புதன், 4 ஜனவரி, 2012

ஜாதி வெறியர்களின் கைகளிலோ விடுதலையின் குறியீடு…









இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்



ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,

மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.

அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்…

ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!….

இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்.





மேலே நீங்கள் கண்டது வெள்ளையர்களுக்கு எதிராக மக்களை அழைக்கும் சின்ன மருதுவின் திருச்சி அறிக்கை. மக்கள் நலனும் வெள்ளையர்களை எதிர்த்து காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடுவதும் வேறுவேறல்ல என அறிவிக்கும் முதல் அறிக்கை. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திப்பு முதல் துந்தாஜிவாக் வரை கட்டியமைத்த கூட்டமைப்பை கட்டிக்காக்க தீரத்துடன் போராடிய மருதிருவரின் குருபூஜைகள் இப்போது கொண்டாடப்படுகின்றன. அவர்களின் தன்னலமற்ற வீரத்திற்காகவோ நாட்டுப்பற்றுக்காகவோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களின் தியாகத்திற்காகவோ அல்ல. ஜாதிக்காக. யார் கொண்டாடுவது? பார்ப்பனீயத்தின் அடிவருடிகளாக அடக்குமுறை சாதீயத்திமிரையே பெருமையாக முறுக்கித்திரியும் தேவர்சாதி குறும்பைகள். ஆண்டுதோறும் தேவர் குருபூஜை என்ற பெயரில் ஒரு ஜாதி வெறியனை கொண்டாடும் கொண்டாடும் கூட்டம், சின்ன மருது வெஞ்சினத்துடன் யாரை தன் அடிமயிருக்கு சமம் என கொதித்தெழுந்தானோ அவர்கள்; முதல் சுதந்திரப்போரை மக்கள் போராக‌ நடத்திக்காட்டிய அந்த நாயகர்களை சாதியப்பட்டியில் அடைத்து ஆதிக்கவெறியர்கள் விழா கொண்டாடுவதை, விடுதலை வேட்கை கொண்டவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?







தேவர் ஜெயந்தி வருகிறது என்றாலே ஒடுக்கப்பட்டவர்கள் பயத்துடன் நாட்களை கழிக்கவேண்டிய அளவுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் ஜாதீய அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. மன்னர் பரம்பரை என்று கூறிக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிடுவதை எந்தக்கட்சி அரசானாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வாடிக்கையாக இருக்கிறது இங்கு. மருதிருவரையும் சாதித்தூபம் போட பயன்படுத்துவதையும் இந்த நோக்கில்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அரசு.







எந்தக்கட்சி அரசானாலும் இப்படி சாதி வெறியர்களுக்கு துணைபோவது ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளின் பிழைப்புவாத அரசியல் என்று பொதுமைப்படுத்தி குறுக்கிவிடவும் முடியாது, அதையும் மீறி உணர்வு ரீதியான காரணமும் இருக்கிறது. அன்று தங்களின் எழுச்சி மிக்க வீரத்துடன் மக்களையும் இணைத்து வெள்ளையர்களை எதிர்த்து போராடிய போது “எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை” என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் கூறினான். அன்று நாட்டை ஆண்டுகொண்டிருந்த வெள்ளையர்களுக்கும் புறியவில்லை, இன்று ஆண்டுகொண்டிருக்கும் இவர்களுக்கும் புறியவில்லை அவர்கள் ஏன் போராடினார்கள் என்று. அன்னியன் நம்மை ஆள்வதா? என்று கொதித்தெழுந்தது அன்றைய இளைஞர் கூட்டம். நாங்களும் அன்னியர்கள் தாம் என்று தங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளின் மூலமும் நிரூபித்துவருகின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள். எங்கே நம் இளைஞர் கூட்டம்?







சொந்த மக்களின் வயிறிலடிக்கும் துரோகிகளிடமும், சாதிவெறிக்கும்பலிடமும் அடையாளம் தெரியாமல் கரைந்துபோய்விடுவதற்கா அன்று அவர்கள் போராடினார்கள்? இல்லை, அவர்களின் வரலாறு நமக்கு போராடும் துணிவையும், ஏகாதிபத்தியங்களை விரட்டியடிக்கும் தீரத்தையும் ஒருங்கே ஊட்டும் உணவு. அதை நாம் மீட்டெடுப்போம், கடைப்பிடிப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக