வந்தவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்தன. சுமார் 15-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்கள். மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்கள். பயந்து ஓடியவர்கள் அவர்களுக்குள் மோதிக் கீழே விழுந்தும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடந்த சிறிது நேரத்திலேயே 144 தடை உத்தரவு போடப்பட்டதால், மதியம் 1 மணிக்குப் பிறகு மயான அமைதிதான் அங்கு நிலவியது. அதற்குப் பிறகு, யாரும் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. நிகழ்ச்சி ரத்தானது.
”பொதுவாக வானத்தை நோக்கி முதலில் போலீஸ் சுடும். அப்படியும் கூட்டம் கலையவில்லை என்றால் ஒரே ஒரு புல்லட்டை கும்பலை நோக்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால், தொடர்ச்சியாக புல்லட்டை பயன்படுத்த ஆரம்பித்தது போலீஸ்!” என்று சொல்கிறார்கள் பொதுமக்கள். ஒரு வாரமாக போலீஸைக் குவித்து பரமக்குடியையே பீதிக்கு உள்ளாக்கிய போலீஸ், ஜான்பாண்டியன் ஊருக்குள் வந்தால் கலவரம் ஏற்படும் என்று சொல்வது நம்பும் படியாக இல்லை. ‘ஜான்பாண்டியனை வல்லநாடு பகுதிக்குக் கொண்டு சென்று அலைக்கழித்து… என்கவுன்ட்டர் செய்யப் போகிறார்கள்’ என்றும் சிலர் கிளப்பினார்கள். பரமக்குடிக்கு செல்லத் தயாரானவர்களைக் கிராமம் கிராமமாகச் சென்று… பெயர் பட்டியலை போலீஸ் தயாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. ‘கலவரம் நடக்காமல் தடுக்கத் திட்டமிட்டார்களா? அல்லது தேவையில்லாத பீதியைக் கிளப்பத் திட்டமிட்டார்களா?’ என்றும் சிலர் கேட்கிறார்கள்.
எரிந்த பைக்… உடைக்கப்பட்ட கேட்…
முதுகுளத்தூர்  சாலையின் நடுவே பைக் உள்ளிட்ட வாகனங்களை மலைபோல் குவித்துத் தீ வைக்கப்பட்டு இருந்தது. மின் கம்பிகளும் சாலையில் அறுந்துகிடந்தன. அதேபோல, பொன்னையாபுரம் ரெயில்வே கேட் உடைக்கப்பட்டு ரோட்டின் குறுக்கே கிடந்தது. ஒரு கும்பலுக்கு நடுவே சிக்கிக்கொண்ட போலீஸார் சிலர் உயிருக்கு பயந்து, ஒரு கடைக்குள் புகுந்தனர். அந்தக் கடையின் ஷட்டரை உடைத்து அதற்குள் தீ வைக்க சிலர் தயாரானார்கள். பொன்னையாபுரம் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தையும் சிலர் கைப்பற்றினார்கள். பணியில் இருந்த பெண் போலீஸார் உயிருக்குப் பயந்து ஓர் அறைக்குள் மொத்தமாகச் சென்று பதுங்கினார்கள். ஜென்ஸி என்ற காவலர் மட்டும் இவர்களிடம் சிக்கிக்கொள்ள… அவர் தாக்கப்பட்டார். இதற்குப் பிறகு போலீஸ் தாக்குதல் இன்னமும் அதிகமானது. தாக்குதலுக்குப்  பயந்து மறைந்திருந்த மனிதர்களைக்கூட கொத்துக் கொத்தாக அள்ளி வந்து ரோட்டில் போட்டு அடிக்க ஆரம்பித்தார்கள். அந்தக் காட்சியை வீடியோ எடுத்தவர்களையும்  போலீஸ்காரர் மிரட்டியதைப் பார்க்க முடிந்தது.  வாரப் பத்திரிகை நிருபர் ஒருவர் அந்தக் காட்சியை படமெடுக்க முயல,  அவரது கேமராவைப் பறித்து உடைத்தார்கள். கண்ணில் பார்ப்பவர்கள் எல்லாம் அதன் பிறகு அடித்துத் துரத்தப்பட்ட… இரண்டு மணிநேரம் கழித்துதான் கலவரம் ஒரு வழியாக அடங்கியது!
மதுரையில் எதிரொலி!
தென் மாவட்டங்களில் எங்கு கலவரம் மூண்டாலும் பட்டென்று மதுரையிலும் எதிரொலிப்​பது வழக்கம். இம்முறையும் அப்படியே. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பரமக்குடி நோக்கிச் சென்ற வாகனங்களை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களின் வழியே சலனம் இல்லாமல் அனுப்பிக்கொண்டு இருந்தார்கள் மதுரை மாவட்ட போலீஸார். பரமக்குடியில் கலவரம் மூண்ட 3 மணி நேரத்தில் மதுரையிலும் துப்பாக்கி சூடு நடந்தது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பரமக்குடி செல்லும் பாதையான ரிங் ரோட்டில் நடந்த இந்த சம்பவத்தில் பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரசாந்த், பாலகிருஷ்ணன் ஆகியோர் காய​மடைந்தார்கள். ஜெயபிரசாந்த்துக்கு முதுகில் பாய்ந்த குண்டு நுரையீரலை லேசாகச் சேதப்​படுத்திவிட்டு விலாப்பகுதியில் வந்து நின்றது. பாலகிருஷ்ணனுக்கு கையில் குண்டு பாய்ந்திருந்தது.
‘சிவகங்கை மாவட்டம் பாட்டம் கிராமத்தில் இருந்து இரண்டு திறந்த வேன்களில் சுமார் 40 பேர் சிந்தாமணிக்கு வந்தார்கள். ‘ஏன் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் வந்தீர்கள்?’ என்று அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் கேட்க, வாக்குவாதமானது. கடைசியில் அவர்களை ரிங் ரோடு வழியாகவே செல்ல அனுமதி அளித்துவிட்டோம். போனவர்கள், கொஞ்சம் முன்னால் போய்க்கொண்டு இருந்த தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களின் மூன்று கார்களில் மீண்டும் சிந்தாமணிக்குத் திரும்பினார்கள். வாகனங்களில் இருந்து இறங்கிய வேகத்தில் போலீஸாரைத் தாக்கினார்கள். பெண் போலீஸ் பாண்டியம்மாளைக்கூட விடவில்லை. பஸ் கண்ணாடிகளை உடைத்ததோடு ஒரு பஸ்ஸை எரிக்கவும் முயன்றார்கள். இன்ஸ்பெக்டரைத் தாக்க முயன்றதால்தான், வேறு வழி இன்றி அவர் துப்பாக்கியால் இரண்டு ரவுண்ட் சுட்டார்…’ என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
சம்பவ இடத்தில் முழங்கையில் ரத்தம் வழிய நின்றுகொண்டு இருந்த வெள்ளிராஜிடம் பேசினோம். ‘நானும் பாட்டத்தில் இருந்து வந்தவன்தான். போலீஸ் சொல்றது சுத்தப் பொய். எங்களோடு காரில் வந்த போஸ் என்பவரை இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் அடிச்சதாலதான் பிரச்னை வந்தது. கும்பலாக வந்தவர்கள் அதுக்கு அப்புறம்தான் போலீஸைத் தாக்கி, பஸ் கண்ணாடியை உடைத்தார்கள். உண்மையிலேயே கூட்டத்தைக் கலைக்கணும்னு நினைச்சிருந்தா, வானத்தைப் பார்த்துத்தானே சார் சுடணும்? ஏன் ஆட்களைக் குறிவைக்கணும்?’ என்றார் கோபத்தோடு.
ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது ஏன்?
பரமக்குடி கலவரத்துக்கு ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதுதான் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், அவரை ஏன் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று போலீஸாரிடம் கேட்டோம்.
”ஏற்கெனவே ஜான்பாண்டியன், 31.12.10 அன்று பள்ளப்பச்சேரி வந்தபோது கலவரம் மூண்டதால், அவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய நிரந்தரத் தடையே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஜான்பாண்டியன் வந்தால் நிச்சயம் கலவரம் மூளும் என்பதால்தான், அவருக்கு மட்டும் தடை விதித்தோம்!” என்றார்கள்.
ஜான்பாண்டியனிடம் பேசினோம். ‘தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்துக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சியோடு வருவது சிலருக்குப் பிடிக்கவில்லை. இந்த விழாவை மொத்தமாகத் தடை செய்ய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆண்டுதோறும் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். நான் ஒருவன் சென்றால் கலவரம் ஏற்படும் என்பது ஏற்க முடியாதது. எனக்கு மட்டும் தடை உத்தரவு போட்டது, தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கிற செயல். சம்பவம் நடந்தபோது, நான் போலீஸ் காவலில் இருந்தேன். தமிழகத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் பரமக்குடியில் குழுமி இருந்தபோது, எதற்காக இந்த துப்பாக்கி சூடு என்று புரியவில்லை. இந்த விழாவைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்கள் காவல் துறையிலும் இருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது…” என்றார்.
சுமார் ஒரு மாத காலமாக ஆலோசனை மற்றும் முஸ்தீபுகளுடன் ஆயிரக்கணக்கான போலீஸாரையும் குவித்த பிறகும் அமைதியாக ஒரு விழாவை நடத்த முடியாமல்… பழிச் சொல்லும் ஏழு உயிர்களை பலி வாங்கியும் இந்த குருபூஜை முடிந்திருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக