செவ்வாய், 20 டிசம்பர், 2011

கேரள அரசு மீது நடவடிக்கை: ஜான் பாண்டியன் வலியுறுத்தல்

தேனி, டிச. 19: பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் கேரள அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனியில் திங்கள்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜான் பாண்டின் கூறினார்.தேனி பகவதியம்மன் கோவில் திடலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முல்லைப் பெரியாறு அணை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் மாநிலத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலர் நெல்லையப்பன், தேர்தல் பிரிவுச் செயலர் முத்துராஜ், மாநில துணைச் செயலர் முகமது சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தை நிறைவுசெய்து ஜான் பாண்டியன் பேசியது: கேரளத்தில் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. கேரள அரசின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்து தமிழர்கள் அனைவரும் கட்சி, சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டு போராடி வருகின்றனர். பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் கேரள அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையில் நீர் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்றார்.உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு தேனி-மதுரை சாலையில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை தேனியில் இருந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக