வியாழன், 27 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் எப்படி ஒற்றுமையாய் ஒத்துப்போனார்கள்...?


                 தமிழக மக்களே... ஒன்றை கவனித்தீர்களா...? தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளவும்  இல்லை... கடித்துக்கொள்ளவும் இல்லை.... ஒருவரையொருவர் சேற்றைவாரி பூசிக்  கொள்ளவில்லை.  தேர்தல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இருவரும் ஒற்றுமையுடன் சமாதானமாகவே  சென்றது போலத்தான் இருந்தது.
               ''குரங்குகளும், குல்லா  வியாபாரியும்'' கதையில... அந்த குல்லா வியாபாரி தன் தலையில் இருந்த குல்லாவை கழட்டி தூக்கி எரிந்தவுடன் குரங்குகளும் தன் தலையில் இருந்த குல்லாவை கழட்டித் தூக்கி எரிந்து விடும். இந்த கதையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இந்தக் கதையை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டவர் கருணாநிதி தான்.  ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை உடைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன், கருணாநிதி வஞ்சகமாகவும், தந்திரமாகவும்  ''திமுக தனித்துப் போட்டி'' என்று அறிவித்து விட்டு, தன்னுடன் கூட்டணிக்கட்சிகளாக இருந்த காங்கிரஸ் போன்ற கட்சிகளை கழட்டித் தூக்கி எறிந்துவிட்டார். அதைப்பார்த்த ஜெயலலிதாவோ...    அதுவரையில் கூட்டணிப் பற்றி பேசுவதற்கு குழு அமைத்து, கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்ட சூழ்நிலையில், கருணாநிதி கூட்டணிக்கட்சிகளை கழட்டி தூக்கி எறிந்தது போல் இவரும் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சத்தம் போடாமல் கூட்டணிக்கட்சிகளை கழட்டி தூக்கி எறிந்து விட்டு தனித்து நின்றார். இதில் எப்படி இருவருக்கும் இவ்வளவு ஒற்றுமை. குரங்கு குல்லா கதையை கருணாநிதி தான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.  இந்த குரங்கு குல்லா கதையை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பில்லை. ஆமா... சொல்லிபுட்டேன்...
               விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அளவுக்கு உயர்ந்ததில் இந்த இருவருக்குமே  பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள்... விஜயகாந்த் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் ஒத்துப்போகிறார்கள்... ஐந்து ஆண்டுகளுக்குகொரு முறை தாங்களே மாறிமாறி வரவேண்டும். இவர்களுக்கிடையில் மூன்றாவதாக இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.
                      முடிந்துபோன   உள்ளாட்சித் தேர்தலில் கூட, தாங்கள்  வெற்றி பெறுவதற்கு, தமிழகம் முழுதும் அதிமுக வேட்பாளர்களும், திமுக வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், நிறைய பரிசுப் பொருட்கள் தருவதுமாகத் தான் இருந்தார்கள். அப்போது கூட ஒருவரையொருவர் குற்றம் சொல்லவில்லை. மாநில தேர்தல் ஆணையமும் இந்த இருவரையும் கண்டுகொள்ளாமல் தான் இருந்தது என்பதும் உண்மை. இந்த விஷயத்திலும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒற்றுமையாய் ஒத்துப்போயிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
      இப்படியாக பணத்தையும் பொருட்களையும் கொடுத்து தான் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்திலும் இவர்கள் இருவரும் வந்திருக்கிறார்கள் என்பது இவைகளை வாங்கிக்கொண்டு வாக்களித்த தமிழக மக்களின் மனசாட்சிக்கு நிச்சயம் தெரியும்.
               '' அம்மாவிற்கும் அப்பாவிற்கும் 
                 சண்டை... விவாகரத்து...
                 குழந்தை 
                 அம்மாவிடம் ஐந்து ஆண்டுகள்..
                 அப்பாவிடம் ஐந்து ஆண்டுகள்..
                 நீதிமன்றத் தீர்ப்பு... 
                குழந்தையின்  பெயர் தமிழ்நாடு...''    
என்று யாரோ எழுதிய புதுக்கவிதை தான் என் ஞாபகத்திற்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக