வியாழன், 27 அக்டோபர், 2011

கருணாநிதி - ஜெயலலிதாவிற்கு மாற்று அவசியம் - தமிழ்நாடு என்ன இவர்களின் குத்துகை நிலமா...


               1967  - ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தை பிடித்து ஆட்டிப்படைப்பது இந்த திராவிடக்கட்சிகள் தான். அண்ணாவில் தொடங்கி கருணாநிதி, எம்ஜிஆர்., ஜானகி, ஜெயலலிதா வரை முதலமைச்சர்களாக தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் இவர்கள் சிறிது நேரம் இளைப்பாறிய போது, நெடுஞ்செழியன், ஓ. பன்னிர்செல்வம் போன்றவர்கள் இவர்கள் சார்பில் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். ஆக திராவிடக்கட்சிகளின்  ஆதிக்கம் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழக மக்கள் தங்களுக்கான முதலமைச்சரை சினிமா கொட்டகையில் தான் தேடுகிறார்கள் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
                சிறிது காலம் தான் ஆட்சி செய்தார் என்பதனால் அண்ணாதுரையைத் தவிர மற்ற அனைவரும் லஞ்ச - ஊழலில் கைதேர்ந்தவர்கள் தான். அதிலும், எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு இன்று வரை பார்த்தால், மிகப்பெரிய அளவில் ஊழல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் மாறி மாறி ஐந்தாண்டுகொரு முறை முதலமைச்சர்களாக வந்து போகிறார்கள். ஒவ்வொரு முறையும் இவர்களின் ஊழல் அட்டகாசங்கள் அதிகரித்துக்கொண்டு தான் போகிறது.
               ''திருடரா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது...'' கருணாநிதியோ ஜெயலலிதாவோ   திருந்தமாட்டார்கள். ஆனால் இவர்களை தேர்ந்தெடுக்கும் தமிழக மக்களாவது திருந்துவார்களா என்றால் அவர்களும் திருந்த முடியாமல் இருக்கிறார்களே என்பது தான் வருத்தமாக இருக்கிறது. ''மாற்று சிந்தனை'' என்பது இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிக மிக அவசியமானது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
                திராவிட இயக்கம் என்பது  ஆரம்பத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வை கிளப்பிவிட்டு அரசியல் நடத்தி ஆட்சிக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது...? தமிழ்.. தமிழ்.. என்று கூப்பாடு போட்ட இவர்களின் ஆட்சியில் தானே தமிழகம் முழுதும் அந்நிய மொழியான ஆங்கிலம்  வளர்ச்சியடைந்திருக்கிறது. தாய்மொழிக் கல்விக்கு பதிலாக ஆங்கிலவழி கல்வி என்பது இவர்கள் ஆட்சியில் தான் செழுமைபெற்றது. இன்றைய இளையத்தலைமுறையினருக்கு தாய் மொழி மறந்து போனதற்கு இந்த திராவிடக்கட்சிகளே காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இவர்கள் ஆட்சியில் தான் ஆங்கிலம் வாழ்கிறது. தமிழ்  செத்துக்கொண்டிருக்கிறது. தாய் மொழி அழிந்து போனால் அந்த சமூகம் அழிந்து போகும். தமிழகம் அழிந்து போகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
              திராவிட இயக்க ஆட்சிக்காலத்தில் தான், தங்களை  மாமன்னர்களைப் போல நினைத்துக்கொண்டு,  குடும்ப உறுப்பினர்களை  எல்லாம் ஆட்சியில் பங்கெடுக்கச் செய்வது. குறுநில மன்னர்களைப் போல் தமிழகத்தைப் பங்கு போட்டுக்கொள்வது. கூட்டுக்கொள்ளை அடிப்பது. ஆனாலும்  கூச்சப்படாமல் மக்களோடு  நடமாடுவது. இது தான் கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிகளின் கலாச்சாரமாகவும், பண்பாடாகவும் இருந்துவருகிறது.
               தங்களின் ஆட்சிக்கும், கூட்டுக்கொள்ளைக்கும் பங்கம் வராமல் திமுகவும்  அதிமுகவும் தங்களுக்குள் ஒரு ரகசிய உடன்பாட்டோடு தான் தமிழகத்தில் அரசியல் நடத்துகிறார்கள். இந்த இருவருக்கும் மாற்று அவசியம் தேவை என்பதை தமிழக மக்கள் உணரவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த மக்களின் கோவணத்தை  உருவி அம்மணமாய் நிற்கவைத்தாலும்  கைத்தட்டி கும்மாளம் போடும் மக்கள் தான் இவர்கள்.
                 இந்த மாற்று சிந்தனையை மக்களிடம் உருவாக்கவேண்டும். அதற்கான காலம் கனிந்திருக்கிறது. நேற்று முன்தினம் தான் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக - அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாகவேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இவரின் இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்களும் வரவேற்றிருக்கிறார்.
              அந்த அடிப்படையில், காங்கிரஸ் - பாரதீய ஜனதா கட்சி போன்ற தேசியக்கட்சியும், திமுக - அதிமுக போன்ற மாநிலக்கட்சியும் அல்லாத ஒரு  மாற்று அணியை உருவாக்கவேண்டும். அந்த மாற்று அணி என்பது இடதுசாரிகளின் வழிகாட்டுதலோடு நடைபெறவேண்டும். அப்போது தான் சுயநலமில்லாத - போராட்டகுணமிக்க அணியாக அது இருக்கும். அப்போது தான் சட்டமன்றத்திலும், சட்டமன்றத்தின் வெளியிலும் ஒரு ஆக்கபூர்வமான - பலமான எதிர்க்கட்சிகளைக்  கொண்ட மாற்று அணியாக மாறும். 
               இந்த மாற்று அணிக்கான மாற்று சிந்தனையை வைகோ, விஜயகாந்த், திருமாவளவன், தா. பாண்டியன் போன்றவர்களும் யோசிக்கவேண்டும். அப்போது தான், வெறும் கவர்ச்சி அரசியலிலேயே ஏமாந்து  போகும் தமிழகம்  இனிமேலாவது  ஒரு நல்ல திசை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக