புதன், 25 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை: ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது: மதுரை ஜெயிலில் அடைப்பு

பசுபதி பாண்டியன் கொலை:  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது: மதுரை ஜெயிலில் அடைப்பு
 
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 10-ந்தேதி திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனம்பட்டியில் படுகொலை செய்யப்பட்டார்.
 
இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வள்ளியூர் கோர்ட்டில் ஆறுமுகச்சாமி, அருளானந்தன் ஆகிய 2 பேர் சரணடைந்தனர். அவர்களை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.  
 
போலீஸ் விசாரணையில் பசுபதி பாண்டியன் கொலையில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கினர்.
 
இந்த நிலையில் பசுபதி பாண்டியன் கொலைக்கு உடந்தையாக இருந்த நிர்மலா மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி (வயது27) ஆகிய 2 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
 
முத்துப்பாண்டியன் திண்டுக்கல் அருகே உள்ள கரட்டழகன்பட்டியை சேர்ந்தவர். தற்போது திண்டுக்கல் ஊராட்சி மன்றக்குழு உறுப்பினராக உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்த அவர் அக்கட்சியில் இருந்து விலகி ஜான்பாண்டியன் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வந்தார்.
 
பசுபதி பாண்டியனுடன் நெருக்கமாக பழகி வந்த முத்துப்பாண்டி, நிர்மலாவுடன் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டம் வகுத்து கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.  
 
முத்துப்பாண்டி, நிர்மலா ஆகிய 2 பேரையும் இன்று காலை 6 மணி அளவில் திண்டுக்கல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு லதா முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு லதா உத்தரவிட்டார்.
 
இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் மதுரை ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக