சனி, 10 டிசம்பர், 2011

பரமக்குடி பயங்கரம்: சாதி வெறியர்களுக்கு ஜெயா கொடுத்த நரபலி



கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் சுற்றுக்கு விடப்பட்ட சில காணொளிகளும் (video) ஆவணப் படங்களும் ஈழப்போரின் கொடூரங்களை நமக்கு இரத்தமும் சதையுமாக காட்டின. கொல்லப்பட்டவர்களின் உடல்களை சிங்கள இனவெறியர்கள் இறந்த மிருகங்களின் உடல்களைப் போல இழுத்து வந்து வாகனங்களுக்குள் வீசும் கொடூரத்தைக் கண்டு தமிழ்ச் சமூகமே அதிர்ந்து போனோம்.

    சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் குறைவான மக்கள் மத்தியில் மட்டும் சுற்றுக்குக் கிடைத்தன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன் அதிலொரு பகுதி கலைஞர் தொலைக்காட்சியிலும் பலமுறை ஒளிபரப்பப்பட்டது. காவல்துறையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவதையும், துப்பாக்கி குண்டு துளைத்து இறந்து போய்விட்ட அல்லது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களின் உடல்களை மிருகங்களைப் போல தூக்கிவந்து சிறிய போலீஸ் வாகனத்திற்குள் திணித்து படாரென்று கதவைச் சாத்துவதையும், இறந்து போனவரின் வேட்டியை உருவி அவருடைய உடலுக்கே அதைப் போர்த்துவதையும், திருப்பி அடிக்க முடியாத தள்ளாத வயதுடைய முதியவரை, விரும்பிய காவலர்கள், அதிகாரிகள் எல்லாம் அடித்துச் சித்திரவதை செய்வதையும் கண்டு இந்தச் சமூகத்தின் சிறிய பிரிவினர் மட்டுமே குமுறினார்கள்.


      சாதி ஒழிப்புப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரனின் 54 ஆவது நினைவு நாளிற்கு சென்ற 6 தலித் மக்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள் என்ற செய்தி தமிழ்நாட்டில் பரவியவுடன் இங்கு நிறைய பேருக்கு மனம் கொதிக்கவில்லை. ஈழத்தமிழினப் படுகொலை நடந்தபோது சிவந்துபோன பல கண்கள் இந்தமுறை சிவக்கவில்லை. இனவெறிபிடித்த சீருடை அணிந்த அரசுப்படைகள் மீது வந்த கோபம், சாதி வெறிபிடித்த சீருடை அணிந்த அரசுப்படைகள் மீது வராததற்கு என்ன காரணம்?

     உண்மையில், ஆயிரம் ஆண்டுகளாக எந்தத் தொடர்புமற்ற தமிழீழ மக்களை 'தொப்பூள்கொடி உறவுகளாக' அரவணைத்துக் கொண்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக உடன்வாழும் தலித் சமூகத்தை ஏன் அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லை? இனப்படுகொலைக்கு எதிராக ஏன் அவ்வாறு எழவில்லை? ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக பேசியவர்கள், இங்கே நிவாரணம் வழங்குவதற்கு மட்டுமே வாய் திறந்ததன் மர்மம் என்ன?

     இது ஒட்டுமொத்த தலித் மக்களும் முற்போக்கு சக்திகளும் தமிழ் சமூகத்திடம் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியின் நியாயத்தை நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்த, களத்தில் போராடிய, உயிர் கொடை கொடுத்த ஒரு பிரிவினர், அவ்வாறே போராடிய இன்னொரு பிரிவினரிடம் கேட்கும் கேள்வியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.

     சிங்கள இனவெறி அளவிற்கு கொடூரமானதில்லையா இந்தியாவின் சாதி வெறி? சொல்லப்போனால் சிங்கள இனவெறிக்கு நூறாண்டு வரலாறுதான். ஆனால், சாதி வெறிக்கு இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உண்டு. இந்தியாவில் இதுவரை நடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான படுகொலைகள், வன்புணர்ச்சிகள், சித்திரவதைகள் மற்றும் வன்கொடுமைகள் ஈழத்தமிழின மக்களுக்கு நேர்ந்ததைவிட அதிகம். சிங்கள இனவாதிகளின் வெறித்தனம், குரூர எண்ணம், வக்கிரம் போன்றவற்றிற்கு சற்றும் குறைவில்லாதது சாதி வெறியர்களுடையது.

     இங்கு பிரச்சனை இதுதான். தமிழக மக்களுக்கும், 'தமிழ்' தலைவர்களுக்கும் சிங்களர்கள் என்பவர்கள் அந்நியர்கள். அவர்களை எதிர்ப்பது பெரிய விசயமல்ல. ஆனால் ஆதிக்க சாதி வெறியர்கள் என்பவர்கள் உள்ளேயே இருப்பவர்கள், அவர்களாகவே இருப்பர்கள். பல 'தமிழ்' தமிழர்களின் புரவலர்களாகவும், தொண்டர்களாகவும், ஓட்டு வங்கியாகவும் இருப்பவர்கள்.
தலித்துகள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை அறிந்தவுடன், ''அவனுகளுக்கு வேணும்டா... எவ்வளவு ஆட்டம் போட்டானுக” என்று பேசிய வாய்கள் ஏராளம்.

     தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அனுசரிக்கும் தலித் மக்கள் அப்படி என்ன 'ஆட்டம்' போட்டார்கள்? 'டான்சி ராணி' ஜெயாவின் கைதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தர்மபுரியில் மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகளை எரித்துக் கொன்றதைப் போன்ற கொடுஞ்செயல் ஏதும் செய்தார்களா? ஈராயிரம் ஆண்டுகாலம் ஆதிக்க சாதியினர் நடத்திய தீண்டாமைக் கொடுமைகளை இவர்கள் யார்மீதும் அரங்கேற்றினார்களா? இந்திய இராணுவம் மற்றும் தமிழகக் காவல்துறையைப் போன்று அப்பாவி மக்களை படுகொலை செய்தார்களா? வன்புணர்ச்சி செய்தார்களா? என்ன 'ஆட்டம்' போட்டார்கள்?

     நீண்டகாலமாக அடிமைப்பட்டுக் கிடந்த தலித் மக்கள் எழுச்சி பெறுவதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத 'ஆதிக்க சாதி மனோபாவமே' அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது.

     ஜெயலலிதா சட்டமன்றத்தில் இனக்கலவரம் என்றும், தமிழ் பத்திரிகைகள் மீண்டும் மீண்டும் மக்களிடம் சாதிக் கலவரம் என்றும் சொல்லும் இந்த சம்பவம் உண்மையில் ஒரு கலவரமா? ஒரு சாதி மோதலா? இது ஒரு சாதி மோதல் என்றால், இதில் தமிழக காவல்துறையின் பங்கு என்ன? அவர்கள் இம்மோதலை கட்டுக்குள் கொண்டு வந்த மத்தியஸ்தர்களா? இல்லை.

     செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடியில் நடந்தது ஒரு சாதிய - அரசு பயங்கரவாதமாகும். அங்கு எந்த 'மோதலும்' நடக்கவில்லை. சாதிவெறி பிடித்த தமிழக அரசு தனது சாதிவெறி பிடித்த காவல்துறையைக் கொண்டு தலித் மக்கள்மீது நடத்திய ஒரு பயங்கரவாதத் தாக்குதல். பச்சைப் படுகொலைகள். மேலும், இது பல நாட்களுக்கு முன்னரே தமிழக அரசால், அதன் காவல் துறையினரால், ஆப்பநாடு மறவர் சங்கத்தால், சசிக்கலா - நடராஜன் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்கொடுமை ஆகும்.

     இந்தச் செய்தியானது பல்வேறு மனித உரிமை அமைப்புகள் நடத்திய உண்மை அறியும் குழு அறிக்கைகளால் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தியாகி இம்மானுவேல் நினைவேந்தல் நிகழ்ச்சியும், தலித் மக்களின் எழுச்சியும்:

     1952 முதல் 1957 வரை இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளுக்கும், மறவர் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக தீரமுடன் எழுச்சி பெற்று மக்களைத் திரட்டிப் போராடிய மாபெரும் தலைவர் இம்மானுவேல் சேகரன் ஆவார். 1800-களின் பின்பாதியிலிருந்து எழுச்சி பெற்றுப் போராடிவரும் தேவேந்திரர் சமூகத்தில் பிறந்த இம்மானுவேல், இராணுவப் பணியை விட்டுவிட்டு மக்கள் பணிக்காக, சாதி ஒழிப்புக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக அவர் எழுந்து வந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத சாதி வெறியர்கள் 1957 செப்டம்பர் 11 அன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தின் தூண்டுதலின் பேரில் 33 வயதேயான இம்மானு வேலை கொடூரமாகப் படுகொலை செய்தனர்.

     சாதி ஒழிப்புக்காக போராடி தன்னுயிரை தியாகம் செய்த இம்மானுவேலை தங்களுடைய தலைவராக தலித் மக்கள் ஏற்று அவருடைய நினைவு நாளை பல ஆண்டுகளாக அனுசரித்து வருகின்றனர். இந்நிகழ்வில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் பன்மடங்காகப் பெருகி வருகிறது. தேவர் குருபூஜைக்கு நிகரான பெரிய நிகழ்ச்சியாக இம்மானுவேல் சேகரன் குருபூஜை மாறி வருவதை சாதி வெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே கடந்த சில ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை சீர்குலைக்க பல திட்டங்களை போட்டு சாதி வெறியர்கள் நடைமுறைப்படுத்தி வந்தனர். செப்டம்பர் 11 நெருங்கும் சமயத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவரைப் படுகொலை செய்வது 2008 இலிருந்து துவங்கியது. 2008 இல் வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் வின்சென்ட், 2009 ஆம் ஆண்டு வீரம்பல் அறிவழகன், 2010 ஆகஸ்ட் 29 அன்று அருகிலுள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர் படுகொலை செய்யப்பட்டனர்.

     2011 செப்டம்பர் 8 அன்று பச்சேரி கிராமத்தில் கூட்டுறவு சங்கக் கட்டிடத்தில் 'தேவர் வாழ்க' என்று எழுதியிருந்ததன் அருகில் 'ஒன்பது' என்று எழுதிவிட்டனர் என்று சாதி வெறியர்கள் சில தலித்துகள் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வைத்தனர். ஆனால் அவ்வழக்கில் கூட பெயர் இல்லாத சிறுவன் பழனிக்குமாரை நாடகம் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் 10 பேர் கொண்ட கும்பல் மறைந்திருந்து தாக்கிக் கொன்றது.

     பழனிக்குமாரின் பச்சேரி கிராமத்தில் தீண்டாமைக் கொடுமைகள் பல நடைமுறையில் உள்ளன. தலித் மக்களுக்கு தேநீர் கடைகளில் தனிக்குவளை கொடுக்கும் 'இரட்டைக் குவளை முறை” கூட அக்கிராமத்தில் நடைமுறையில் உள்ளது. அப்பகுதியில் சிறுபான்மையினராக இருக்கும் தலித் மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதுவரை பல சாதி வெறியாட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூட்டுறவு சங்கக் கட்டிடத்தை ஆதிக்க சாதியினர்தான் இரவுகளில் மது அருந்தப் பயன்படுத்துகிறார்கள். அக்கட்டிடத்தில் அவர்களேதான் அவ்வாறு எழுதிவிட்டு, குருபூஜையைத் தடுக்கும் நோக்குடன் சிறுவனைப் படுகொலை செய்துள்ளனர்.

சாதிய - அரசு பயங்கரவாத வெறியாட்டம்:

     இச்சூழலிலும் கூட செப்டம்பர் 11 நிகழ்வு தடைபடக் கூடாது என்ற நோக்கத்தில் தலித் மக்கள் வழக்கம் போல நிகழ்வை முறையாக நடத்தத் துவங்கியிருக்கும் போது தமிழக அரசு, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை கைது செய்தது. பழனிக்குமாருக்கு அஞ்சலி செலுத்தவும், இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கும் வரவிருந்த ஜான் பாண்டியனை அவரால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்று கூறி, தமிழக அரசு கைது செய்ததைக் கண்டித்து பரமக்குடி ஐந்து முக்கு சாலையில் தலித் மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குருபூஜையை ஒட்டி எல்லா பேருந்துகளும் ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படுவதில்லை. ஆனால் அவர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்தது.

     ஆனால் நாம் அங்கு எடுக்கப்பட்ட காணொளியில் அவர்கள் குருபூஜைக்கு சென்ற எல்லா வாகனங்களையும் தடுக்காமல் அனுமதிப்பதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் எக்காரணமும் இன்றி கூடியிருந்த தலித் மக்கள் மீது திடீரென்று தடியடி நடத்தப்பட்டது. அவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய பிறகுதான் தடியடி நடத்தப்பட்டது என்ற அண்டப்புழுகை ஜெயாவும், காவல்துறையும் கூறியது. ஆனால் காவல்துறைக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட காணொளியின் மூலம் இவையெல்லாம் பொய் என்பது அம்பலப்பட்டுள்ளது. (படப்பதிவு செய்த சிலரது ஒளிப்பதிவுக் கருவிகளை காவல்துறையினர் கைப்பற்றி ஆதாரத்தை அழிக்க முயற்சித்துள்ளனர். ஆயினும், சிலர் துணிச்சலுடன் தெரியாமல் பதிவு செய்து பரப்பியுள்ளனர்)

     குற்றவியல் நடைமுறைச் சட்டம் 129, 130 பிரிவுகளிலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 99-இலும்; உள்ள விதிமுறைகளைக் காலில் போட்டு மிதித்துவிட்ட காவல்துறையினர், போராட்டம் செய்தவர்களை எச்சரிக்கவோ, தண்ணீர் பாய்ச்சவோ, வானத்தை நோக்கிச் சுடவோ, ரப்பர் குண்டுகளால் சுடவோ, முழங்காலுக்குக் கீழே சுடவோ இல்லாமல் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் அவ்விடத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுடப்பட்டவர்களை இழுத்து வந்த சாதிவெறி பிடித்த காவல்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவர்களைக் கூட பூட்சு கால்களால் மிதித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அடித்து காவல்துறை வாகனங்களில் ஏற்றப் பட்ட இன்னொரு 3 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோனதாக பின்னர் அறிவிக்கப்பட்டனர். ஆனால், 3 பேரின் உடலில் தோட்டாக்கள் துளைத்ததால் உயிரிழப்பு நடக்க வில்லை என பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த 3 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர்.

     படுகொலை செய்யப்பட்ட 22 வயதான கீழக்கொடுமலூர் தீர்ப்புக் கனியின் உடலில் தோட்டா எதுவும் பாயவில்லை. அவர் முழுமையாகவே அடித்தே கொல்லப்பட்டுள்ளார். 65 வயதான காக்கனேந்தல் வௌளைச்சாமி மற்றும் சடையனேரி முத்துக்குமார் ஆகியோருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தாலும் அது அவர்களைக் கொல்லவில்லை. மாறாக இவர்கள் இருவரும் காவல்துறையினரால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். 

     இந்தக் கொடுமையான நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவ்வளவு கொடுஞ்செயல்களைச் செய்தும் வெறி அடங்காத காவல்துறையினர் 2,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆட்களைக் கைது செய்வதன் பேரில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தலித் மக்கள் வாழும் ஏராளமான கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் அச்சுறுத்தலுக்குள்ளான தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறி நீண்டநாட்கள் வெளியூர்களில்தான் தங்கினர். தேடுதல் வேட்டையிலிருந்து தப்பிப்பதற்காக காட்டுப் பகுதியில் ஒளிந்திருந்தபோது பாம்பு கடித்து இரண்டு பேர் பலியானார்கள் (இவர்களுடன் சேர்த்து மொத்தப் பலி 9 ஆகிறது). கிராமங்களுக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு தனியாக இருந்த பெண்களிடம் தங்கள் சாதித்திமிரையும், அதிகாரத்திமிரையும் காட்டியுள்ளனர்.

      பல வாரங்களுக்கு 144 (ஊரடங்கு) தடை உத்தரவை அமலில் வைத்து மக்களை அச்சுறுத்தியது தமிழக அரசு. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என்று இதுவரை மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல நூறு பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

      இவை எல்லாவற்றையும் விட மிகக் கொடுமையான விசயம் என்னவென்றால், சாதிவெறி பிடித்த ஊடகங்களும், பாசிச பார்ப்பன ஜெயா அரசும் நடந்த படுகொலைகளைப் பற்றிய தவறான தகவல்களைப் பொதுமக்களிடம் பரப்பி, இதுபோன்ற ஒடுக்குமுறைகளுக்கு மக்களிடம் 'ஒப்புதல்' பெற்றனர். இவர்கள் பொய்களின் வாயிலாக மக்களிடையே அவர்களை அழிக்கவே 'ஒப்புதல்' பெறுவதில் வல்லவர்கள்.

      ஜெயா தனது சட்டமன்ற உரையில், ''மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்துதான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் திரு.ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்துப் புறப்பட்டிருக்கிறார்.  அதைத் தொடர்ந்துதான் இந்தக் கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன” என்று கூறினார். இதைத் தான் நாம் 'ஒப்புதலை உருவாக்குதல்' என்கி றோம். ஆக, இந்தப் படுகொலைகள் நடந்ததற்குக் காரணம் அந்தச் சிறுவன் பழனிக்குமார்தானா? திட்டமிட்ட ஒரு 'கிளைமாக்சு'க்குத் தேவையான முன்கதையைத் தயாரித்து விட்டனர். இனி எத்தனை கமிசன்கள் அமைக்கப்பட்டாலும் அவர்கள் விளக்கிச் சொல்லப் போவது இந்தக் கதையைத்தான்.

திட்டமிட்ட பச்சைப் படுகொலைகள்:

      பரமக்குடி படுகொலைகள் அனைத்தும் சில வாரங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டவை. செப்டம்பர் 11-க்கு சில நாட்களுக்கு முன்பு ஆப்பநாடு மறவர் சங்கமானது, முதுகுளத்தூர் தேவர் திருமண மகால் தொடர்பான சொத்துப் பிரச்சனையைப் பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளது. அதற்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "நமது ஐயா பசும்பொன் தேவர் அவர்களின் குருபூஜையைப் போல வருடாவருடம் கூட்டம் அதிகமாகி வரும் இம்மானுவேல் குருபூஜையை அரசு விழாவாக நடத்த அனுமதி வழங்கவிடாமல் தடுப்பதற்காக கிராமவாரியாக கீழத்தூவல் கிராமத்திற்கு திரண்டு வரவேண்டும்”என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

      அ.தி.மு.க.வின் முக்கிய ஓட்டு வங்கியாக தேவர் சாதியினர் உள்ளதை பயன்படுத்தி ஆதிக்க சாதி வெறிபிடித்த சிலர், தங்கள் சாதியைச் சேர்ந்த சசிக்கலா-நடராஜன் மூலமாக இப்படுகொலைக்கு முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர். சாதி வெறியர்களும், ஜெயா அரசும் போட்ட கூட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நான்கு நாட்களுக்கு முன்பே சென்னை அடையாறு துணை ஆணையராக (DC) உள்ள செந்தில் வேலன் பரமக்குடிக்கு 'ஒரு நாள் பணிக்காக' கொண்டு வரப்பட்டுள்ளார்.

    பச்சேரி சுவரில் முத்துராம லிங்கத்தைப் பற்றி எழுதி, பழனிக்குமாரைப் படுகொலை செய்து, ஜான் பாண்டியனைக் கைது செய்து தலித் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் செய்த மறியலை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஒருநாள் முன்னதாகவே காவல்துறை பெரும் தயாரிப்பு செய்துள்ளது. இராமநாதபுரம் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல் மறுநாள் நடத்தவிருக்கும் தாக்குதலின் போது தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக முதல் நாள் இரவு 10 மணிக்கு பூட்டியிருந்த கடையைத் திறக்கச் சொல்லி 'கிரிக்கெட் ஹெல்மெட்' வாங்கியுள்ளார். தான் 15 வருடங்களாக 'ஹெல்மெட்' அணிவதில்லை எனவும், தனது தலை பெரியதாக உள்ளதால் அரசாங்க ஹெல்மெட் அணிவதில்லை எனவும் பத்திரிகைக்கு வெளிப்படையாகவே பேட்டி அளித்துள்ளார். காவல் நிலையங்களில் தலித் காவலர்களின் பெயர்களில் துப்பாக்கிகள் கையெழுத்திடப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. தலைவர்கள் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றவுடன் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். கற்கள், உருட்டுக் கட்டைகள் ஆகியவற்றை காவல்துறையினர் முன்கூட்டியே தயாரித்து வைத்துள்ளனர். இவை அனைத்தும் இப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நிரூபிக்கின்றன. 

      தங்களது மிகப்பெரிய ஓட்டு வங்கியாக உள்ள தேவர் சாதிவெறி 'தெய்வங்களை' மகிழ்விப்பதற்காக அ.தி.மு.க. அரசு 9 தலித்துகளை நரபலி கொடுத்துள்ளது. இப்படுகொலைக்காக ஜெயா அரசிற்கு நன்றி தெரிவித்து தேவர் சங்கங்கள் சுவரொட்டிகள் ஒட்டின.

எல்லா தேர்தல் கட்சிகளும் சாதிக் கட்சிகளே!

      படுகொலைக்கு கண்டனம் கூட தெரிவிக்காத தி.மு.க. தலைவர் கருணாநிதி, மகிழ்ச்சி வௌ;ளத்தில் மூழ்கியிருக்கும் தேவர் சாதி மற்றும் பிற சாதிகளைச் சேர்ந்த ஆதிக்கவாதிகளை 'வருத்தப்பட வைக்காத' ஒரு அறிக்கையை வெளியிட்டார். 'துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமே' என்று தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கினார்.

      தே.மு.தி.க.வைத் சேர்ந்த சாதிவெறி பிடித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "இந்நிகழ்ச்சியில் அரசு மீது தவறில்லை. நீதி விசாரணை தேவையில்லை” என தெரிவித்தார். பரமக்குடியில் பல தலித் இளைஞர்கள் தே.மு.தி.க. கொடியை எரித்து, கட்சியிலிருந்து விலகியவுடன் அரண்டுபோன பண்ருட்டி உடனே தனது பேச்சிற்கு வேறு விளக்கம் கொடுத்தார். இதைப் பார்த்ததும் மற்ற தேர்தல் கட்சிகளும் சுதாரித்துக் கொண்டு 'தெளிவாக' நடக்கத் தொடங்கின. காங்கிரஸ் சிதம்பரம், 'என்ன சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று தெரியாமல் கருத்து கூற முடியாது' என்று கூறி ஒதுங்கிக் கொண்டு, காயம்பட்டு (?) சிகிச்சை பெற்று வரும் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டலை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

      மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் படுகொலையைக் கண்டித்தாலும் பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கு அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வைகோ, சீமான் போன்றோரெல்லாம் நிவாரணத்தைக் கூட்டிக் கொடுக்கச் சொல்லி அறிக்கை விட்டுவிட்டு, பின்னர் அந்தப் 'பாவத்தைக்' கூட அக்டோபர் 30 அன்று பசும்பொன்னில் கழுவிக் கொண்டனர்.

      தனது ஓட்டு வங்கியில் பெரும் பிரிவினரான தேவர் சாதியினரை மகிழ்விக்க ஜெயா அரசு ஏற்கனவே 1995-இல் கொடியங்குளத்தில் தலித் மக்கள் மீது ஒரு காவல்துறைத் தாக்குதலை நடத்தியது. அங்கு தலித் மக்கள் வீடுகள், உடைமைகள் அழிக்கப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்ன. குடிநீர் கிணற்றில் விசத்தைக் கலந்தனர்.

      அதேபோல, தாமிரபரணி ஆற்றங்கரையில் மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தி.மு.க. கருணாநிதி அரசு ஒரு கொடூரத் தாக்குதலை நடத்தி 17 பேரைக் கொன்றது. ஆற்றிற்குள்ளிருந்து வெளியேறித் தப்பிக்க முயன்ற வயது முதிர்ந்தவர்களைக் கூட நீரில் அமிழ்த்தி, காவல்துறை நடத்திய கொடூரத்தை யாரும் மறக்க முடியாது.

      சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியில், உத்தப்புரம் பிரச்சனையை ஒட்டி எழுமலை-இ.கோட்டைப்பட்டியில் நடந்த மறியலின் போது ஊருக்குள் புகுந்த காவல்துறை, வீட்டிற்குள் உணவருந்திக் கொண்டிருந்த சுரேஷ் என்ற இளைஞரை வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்றது.

      இப்படி தலித் மக்களைப் பச்சைப் படுகொலைகள் செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்று தி.மு.கவும், அ.தி.மு.க.வும் நிரூபித்துவிட்டன.

இந்திய வரலாற்றில் சாதியும், வர்ணமும்:

      சாதிக் கொடுமைகள் பற்றி நாம் புரிந்து கொள்ளவும், ஒவ்வொரு சாதிக்கும், அரசதிகாரத்திற்கும் உள்ள உறவைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள இந்தியாவின் வரலாற்றைப் படிக்க வேண்டிள்ளது. இந்தியச் சமூகம் ஒரு சாதிய சமூகமாகும். பார்ப்பனர் - சத்திரியர் - வைசியர் - சூத்திரர் - பஞ்சமர் (தீண்டத்தகாதவர்கள்) என்று படிநிலைப்படுத்தப்பட்ட சமூகமாகும். இந்திய வரலாற்றில் நடந்த பல்வேறு பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் சாதிப்படிநிலை அமைப்பிலும், அதிகாரப் பகிர்விலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே வந்துள்ளது. இந்தியாவில் உருவான முதல் அரசுக் கட்டமைப்பில் பிராமணர்கள் மட்டுமே ஆளும் வர்க்கமாக இருந்தனர். கௌதம புத்தர் பிராமணியத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர்களின் போராட்டமாக வெடித்தது. பின்னர், மௌரியப் பேரரசு ஏற்படுத்தப்பட்ட போது,  இப் போராட்டத்தைத் தனக்குச் சாதக மாக்கிக் கொண்ட சத்திரியர்கள் ஆளும் வர்க்கமானார்கள். பின்னர் அவர்கள் பிராமணர்களுடன் சமரசம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு பல்வேறு இடங்களில் வைசியர்கள் தங்களது சமூக அந்தஸ்திற்காகவும், தங்கள் வணிகத்தை ஒடுக்குகின்ற நிலப் பிரபுத்துவ அரசிற்கு எதிராகவும் போராடியுள்ளனர். அவர்களும் ஒரு கட்டத்தில் பூணூல் அணிபவர்களாக மாறி,  ஆளும் வர்க்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். அவர்களது போராட்டமும் பார்ப்பனர்கள், சத்திரியர்களோடு சமரசம் செய்து கொள்வதில் முடிவடைந்தது. பின்னர் சூத்திரர்கள்... அடிமை வேலை செய்பவர்களாகவும், வேசி மக்கள் என்றும் பழித்துரைக்கப்பட்ட பெரும்பான்மை மக்களான சூத்திரர்களின் ஒரு பிரிவினர் தொடர்ந்து ஆளும் வர்க்கமாக மாறி வந்தனர். தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையிலான போராட்டமானது சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள், மேல் வர்ணத்தினருக்கு எதிராக நடத்தும் போராட்டமாக இருந்தது.

      பெரியார் காலக்கட்டதிலேயே அரசாட்சியை நடத்துபவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே என்ற நிலை மாறி அதில் சூத்திர சாதிகள் பெருமளவில் பங்கெடுக்கத் தொடங்கின. பெரும்பான்மை மக்களின் வாக்குகளை வைத்துதான் ஆட்சியமைக்க முடியும் என்ற தேர்தல் நடைமுறையில் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்ட (சூத்திர) சாதிகளில் ஒரு கணிசமான பிரிவினர், ஆளும் வர்க்கத்தினராக வளர்ந்தனர். இவர்கள் பார்ப்பனியத்துடனும், பிராமணர்களுடனும் சமரசம் செய்து கொண்டனர். சூத்திரர்கள் பலர் தங்களை 'சத்-சூத்திரர்கள்' என்று அழைத்துக் கொண்டு, 'சத்திரியர்” நிலைக்கு உயர்த்திக் கொண்டதாகக் கூறினர். இன்று சூத்திரச் சாதியினர் அதாவது பிற்படுத்தப்பட்ட சாதியினர் சாதிப் படிநிலை அமைப்பை தங்கள் மேல் திணிக்கப்பட்ட இழிவுநிலையாகப் கருதாமல் அதை பஞ்சமர்களை - தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட தலித் மக்களை - ஒடுக்கும் கருவியாகவே பயன்படுத்துகின்றனர். தங்கள் சாதியை உயர்வானதாகவும், தாங்கள் ஆண்ட பரம்பரையினர் என்றும் கூறிக்கொண்டு சாதி அமைப்பை, பார்ப்பனியத்தைப் பாதுகாப்பவர்களாக உள்ளனர். உண்மையில், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அனைத்து மக்களும் ஆளும் வர்க்கமாக மாறிவிடவில்லை. அவர்களில் ஒரு மிகச்சிறிய பிரிவினரே ஆளும் வர்க்கமாக உள்ளனர். ஆனால் உழைக்கும் மக்களாக உள்ள பிற பிற்படுத்தப்பட்ட மக்களிடம் சாதி வெறியைப் புகுத்தி, தக்கவைத்து, அதை பயன்படுத்திக் கொண்டு, அந்த சிறிய 'ஆளும் வர்க்க பிற்படுத்தப்பட்ட சாதிக் கும்பல்' தமிழகத்தை ஆண்டு வருகிறது.

      தங்களது வறுமையை, ஒடுக்கப்பட்ட நிலையை உணர்ந்து அதற்குக் காரணமான ஆளும் வர்க்கமாக உள்ள தங்களது சொந்தச் சாதியினரை எதிர்த்துப் போராடாமல், சாதிப் படிநிலையில் தங்களுக்குக் கீழே உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைப்படுத்துவதிலும், அவர்கள் மீது வன்கொடுமை புரிவதிலும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் புளகாங்கிதம் அடைகின்றனர்.

தென்மாவட்டங்களில் தலை விரித்தாடும் தேவர் சாதி வெறி:

      தென் மாவட்டங்களில் தேவர் என்று சொல்லப்படும் மறவர், கள்ளர், அகமுடையர் ஆகிய சாதிகளைச் சேர்ந்த சாதிவெறியர்களின் வன்கொடுமைகள் பல நூற்றாண்டு வரலாறு கொண்டதென்றாலும், பசும்பொன் முத்துராமலிங்கத்தின் காலக்கட்டம் முக்கியமானதாகும். துவக்கத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்த பசும்பொன் முத்துராமலிங்கம் பதவிப் பிரச்சனைகளால் அதிலிருந்து வெளியேறி, வடநாட்டில் முற்போக்கான கட்சியாக செயல்பட்டுவந்த ஃபார்வட் ப்ளாக் கட்சியை தமிழ்நாட்டில் ஒரு சாதிக் கட்சியாகவே தொடங்கினார். தலித் மக்கள் இம்மானுவேல் தலைமையில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், அவற்றைக் கட்டிக்காத்து வந்த தேவர் சாதிவெறியர்களுக்கு எதிராகவும் போராடி எழுச்சி பெற்று வந்தனர். இம்மானுவேல் 1953 இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கினார். 1954 இல் அருப்புக்கோட்டையில் இரட்டைக் குவளை எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். 1956 இல் முதுகுளத்தூரில் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் பங்கேற்பு மாநாட்டை நடத்தினார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இராமநாதபுரம் பகுதி தலித் மக்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் இருந்தனர். 

      1957 இல் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் முத்துராமலிங்கம் நிறுத்திய சசிவர்ணத்திற்கு வாக்களிக்காமல் காங்கிரசுக்கு தலித் மக்கள் வாக்களித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் நடத்திய தொடர் தாக்குதலில் மொத்தம் 42 தலித்துகள் பலியானார்கள். இந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இம்மானுவேல் தம் தரப்பு நியாயங்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்தார். கலவரத்திற்குக் காரணமான முத்துராமலிங்கத்திற்கு எழுந்து நின்று வணக்கம் சொல்லாத, யாரும் எதிர்த்துப் பேசத் துணியாத அவர் முன்பு உண்மைகளைத் துணிச்சலுடன் பேசிய இம்மானுவேல் மறுநாள் சாதி வெறியர்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

      இம்மானுவேல் படுகொலைக்குப் பிறகு தலித் மக்கள் எழுச்சி பெற்று தங்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்குப் பதிலடி கொடுத்தனர். எழுச்சி பெற்ற அம்மக்கள் மீது தேவர் சாதி வெறியர்கள் கொடூரத் தாக்குதல்கள் நடத்தினர். கலவரத்தில் இறந்த 26 பேர்களில் 18 பேர் தலித் மக்கள். கொளுத்தப்பட்ட 2,879 வீடுகளில் 2,731 வீடுகள் தலித் மக்களுடையது. காங்கிரசு அரசு தனது காவல்துறை மூலம், தங்களுக்கு வாக்களித்த தலித் மக்களைப் பாதுகாத்தது. கொடுஞ்செயல்களைச் செய்த சாதி வெறியர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்கியது.

      முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் மட்டுமல்ல, மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் சாதி வெறியர்கள் மிகக் கொடுமையான வன்கொடுமைகளை நடத்தினர். மதுரை-மேலவளவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் ஊர்த் தலைவராகத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதற்காக படுகொலை செய்யப்பட்டதும், தேனி-போடிக் கலவரம் என்று அறியப்படும் கலவரத்தின் போது தலித் மக்கள் மீது கொடும் தாக்குதல்களை நடத்தியவர்களும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவிடாமல் வன்கொடுமை புரிந்தவர்களும், சென்னகரம்பட்டி இரட்டைப் படுகொலையை நடத்தியவர்களும் இதே சாதியைச் சேர்ந்த சாதி வெறியர்கள்தாம்.

      மிகக்கடுமையாக உழைக்கும் மக்களே தேவர் சாதிகளைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள். ஆனால், இவர்களின் தலைவர்களாக பசும்பொன் முத்துராமலிங்கம் முதல் இப்போது உள்ள தேவர் சாதிக் கட்சி தலைவர்கள் வரை மிகப்பெரிய பண்ணையார்களாக, முதலாளிகளாக இருந்து கொண்டு, இவர்களின் சாதி வெறியைப் பயன்படுத்தி பிழைப்பு நடத்துபவர்களாக உள்ளனர்.

     இந்தியாவில் ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் என்பது சாதிய-நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட முடியாததாக உள்ளது. இந்தியாவின் சுயசார்புக்கான, விடுதலைக்கான போராட்டம் என்பது சாதி ஒழிப்புடன் இணைந்தது. சாதிய ஒடுக்குமுறை அற்ற சனநாயக சமூகத்தைப் படைக்கும் பணியை ஒதுக்கிவிட்டு, உலகமயம், தனியார்மயம், தாராளமயம் உள்ளிட்ட ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த முடியாது. சாதிக் கொட்டடிகளாக இருக்கும் கிராமங்களில் வாழும் தலித் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அவர்களுக்கு நிலம் தேவை. தலித் மக்களின் விடுதலை என்பது, நிலத்திற்கான போராட்டத்திலும், சாதியப் பண்பாட்டை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்திலும்தான் இருக்கிறது. 

     பெரும்பான்மையான உழைக்கும் மக்களை சாதிய சிந்தனையிலிருந்து மீட்க வேண்டும். இதை நடைமுறைப் படுத்தாமல் சாதி ஒழிப்பு என்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவரும் தன்னுடைய சொந்த சாதியின் சாதிவெறியை விமர்சனம் செய்து கொள்பவனாக மாற்ற வேண்டிய கடமை சாதி ஒழிப்புக்காக போராடும் ஒவ்வொருவருக்கும் உண்டு. இப்படிச் செய்யாமல், பல 'தமிழ்' தலைவர்கள் சொல்வதைப் போல 'சாதியைக் கடந்து' ஒன்று சேர்தல் என்பது தலித்துகள் தங்களது விடுதலையை ஒத்திவைத்துவிட்டு வருவதே ஆகும். மாறாக, நாம்... தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் 'சாதியை எதிர்த்து' ஒன்று சேர்வோம். இந்த 'உழைக்கும் மக்கள்' ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுபவர்களாக மட்டுமல்ல... எங்கு தலித் சமூகத்தின் மீது வன்கொடுமை நடக்கிறதோ, எங்கே சாதிய ஒடுக்குமுறை ஏதேனும் ஒரு வடிவத்தில் நடக்கிறதோ அங்கு முன்னணியில் நின்று போராடும் மக்களாயிருப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக