ஞாயிறு, 9 அக்டோபர், 2011

பரமக்குடி : ஒரு பயணம்













கடந்த வார இறுதியில் இரு தினங்கள் பரமக்குடியில் இருந்தேன். துப்பாக்கிச்சூடு நடந்து வாரங்கள் கழிந்திருந்த நிலையில், பரமக்குடி இன்னமும் தன் சடலங்களை எண்ணிக்கொண்டிருந்தது. 'ஆறு பேர்', 'எழு பேர்', 'குறைந்தது இரு மடங்கு இருக்கலாம்.' காயமடைந்தவர்களின் எண்ணிக்கையையும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை.






இந்தப் பிரச்னைக்கான ஆணிவேர் 1957ல் அடங்கியிருக்கிறது என்றார் தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவையின் பொதுச் செயலாளர், பூ. சந்திரபோஸ். இம்மானுவேல் சேகரன் நினைவு ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர். 'இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்ட 1957 தொடங்கி இன்றுவரை பரமக்குடி ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறது. தேவேந்திரர்களுக்கும மறவர்களுக்குமான பிரச்னையின் காரணங்களையும ஆழ, அகலங்களையும் புரிந்துகொண்டால்தான் இந்தத் துப்பாக்கிச்சூட்டையும சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்.' என்றார் சந்திரபோஸ்.






செப்டம்பர் 11க்கு முந்தைய சில தினங்கள் தொடங்கி துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கணம் வரையிலான நிகழ்வுகளை அவர் பகிர்ந்துகொண்டார். மீடியா இந்தச் சம்பவத்தைச் சரியான கோணத்தில் அணுகவில்லை என்பது அவர் முதல் குறை. இரண்டாவது குறை, பாதிக்கப்பட்ட தேவேந்திரர்களைக் குற்றவாளிகளாகவும் கலகக்காரர்களாகவும் சித்தரித்தது. 'நீதி கிடைக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது.'






இம்மானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்தார் வழக்கறிஞர் புண்ணியமூர்த்தி. அம்பேத்கர் பெயரில் ஒரு சிறிய நூலகம் நடத்தி வருகிறார். 'சிதறிய தோட்டாவைப் பத்திரப்படுததி வைத்திருக்கிறேன். உங்களுக்குப் பயன்படுமா?' என்றார். இம்மானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும் அழைததுச் சென்றார். நினைவுநாளில் ஒவ்வொரு ஆண்டும் தேவேந்திரர்கள் சந்திக்கும் பிரச்னைகளை விவரித்தார். தாக்குதல் நடந்தபோது கூட்டத்தில் இருந்தவர். 'சீருடை அணியாமல காவலர்கள் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தனர். தொடங்கி வைத்தவர்கள் அவர்கள். முடித்து வைத்தவர்களும் அவர்களே.'






காயமடைந்த சிலரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்யமுடிந்தது. இணையம மூலமாக உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளமுடியாமல் போன இயலாமையை நினைத்து பலர் வருந்தினர். 'ஊடகங்களில் எங்கள் வாதம் செல்லுபடியாவதில்லை. எங்களுக்கான ஊடகங்களை உருவாக்கிக்கொள்ளவும் முடியவில்லை. நிச்சயம் இந்தக் குறையை நாங்கள் சரிசெய்வோம்.'










மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது பற்றி தேவேந்திரர்களின் குழு நடத்திய சந்திப்பில் நானும் கலந்துகொண்டேன். இம்மானுவேல் சேகரன் பெயரில் அமைந்திருந்த திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. வெவ்வேறு பிரிவைச் சார்ந்த வெவ்வேறு அரசியல் கண்ணோட்டம் கொண்டிருநத தேவேந்திரர்களின் குழுக்கள் அங்கே திரண்டிருந்தன. வழக்கறிஞர்களும் திரண்டு வந்திருந்தனர். நீதிபதி சம்பத் விசாரணைக் குழுவைத் திருப்பி அனுப்பியது சரியா? சடலங்களைக் காவலர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டிருக்கத்தான் வேண்டுமா? பரமக்குடி முழுக்க சவ ஊர்வலம் நடத்தி, துப்பாக்கிச் சூட்டைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கவேண்டாமா? உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு சரியான முடிவா? விவாதங்கள் நீண்ட நேரத்துக்குத் தொடர்ந்துகொண்டிருந்தன. சில விஷயங்களில் மட்டுமே அவர்கள் ஒத்துப்போனார்கள். அவற்றில் ஒன்று, இம்மானுவேல் சேகரனின் பிறந்த தினம், இறந்த தினம் இரண்டையும் அரசு விழாக்களாக அங்கீகரிக்கவேண்டும் என்பது.






இது பிரச்னையை மேற்கொண்டு கிளறாதா? 'இம்மானுவேல் சேகரனை, சாதி வேறுபாடுகளைக் கடந்த ஒரு தலைவராகவே நாங்கள் முன்னிறுத்திவருகிறோம். பள்ளர்கள், பறையர்கள், சக்கிலியர்கள் என்று வேறுபாடுகள் இன்றி ஒடுக்கப்பட்ட அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கம். சிலருக்கு இதனால் ஆத்திரம் ஏற்படலாம். ஒன்றும் செய்வதற்கில்லை.'






ஜான் பாண்டியனுக்கும் கிருஷ்ணசாமிக்கும் தலித் சமூகத்தில் கணிசமான ஆதரவு இருக்கிறது என்றார் புண்ணியமூர்த்தி. இருவருமே இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்துக்கு வருகை தருபவர்கள். அரசியல் காரணங்களுக்கேனும் அவருக்கு மரியாதை செலுத்துபவர்கள். "மற்றபடி திமுக, அதிமுக இரண்டுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. இரண்டுமே தலித் விரோத கட்சிகள். ' திருமாவளவன் போன்றோர்? 'சொல்வதற்கு ஒன்றுமில்லை.'










தேவர்கள் Vs தலித் பிரச்னையாக இதனைக் குறுக்கிப் பார்த்துவிடமுடியாது என்று தோன்றுகிறது. தேவேந்திரர்களைத் தலித் என்று அழைககமுடியாது என்கிறார் தமிழவேள். சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர் என்னும் புத்தகத்தின் ஆசிரியர். 'தீண்டத்தகாதவன்தான் அரிசன். அரிசன்தான் ஆதி திராவிடன். ஆதி திராவிடன்தான் தாழ்த்தப்பட்டவன். தாழ்த்தப்பட்டவன்தான் தலித். இது சமூக இயலின் பரிணாம வளர்ச்சி. இப்பெயர்களுக்கும் தேவேந்திரர்களுக்கும் தொடர்பில்லை. ஆதிக்க உணர்வோடோ அல்லது பண்பாட்டு அடிமைத்தனத்தை நிலைப்படுத்தும் நோக்கோடோ பிறரால் திணிக்கப்படும் எந்த இழிவுப் பெயரையும் 'மள்ளரியம்' ஏற்காது. ஏனெனில் அந்தப் பெயர்கள் ஒடுக்குமுறைக்குட்பட்ட சாதியினரைக் குறிப்பிடுவன. ஆனால் தேவேந்திரர்கள் போரக்குணமிக்க ஆதிக்க சாரியாராவர். தேவேந்திரர்கள் வாழும் கிராமங்களில் பெரும்பாலானாவை இன்றும் அவர்தம் மேலாதிக்கத்திற்குட்பட்டுள்ளன. இது யதார்த்தநிலை. இதனைக் கணக்கில் கொள்ளாத எந்த முயற்சியும் சரியான முடிவைத் தராது.'






பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால்தான் பரமக்குடியைப் புரிந்துகொள்ளமுடியும். சாதி அமைப்பு, அதன் சிக்கல்கள், இந்து மதத்தின் புதிர்கள், முத்துராமலிங்கத் தேவர் பற்றிய சரியான மதிப்பீடு, இம்மானுவேல் சேகரனின் போர், தென் தமிழகத்தின் சாதிக் கலவரங்கள், ஆதிக்கச் சாதியினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான கூட்டு, ஆதிக்கச் சாதியினருக்கும் அரசு இயந்திரத்துக்கும் இடையிலான கூடடு, தலித் அரசியல் தலைமைகள், தலித் சிந்தனை போக்கு என்று பலவற்றை ஆராயவேண்டியிருக்கிறது.










மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரட்டைக் குவளைமுறை நீடிக்கிறது. ஆதிக்கச் சாதியினரின் அத்துமீறல்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவது இன்றுவரை தொடர்கிறது. 'பதினெட்டு நிமிடத்துககு ஒருமுறை ஒரு தலித்மீது வன்முறை ஏவப்படுகிறது' என்கிறது ஒரு குறிப்பு. தென் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் உள்ள நிலைமை இது. இந்தியாவின் 170 மில்லியன் தலித் மக்கள் ஒவ்வொரு தினமும அச்சத்துடன்தான் கண்விழிக்கின்றனர். அச்சத்துடன்தான் உறங்கச் செல்கின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் இதுவே நிலைமை.






'நீங்கள் எந்த திசையில் திரும்பினாலும் சாதி என்னும் அரக்கன் உங்கள் வழியில் குறுக்கிடுவான். இந்த அரக்கனைக் கொல்லாமல் அரசியல் சீரமைப்பையோ பொருளாதார சீரமைப்பையோ உங்களால் செய்யமுடியாது.' என்றார் அம்பேத்கர். பரமக்குடியிலும் இந்த அரக்கனைப் பார்க்கமுடிந்தது. இது சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட விஷயம் என்பவர்களைப் பார்த்து அந்த அரக்கன் சிரித்துக்கொண்டிருந்தான். அம்பேத்கர் அடையாளம் காட்டிய அந்த அரக்கனைக் கொல்வதற்கு முன்னால் அவனைத் தெரிந்துகொள்ளவேண்டும்.










மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் (Madurai Institute of Social Sciences) பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேரா. ரங்கசாமிக்கு முதல் நன்றி. அவருடைய வரவேற்பும் ஒத்துழைப்பும் இல்லாமல் போயிருந்தால் இந்தப் பயணம் நிகழ்ந்திருக்காது. அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இரு தினங்கள் முழுக்க முழுக்க என்னுடன் நிழலாக இருந்து களப்பணியாற்றிய நண்பர் விநோத் அம்பேத்கருக்கு நன்றிகள் பல. எனக்குத் தேவைப்பட்ட பல ஆவணங்களையும் குறிப்புகளையும் தந்துதவினார். புகைப்படங்கள் எடுத்து அளித்தார். பரமக்குடியில் பல நண்பர்களை இவர் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்களில் ஒருவர், தோழர் மீ.த. பாண்டியன். அடுத்தமுறை மதுரைக்குச் செல்லும்போது இவரிடம் மேற்கொண்டு உரையாடவேண்டும்.






பரமக்குடியில் நான் சேகரித்த செய்திகளையும் அறிக்கைகளையும் வாக்குமூலங்களையும பாடங்களையும் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். இனிவரும் தினங்களில் அவற்றை ஒழுங்குபடுத்தவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக