புதன், 29 பிப்ரவரி, 2012

பரமக்குடி படுகொலைகளும், சி.பி.ஐ. விசாரணையும்



கடந்த 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் நாள், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன் என்பார் ஆதிக்கச் சாதி இந்துக்களால் தனது 33ம் வயதில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சமூக நீதிக்காகப் போராடியதன் காரணமாக படுகொலை செய்யப்பட்டதால், அவர் பட்டியலின மக்களால் 'தியாகி'யாக கருதப்பட்டதோடு, அவரது  ஒவ்வொரு நினைவுநாளின் போதும் அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதிக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பட்டியலின மக்கள் போன்றோர் பெருந்திரளாக ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக அணிவகுத்து, அவருக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்தார்கள். அவ்வப்போதைய ஆளும் திராவிட அரசுகளின், ஆதிக்க ஜாதியினருக்கு ஆதரவான செயல்பாடுகளும், பட்டியலின மக்களுக்கு எதிரான திட்டமிட்ட கண்டுகொள்ளாமையையும், அடக்குமுறைகளையும் மீறி ஆண்டுக்கு ஆண்டு இப்படியாகத் திரளும் மக்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைக் கடந்தும், கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அரசியல் கட்சிகளைக் கடந்து, பட்டியலின மக்களின் தன்னெழுச்சியான ஒன்றிணைதலைக் கண்ட ஆதிக்க ஜாதியினருக்கு இது எரிச்சலூட்ட ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 10.09.2011 அன்று, கமுதி வட்டம் பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பழனிகுமார் என்ற பட்டியலின மாணவர் ஆதிக்க ஜாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியின் தலைவரான பெ. ஜான் பாண்டியன் அந்த ஊருக்கு செல்லவிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கு மவட்ட ஆட்சித் தலைவரால் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
   
மறுநாள், தியாகி இம்மானுவேல் சேகரனது 54ஆவது நினைவு நாளான 11.09.2011 அன்று அதிகாலை முதலே, பரமக்குடி வழியாகச் செல்லும் அனைத்து போக்குவரத்து வழித்தடங்களும் வழக்கம்போல வேறுபாதையில் மாற்றிவிடப்பட்டது. காலைமுதலே அவரது நினைவிடத்தில் மக்கள் திரள ஆரம்பித்தார்கள். இதற்கிடையில் ஜான் பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். அந்த செய்தி பரமக்குடியில் திரண்டிருந்த மக்களுக்கு எட்டிய உடனே, அவரை விடுதலை செய்யக்கோரி சிலர் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக அறவழியில் ஒன்றுகூடி ஆர்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபடுகிறார்கள். சுமார் 200பேர் அளவில் அங்கு திரள்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, காவல் துறையினரின் காட்டு தர்பாரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 6பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 33பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது.

மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் பாண்டியன் அவர்களை வெளிஉலகுக்கு கொண்டுவரக்கோரி, வழக்கறிஞர் இரஜினிகாந்த் மற்றும் விஜேந்திரன் ஆகியோரால் ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்படுகிறார்.       

அந்த வாரமே, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள், பரமக்குடியில் படுகாயம் அடைந்த 33பேருடைய உடல்நிலை குறித்து, மதுரை மற்றும், இராமநாதபுரம் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதிகளும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்ததில், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனுவில் கோரியபடியே அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டது. அவர்களும் பார்வையிட்டு கூட்டு அறிக்கையும் தாக்கல் செய்தார்கள். அந்த கள ஆய்வு அறிக்கையின் படி, படுகாயமடைந்தவர்களில் மூன்று பேரின் உடல்நிலை மிகவும் கவலைகிடமானதாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அரசின் செலவில் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டுமென வழக்கறிஞர்களால் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையில் மாநில அரசானது, மேற்கண்ட நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கணேசன், பன்னீர்செல்வம், ஜெயபால், தீர்ப்புக்கனி, முத்துக்குமார், வெள்ளைச்சாமி ஆகிய 6பேரது குடும்பத்தினருக்கும் தலா ஒரு இலட்சம் ருபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பு செய்தது.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் முருகன், புகழேந்தி, திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), சாமுவேல்ராஜ் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), செல்வம், மள்ளர் நாடு நல சங்கம், வையவன், டாக்டர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சட்ட பாதுகாப்பு மையம், சத்திய மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி) மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் குருவிஜயன் (பகுஜன் சமாஜ் கட்சி) ஆகிய பதினோறு மனுதாரர்கள் இந்த வழக்கை மத்திய குற்ற புலனாய்வுக்கு மாற்ற கோருதல், நிகழ்வில் தொடர்புடைய காவல் அதிகாரிகளை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும், என்பது போன்ற பல்வேறு பரிகாரங்களைக் கோரி பொதுநல வழக்குகளை சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்தார்கள். நிகழ்விடம் மதுரை உயர்நீதிமன்ற விசாரணை எல்கைக்குள் வருவதால் அனைத்து வழக்குகளும் மதுரைக்கு மாற்றப்பட்டது.

எங்களுக்கு வேண்டியது நீதி; நிதி அல்ல:

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த ஒவ்வொரு தருணத்திலும், சமூக நலனில் அக்கறை கொண்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூறுக்கும் அதிகமான வழக்கறிஞர்களும், பாதிக்கப்பட்ட மக்களும், பல்வேறு அமைப்புகளிச் சேர்ந்தவர்களும் அரசியல் கட்சியினரும் பெருந்திரளாக நீதிமன்றத்தில் திரண்டார்கள். இழப்பீடு தொகையை முன்னிலும் அதிகமாக அறிவித்து அதனை ஏற்றுக் கொண்டு வழக்கினை தள்ளுபடி செய்யக்கோரி காவல்துறையின் வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதை தொடர்ந்து, "எங்களுக்கு வேண்டியது நீதி; நிதி அல்ல" என்பது போன்ற பல்வேறு சுவரொட்டிகளும், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது விசாரணை உள்ளிட்ட வழிகளிலும் சமூக நீதியில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகளால் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. குறிப்பாக, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், பரமக்குடியில் காவல்துறையினரின் கோர தாண்டவத்தை கண்டித்து சிறப்பு கூட்டம் நடத்தியதோடு, மத்திய குற்றப் புலனாய்வுத் துரையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானம் ஏற்றியது. இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் குழுக்கள் பரமக்குடிக்குச் சென்று கள ஆய்வு செய்தார்கள். 

பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு கடந்த 23.12.2011 அன்று நீதிபதிகள் கே. என். பாட்சா மற்றும் எம். வேணுகோபால் ஆகியோருக்கு முன்பாக வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள். பொ.இரத்தினம், சங்கரசுப்பு, இராதாகிருஷ்ணன், என்.ஜி.ஆர்.பிரசாத், பிரபுராஜதுரை மற்றும் ரஜினி ஆகியோரும், அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர். நவநீத கிருஷ்ணன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர். சுப்ரமணியம் உள்ளிட்ட பலரும் வாதம்செய்தார்கள்.

விசாரணைக்கு ஏற்கத்தக்க தகுதியான வழக்கா?:

வழக்கறிஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டக்கல்லூரி மாணவர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் கட்சியை சார்ந்த உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர் போன்றோரைத் தவிர நிகழ்வில் பாதிக்கப்பட்ட எவரும் வழக்கு தொடரவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கத்தக்க வகையிலான தகுதிபெற்ற வழக்கு அல்ல என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டோர் சார்பாக 20க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் ஏற்கனவே கவல்துறைக்கும், அரசுக்கும் அனுப்பப்பட்டு அதற்கான சான்றுகளும் இங்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு பொது நல வழக்கு. எனவே, வழக்குக்கு தொடர்பே இல்லாத, சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள குடிமக்கள் எவரும் வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களின் சார்பில் வாதிடப்பட்டதை ஏற்றுக்கொண்டு, காவல்துறை தரப்பு வாதத்தை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது விசாரணைக்கு ஏற்கத்தக்க தகுதியான வழக்கே என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

ஒரு நபர் விசாரணை ஆணையம்:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசானது, 'விசாரணை ஆணையங்கள் சட்டம்', 1952 ன் படி, பரமக்குடி நிகழ்வு தொடர்பாக விசாரணை செய்து, இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை தர வேண்டுமென்ற உத்தரவுடன்,  சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி. சம்பத் அவர்களின் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை கடந்த 13.09.2011 அன்று அமைத்துள்ளது. அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்ட பிறகு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். எனவே, இந்த வழக்கை தமிழக காவல்துறை மிகச்சிறப்பாகவே விசாரித்து வருவதால் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டிய தேவையில்லை என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார். அதற்கு, ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது கள ஆய்வு செய்யும் ஒரு அமைப்பு மட்டுமே. அந்த ஆணையமானது தனது கருத்தை அறிக்கை வடிவில் தயாரித்து சில பரிந்துரைகளுடன் சமர்பிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம். எனவே ஆணையத்தின் அறிக்கை வரும்வரையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்தீர்ப்பு நெறிகளைச் சுட்டிக்காட்டி வாதம் செய்தார்கள். மேலும் மாநில அரசின் காட்டுப்பாடில் இயங்கும் ஆணையத்தின் விசாரணையை பாதிக்கப்பட்ட மக்கள் நம்பத்தயாரில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் விசாரணை ஆணையம் வந்தபோது வாயில் கருப்புதுணி கட்டி தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்ததுடன், அந்த ஆணையத்தையும் புறக்கணித்துள்ளார்கள். எனவே, அரசு தரப்பினரின் இந்த வாதமும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சோகமான, அச்சமூட்டுகிற, உணர்ச்சிமிக்க நிகழ்வு:

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், நீதிமன்றமானது, ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக அறவழியில் ஒன்றுகூடி ஆர்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட சாராரின்மீது எந்தவித நியாயமான தேவையும் இல்லாமல் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது ஒரு சோகமான, அச்சமூட்டுகிற, உணர்ச்சிமிக்க நிகழ்வாகும் என்று கூறியது.

பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை: 

குடிமக்களுக்கு வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணையை உத்தரவாதப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மேலும், குடிமக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்யவேண்டிய வகையில், முழுமையான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் வழங்க வேண்டியது அத்தியாவசியமானது. உள்ளூர் காவல் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் எழுந்திருக்கும் சூழலில், அவ்வழக்கில் அதே காவல் அதிகாரிகளே விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கும் சூழலில் விசாரணை குறித்த ஐயப்பாடு எழுவது இயல்பானதே.

விசாரணையானது நியாயமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும். அதேவேளையில் அந்த விசாரணை, பாதிக்கப்பட்டோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைக்கும் வகையிலும் அமைய வேண்டும். 

மத்திய குற்றப் புலனாய்வுத் துறை:

வலுவான மற்றும் அழுத்தமான காரணங்கள் உள்ளதால், இந்த வழக்கில் வெளிப்படையான, நடுநிலையான விசாரணை தேவை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் இந்த தீர்ப்பின் நகல் கிடைத்ததிலிருந்து, பத்து நாட்களுக்குள் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்க வேண்டும். ஏதாவதொரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் அந்த விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். வெளிப்படையான, வீரியமான விசாரணைக்காக, மாநில அரசு தனது பூரண ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் நல்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படியாக பல்வேறு தரப்பினர்களின் தொடர் போராட்டத்தினால், ஊர் கூடி தேர் இழுத்ததின் காரணமாக கிடைத்த ஒரு இடைக்கால வெற்றியே இந்த தீர்ப்பாகும். இதே முனைப்புடன் தொடர்ந்து அடுத்த கட்ட பணிகளை முன்னெடுத்தலில் தான் அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி நாம் பயணிக்க முடியும்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது- ஜான்பாண்டியன் அறிவிப்பு


  
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது- ஜான்பாண்டியன் அறிவிப்பு
நெல்லை, பிப். 28-
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது என அக்கட்சி தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
 
சங்கரன்கோவில் தொகுதியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் பிறகு அரசியல் உயர்மட்ட குழு தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது. 
 
சங்கரன்கோவிலில் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப் படாது. கடந்த காலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் ஜனநாயகம் எப்படி கேலி கூத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்தலை சந்தித்து, காலத்தை வீணாக்குவதை விட கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
எனவே தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எந்த வேட்பாளர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என எண்ணிப் பார்த்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 27 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் நாலு சடுகுடு!



மார்ச் 18-ல் தேர்தலைச் சந்திக்க இருக்கும் சங்கரன்கோவில் தனித்தொகுதி​யில் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்​தும், தங்களுடைய வேட்​பாளர்​களைக் களம் இறக்கி விட்டன. ஆளும் அ.தி.மு.க​-விடம் இருந்து தொகுதியைத் தட்டிப்பறிக்க பிரதான எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போட்டி போடும் நிலையில், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் பற்றிய அலசல்... 
முத்துச்செல்வி: இந்தத் தொகுதியில் போட்டியிட நான், நீ எனப் பலரும் அ.தி.மு.க-வில் வரிந்து கட்டிய சமயத்தில், யாருமே எதிர்பார்க்காமல் இவரது பெயரை ஜெயலலிதா அறிவித்தார். இதனால், இந்தத் தொகுதியில் ஸீட் கேட்டுக் காத்திருந்த பலருக்கும் கடும் அதிருப்தி. அதனால் உள்கட்சியிலேயே சிலர் எதிராகக் காய் நகர்த்துகிறார்கள்.
தொகுதியில் இருக்கும் கணிசமான முக்குலத்தோர் வாக்குகள் இதுவரை அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இருந்தன. ஆனால், சசிகலா குடும்பத்தினர் மீதான அதிரடி நடவடிக்கைகள் அந்த சமூகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற் படுத்தி இருப்பதால், இந்த முறை அந்த வாக்குகள் மொத்தமாகக் கிடைப்பது சந்தேகமே. இது போன்ற பிரச்னைகளை சமாளிக்கத்தானோ என்னவோ, 34 அமைச்சர்களை உள்ளடக்கிய 43 பேர் கொண்ட மெகா குழுவை அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா.
வெற்றி வாய்ப்பு குறித்து முத்துச்​செல்வியிடம் பேசினோம். ''கடந்த தி.மு.க ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் சீர்படுத்தி செம்மையான ஆட்சியை அம்மா நடத்தி வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை அம்மா செயல்படுத்தி வருகிறார். அதை எல்லாம் சொல்லி வாக்கு கேட்பேன். மறைந்த அமைச்சர் கருப்பசாமி விட்டுச் சென்றிருக்கும் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த வாய்ப்பு கொடுக்கும்படி வாக்காளர் களிடம் கேட்பேன், வெற்றி பெறுவேன்'' என்றார் பவ்யமாக.
ஜவஹர் சூர்யகுமார்: தி.மு.க-வில் ஸீட் கேட்டு உள்ளூர், வெளியூர்ப் பிரமுகர்கள் பலரும் காத்​திருந்த நிலையில், யாருமே எதிர்பாராத ஜவஹர் சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இவரை வெற்றி பெற​வைக்க வேண்டும் என்று ஸ்டாலின், அழகிரி தரப்பில் இருந்து அவரவர் ஆதரவாளர்களுக்கு உத்தரவு வந்து இருப்பதால், தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் வேலை செய்கிறார்கள்.
காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த இவர், இடையில் ம.தி.மு.க. பக்கம் தாவி, அதன் பின்னரே தி.மு.க-வுக்கு வந்தவர் என்ற  அதிருப்தி இருக்கிறது. தீவிர வாக்கு சேகரிப்புக்கு இடையே நம்மிடம் பேசிய அவர், ''தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது வழக்குப் போட்டு பழிவாங்குவதில் காட்டும் அக்கறையில் பாதியைக்கூட மக்கள் நலனை மேம்படுத்துவதில் இந்த அரசு காட்டவில்லை. ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்போம் என்று சொன்னார்கள். ஆனால், ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டு இப்போது 10 மணி நேரமானதுதான் சாதனை. சமச்சீர்க் கல்வி, புதிய சட்டமன்றக் கட்டடம், அண்ணா நூலகம் போன்றவற்றை முடக்க நினைப்பதை மக்களிடம் எடுத்துச் சென்று நியாயம் கேட்பேன். எங்களுக்குத்தான் வெற்றி'' என்றபடி கிளம்பினார்.
சதன் திருமலைக்குமார்: வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்தத் தொகுதிக்குள் வருவதால், சொந்த பலத்தைப் பரிசோதிக்க நினைத்து ம.தி.மு.க.  தனியே களம் இறங்குகிறது. வேட்​பாளரான டாக்டர் சதன் திருமலைக்குமார், தொகுதி மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகம். இதே தொகுதியில் 1996-ல் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த இவர், 2005-ல் பக்கத்துத் தொகுதியான வாசுதேவநல்லூரில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-ஆக இருந்தவர். வைட்டமின் 'ப' இல்லாமல் களம் இறங்கி இருப்பது ம.தி.மு.க-வுக்கு மைனஸ். ஆனாலும், ஆளும் கட்சிக்கு இணையாக ஒரு மாதத்துக்கு முன்பே பிரசாரக் களத்தில் இருப்பது சாதகம்.
சதன் திருமலைக்குமாரிடம் பேசியபோது, ''இந்த அரசு மீதும் மக்களுக்கு ஏமாற்றம் வந்துவிட்டது. அதனால், எங்களை மாற்று சக்தியாக மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வும் இந்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இப்போது இருக்கும் அ.தி.மு.க.வும் எதையும் செய்வதாகத் தெரியவில்லை. கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர் நலனுக்காகப் பாடுபடும் வைகோவை இந்த மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையும்'' என்றார் நம்பிக்கையுடன்.
முத்துக்குமார்: தே.மு.தி.க-வுக்கு இந்தத் தொகு​தியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை என்றபோதிலும், ஜெயலலிதாவிட்ட சவாலை எதிர்கொள்வதற்காகவே தனித்துக் களம் இறங்கி இருக்கிறது. வேட்பாளரான முத்துக்குமார் 2006 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு 5,531 வாக்குகள் பெற்றவர்.  விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் இங்கு முகாமிட்டு, கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்யும் திட்டம் இருக்கிறது.
கம்ப்யூட்டர் இன்ஜீனியரான முத்துக்குமாரிடம் பேசுகையில், ''பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் தட்டுப்பாடு போன்றவற்றால் அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேண்டாதவர்களைப் பழிவாங்கும் செயலில் மட்டுமே தீவிரம் காட்டுவதால், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவுக்கு அதிகமாக வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அது, இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும்'' என்றார் உற்சாகமாக.
வாக்காளர்களின் மனதில் இருப்பது யாரோ?

சனி, 25 பிப்ரவரி, 2012

ஜான்பாண்டியன் திமுகவுக்கு ஆதரவு?








தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் இன்று சங்கரன்கோவிலில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சங்கரன் கோவிலுக்கு வந்தார்.


நகரின் வைஸ்ணவி மகாலில் திரளாக கலந்துகொண்ட தனது கட்சியினரிடம் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் தனித்துப் போட்டியிடவேண்டுமா? வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா? என்று கேட்டு பதிலை துண்டு சீட்டில் எழுதித்தருமாறு கேட்டார்.

இதையடுத்து தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொடுத்தனர்.  ரகசிய கருத்து கேட்பு முடிவின்படி
தனித்துப்போட்டியிடுவதா?

அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்று முடிவெடுத்து அறிவிக்கும் அதிகாரம்
கட்சியின் நிறுவனர் ஜான்பாண்டியனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பேசிய ஜான்பாண்டியன்,   ‘’நீங்கள் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டீர்கள்.   நீங்கள்
எதிர்ப்பார்க்கும் வகையில் நல்ல முடிவினை மேற்கொள்வேன்’’ என்றார்.

ஆனால், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களோ திமுகவிற்கே ஆதரவு கொடுப்பதற்கே வாய்ப்புகள் இருக்கலாம் என்று
சூசகமாக தெரிவித்தனர்.














சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது: டாக்டர் கிருஷ்ணசாமி







சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

புதிய தமிழக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி,

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தினேன். அங்கு அடிப்படை வசதிகள் தீர்க்கப்படவில்லை. குடிநீர் வசதி, மயான வசதி போன்ற வசதிகள் இல்லை. கூட்டணி குறித்து விவாதம் செய்தோம்.

ஆளும் கட்சிகள் இடைத்தேர்தலில் அதிகாரம் செலுத்தும் நிலை கடந்த சில ஆட்சிகளில் உள்ளது. அதே நிலை இந்த ஆட்சியில் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். அங்கு 32 அமைச்சர்கள் முகாம் இட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். அவர்களை திரும்ப அழைக்க வேண்டும்.

நெல்லை பொறுப்பாளர்கள் தவிர பிற மாவட்ட பொறுப்பாளர்களை திரும்ப அழைப்பதன் மூலம் பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும். சட்டமன்ற தேர்தல் நடந்து 9 மாதம் தான் ஆகிறது. அதில் அ.தி.மு.க. பெரிய வெற்றி பெற்றுள்ளது.

எனவே இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

எனவே கால விரயம், பொருள் விரயத்தை தவிர்க்க சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது. தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஓரிரு நாளில் அரசியல் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்வோம்.

சென்னையில் நடந்த என்கவுன்டர் சம்பவம் ஏற்புடையதல்ல. 90 சதுரஅடி வீட்டில் இருந்து அவர்கள் தப்பி இருக்க முடியாது. அவர்களை கைது செய்திருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் போட்டியில்லை: கிருஷ்ணசாமி

மதுரை: சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மேலும் அவர், சங்கரன்கோவில் தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும். தொகுதியில் 32 அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு சிறந்தது அல்ல. அவர்களை அங்கிருந்து திருப்பியழைக்க வேண்டும் என கூறினா

புதிய தமிழகம் விரும்பினால் ஆதரவு ஜான்பாண்டியன் பேட்டி

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்


நெல்லை: சங்கரன்கோவிலில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி ஆதரவு கேட்டால், நாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம். இதுவரையில் எந்த கட்சியினரும் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. எங்களின் கோரிக்கைகளை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி வைப்போம். பிப்.25ம் தேதி சங்கரன்கோவில் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் எங்கள் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.
 கூட்டணி குறித்து அதிமுக பேசினால், ஆடித்தபசு விழாவில் எங்கள் சமூகத்தினருக்கு மண்டகப்படி, தியாகி இமானுவேல்சேகரனுக்கு அரசு விழா, பரமக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது  வழக்குப்பதிவு ஆகிய கோரிக்கைகளை முன்வைப்போம். பரமக்குடியில் பலியான குடும்பங்களை பார்க்க முடியாதவாறு எனக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இதை கண்டித்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரிலும் தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். போட்டியின்போது  மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், இன்பராஜ், கண்மணிமாவீரன், மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ்,  இளைஞரணி செயலாளர் பொன்ராஜ், மாணவரணி செயலாளர் அருண் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது - கிருஷ்ணசாமி பேட்டி


நெல்லை: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டுமெனில் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 32 அமைச்சர்களை முதலமைச்சர் ஜெயலலிதா விலக்கி கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

அதிமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் மின்வெட்டு குறையவில்லை. அண்மை காலமாக சட்டம் ஓழுங்கு சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி போலீசார் 5 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வேறு எங்கெல்லாம் கொள்ளையடித்தார்கள் என விசாரித்து இருக்கலாம்.

இந்திய அரசியல் சட்டப்படி நீதித்துறை அனுமதியில்லாமல் யாருடைய உயிரையும் பறிக்க முடியாது. 5 பேரையும் சுட்டுக் கொன்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாளை சித்தா கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும். மாணவர்கள் படிப்பை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்களை அனுப்பியது தவறு. அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க அவர்களை விலக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவிலில் போட்டியா? கிருஷ்ணசாமி பதில்




சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து நாளை மதுரையில் நடக்கும் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என இக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.

நெல்லையில் மேலும் அவர் கூறுகையில்; தி.மு.க., ஆட்சியில் உள்ள குறைபாடுகள் அ.தி.மு.க., நீக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. சென்னையில் நடந்த என்கவுன்டர் தவறானது. இந்த சம்பவத்தில் சந்தேகம் எழுகிறது என்றார்

தேர்தல் விதிமீறல் : கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு




சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேற்று குருவிகுளம் ஒன்றியம் பழைய அப்பனேரி கிராமத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் தேர்தல் விதிமுறை மீறி அந்த கிராமத்தில் கட்சிக்கொடி ஏற்றியதோடு தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்டாராம். இது தேர்தல் விதிமுறை மீறிய செயல் என கூறி டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் மாடசாமி ஆகிய இருவர் மீது திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்குப்பதிவு செய்தார்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி: ஜான்பாண்டியன்



கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி ஜான்பாண்டியன் பேட்டி
 1/1 
சங்கரன்கோவில், பிப்.21 -   சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாக தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.  சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  இடைத்தேர்தல் குறித்து இதுவரை எந்தக்கட்சியும் எங்களை அணுகவில்லை. வரும் 25ம் தேதி எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறுகிறது. அதற்குள் நாங்கள் அறிவித்துள்ள கோரிக்கைகளை ஏற்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்றார். மேலும் அப்படி எந்தக்கட்சியுடனும் கூட்டணி இல்லாத பட்சத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து களம் இறங்கும் என்றும் தெரிவித்தார். தங்கள் கட்சியின் இறுதி முடிவு 25-ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கப்படும் என்று கூறினார். இந்த பேட்டியின் போது நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இன்பராஜ், துணை செயலாளர் செல்வராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன், மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட மாணவர் அணி தலைவர் முனியசாமி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் அருண், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் இன்பராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் அகஸ்டின், சங்கரன்கோவில் நகர இளைஞர் அணி செயலாளர் நாராயணன், குருவிகுளம் ஒன்றிய பொறுப்பாளர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்

அதிமுகவுடன் கூட்டணி சேர ஜான்பாண்டியன் நிபந்தனை!





சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மார்ச் 18ம் தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் சங்கரன்கோவிலில்  செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,  ’’அதிமுகவை எதிர்ப்பதற்கு பொது வேட்பாளரை நிறுத்தவும் நாங்கள் தயார்.  இதற்காக எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அழைத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.  

புதிய தமிழகம் எங்கள் கட்சியின் ஆதரவை கேட்டால் அவர்களோடு நாங்கள் இணைந்து செயலாற்றுவோம்.   எங்களோடு
திராவிட கட்சிகள் பேசுவதற்கு அழைப்பு விடுத்தாலும் அவர்களோடு நாங்கள் ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம்.   குறிப்பாக அதிமுக எங்கள் கட்சியின் ஆதரவை கேட்டாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.


அதற்காக பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான ஐபிஎஸ் அதிகாரிகளை பணி நீக்கம் செய்துவிட்டு அவர்கள் மீது 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு  என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகள் உள்ளன.
இந்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால் நாங்கள் கூட்டணி பேசுவதற்கு தயார். 

மேலும் எங்கள் கட்சியின் சார்பில்
வேட்பாளரை நிறுத்த உள்ளோம்.   இவை அனைத்தும் வருகின்ற 25ம் தேதி எங்களின் பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுப்போம்’’ என்று கூறினார்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி?

சங்கரன்கோவில் இடைத் தேர்தல், மார்ச் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது.

அ.தி.மு.க., கடந்த இரு மாதங்களாகவே தேர்தல் வேலைகளைத் துவங்கிவிட்டது. இம்முறை, முத்துசெல்வி என்ற பெண் வேட்பாளரை அறிவித்து அசுர வேகத்தில் வேலைகளைச் செய்து வருகிறதுதேர்தல் தேதி அறிவித்ததும், பணிகளைத் துவங்குவோம் என அறிவித்திருந்த தி.மு.க., நேற்று முன் தினம் வாக்காளர் நேர்காணலை நடத்தி, சங்கரன்கோவில் நகர வழக்கறிஞர் பிரிவின் துணைச் செயலர் ஜவகர் சூரியகுமாரை வேட்பாளராக அறிவித்துள்ளது. தேர்தல் பணிகளுக்காக தனிக் குழுவையும் தி.மு.க., அமைக்கிறது. பிரசாரத்தில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோர் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.

ம.தி.மு.க., வேட்பாளர் இன்று அறிவிப்பு:அ.தி.மு.க.,வைப் போல தேர்தல் வேலைகளை ம.தி.மு.க.,வும் முன்பே தொடங்கி விட்டது. சங்கரன்கோவிலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ இன்று நேர்காணல் நடத்தினார். இதையொட்டி நடைபெறும் ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் சங்கரன்கோவிலில் ம.தி.மு.க., வேட்பாளராக சதன் திருமலைக்குமார் போட்டியிடுவார் என வைகோ அறிவித்தார்.கடந்த பொதுத் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், ம.தி.மு.க., சங்கரன்கோவிலில் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி மூலம், உற்சாகத்துடன் களம் இறங்கியுள்ளது. வைகோவின் சொந்த தொகுதி என்பதால், கட்சி நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் வேலைகளை கவனிக்க அறிவுறுத்தப்பட்டு ள்ளனர்.

21ல் முடிவு செய்கிறது தே.மு.தி.க.,: தே.மு.தி.க., கட்சியின் பொதுக்குழுவை, வரும் 21ம் தேதி விஜயகாந்த் கூட்டியுள்ளார். இதில், சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தே.மு.தி.க.,வின் நிலையை அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம் இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டதைத் தொடர்ந்து, திருச்சி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவில்லை என புதிய தமிழகம் அறிவித்தது. இப்போதும், அதே நிலை எடுக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய, மக்கள் கருத்தை அறிய புதிய தமிழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, வரும் 23,24ம் தேதிகளில் சங்கரன்கோவில் தொகுதியில் மக்கள் கருத்தறிய உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியில் பிரதான கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் மவுனமாக உள்ளனர். கட்சியின் மாநிலக் குழுக்களைக் கூட்டி, தங்களின் முடிவை விரைவில் அறிவிப்போம் என, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., ஆகியன களம் இறங்கிவிட்டன. இதனால் மும்முனைப் போட்டி உறுதியாகிவிட்டது. தே.மு.தி.க., போட்டியிடும் பட்சத்தில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவாகும்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி-ஜான் பாண்டியன்


John Pandian
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணிக்கு அழைத்தால் தான் தயாராக உள்ளதாக ஜான் பாண்டியன் கூறினார்.

இது குறித்து, சங்கரன்கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அதிமுகவை எதிர்ப்பதற்கு பொது வேட்பாளரை நிறுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இதற்காக எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அழைத்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அதே போல், புதிய தமிழகம் எங்கள் கட்சியின் ஆதரவை கேட்டால் அவர்களோடு நாங்கள் இணைந்து செயலாற்றுவோம்.

எங்களோடு திராவிட கட்சிகள் பேசுவதற்கு அழைப்பு விடுத்தாலும் அவர்களோடு நாங்கள் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம். குறிப்பாக அதிமுக எங்கள் கட்சியின் ஆதரவை கேட்டாலும் நாங்கள் தயாராக உள்ளோம்.

எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு நாங்கள் ஆதரவு தருவோம். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான ஐபிஎஸ் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அவர்கள் மீது 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை ஏற்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டால் நாங்கள் கூட்டணி பேசுவதற்கு தயாராக உள்ளோம்

முறையான கூட்டணி அமையாத பட்சத்தில் எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம். இவை அனைத்தும் வரும் 25 ந் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்றார்.

சங்கரன்கேவிலில் புதிய தமிழகம் போட்டியிடுமா? கிருஷ்ணசாமி ஆலோசனை

சங்கரன்கோவில்: சங்கரன்கேவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டதால் கூட்டணி உடைந்து நொருங்கியது.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அதிமுக அறிவித்தது. அதன்படியே வேட்பாளராக முத்துச்செல்வியை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. 26 அமைச்சர்கள் அடங்கிய 34 பேர் கொண்ட தேர்தல் பணிககுழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சங்கரன்கோவில் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு என வலுவான வாக்கு வங்கி உள்ளதால் அங்கு போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே களத்தில் அதிமுக, திமுக, மதிமுக என வலுவான கட்சிகள் இருக்கும் நிலையில் புதிய தமிழகம் போட்டியிடும் பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகின்றது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் முடிவு!

நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொகுதி மக்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி உட்பட ஒன்பது கட்சிகள் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தன. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்ட நிலையில் கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளும் அதே நிலைபாட்டை எடுத்தன.

சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஆளும் அ.இ.அதி.மு.க முன்கூட்டியே தனது கட்சியின் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை துவங்கியுள்ள நிலையில் கூட்டணியில் அங்கம் பெற்ற மற்ற கட்சிகளும் தங்களது நிலைபாடு குறித்து முடிவெடுக்க ஆலோசனை நட்த்தி வருகிறார்கள்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. இத்தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு வருகிற 23,24 ஆகிய தேதிகளில் தொகுதிக்கு உட்பட்ட மூன்று ஒன்றியங்களில் உள்ள கிராம்ம் தோறும் சென்று புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களின் கருத்தறிய உள்ளேன். அதன்பின் முடிவு அறிவிக்கப்படும்."

மேற்கண்டவாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் முடிவு!

நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொகுதி மக்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி உட்பட ஒன்பது கட்சிகள் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தன. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்ட நிலையில் கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளும் அதே நிலைபாட்டை எடுத்தன.

சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஆளும் அ.இ.அதி.மு.க முன்கூட்டியே தனது கட்சியின் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை துவங்கியுள்ள நிலையில் கூட்டணியில் அங்கம் பெற்ற மற்ற கட்சிகளும் தங்களது நிலைபாடு குறித்து முடிவெடுக்க ஆலோசனை நட்த்தி வருகிறார்கள்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. இத்தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு வருகிற 23,24 ஆகிய தேதிகளில் தொகுதிக்கு உட்பட்ட மூன்று ஒன்றியங்களில் உள்ள கிராம்ம் தோறும் சென்று புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களின் கருத்தறிய உள்ளேன். அதன்பின் முடிவு அறிவிக்கப்படும்."

மேற்கண்டவாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

ராமநாதபுரத்தில் கலவரம் (ஆவணம் 1981)

1981 ஆவணம்
 இங்கு வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆவணம், சில புரிதல்களை நமக்குத் தரும். சாதி மோதலின் தொடக்கப் புள்ளியாக இருப்பவர்கள் யார்? சாதி இந்துக்களின் அணிச் சேர்க்கை எத்தகையது? அரசு எந்திரமும், காவல் துறையும் சாதி இந்துக்களுக்கு எவ்வகையில் உதவுகின்றன என்ற புரிதல்கள் – இன்றைக்கு நிகழ்ந்திருக்கும் "பரமக்குடி படுகொலை'கள் வரை – எப்படி மாறாமல் தொடர்ந்து வருகின்றன என்பதை உணர்த்தும்.
1981இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராமநாதபுரத்தில் மிகப் பெரிய சாதி மோதல் நிகழ்ந்தது. இதற்கு வித்திட்டோர் அகமுடையார் எனப்படும் சேர்வை சமூகத்தினர். "முக்குலத்தோர்' என தம்மை அழைத்துக் கொள்ளும் சாதிக் கூட்டத்தில் ஒரு தரப்பினர் இவர்கள். ராமநாதபுரம் நகரத்தில் பெரும்பான்மை சாதியினராகவும், சமூக – அரசியல் அரங்கில் இந்நகரத்தில் முதன்மை சாதியாகவும் இருப்பவர்கள். அனைத்து அரசியல் கட்சிகளின் பொறுப்புகளையும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்.
சேதுபதி சமஸ்தானத்தில் திவான்கள் மற்றும் அமைச்சுப் பொறுப்புகள் தொடங்கி, காங்கிரசு கட்சியின் ஆட்சியதிகாரம் முதல் இன்றைய அ.தி.மு.க. ஆட்சி வரை, ராமநாதபுரம் நகரத்தில் அகமுடையார் சாதியினரே தீர்மானிக்கும் ஆதிக்க சாதியினர். இவர்களுக்குப் பக்க பலமாக ஏனைய சாதி இந்துக்கள் இருக்கின்றனர். சாதி இந்துக் கூட்டத்தாரின் திட்டங்களை "வன்முறை' வடிவில் நடைமுறைப்படுத்துவதில் முன்னணியாக இருப்பவர்கள் "மறவர்' சாதியினர். நூற்றாண்டுக் காலமாக, இச்சூழல் மாறாத வடிவத்தில் தொடர்ந்து நிலைப்பெற்றிருக்கிறது.
1981 ஆம் ஆண்டு சாதி மோதலில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக, "மள்ளர்' சமூகத்தினர் அடைந்த பாதிப்புகள் குறித்து இங்கு வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆவணம், சில புரிதல்களை நமக்குத் தரும். சாதி மோதலின் தொடக்கப் புள்ளியாக இருப்பவர்கள் யார்? சாதி இந்துக்களின் அணிச் சேர்க்கை எத்தகையது? அரசு எந்திரமும், காவல் துறையும் சாதி இந்துக்களுக்கு எவ்வகையில் உதவுகின்றன என்ற புரிதல்கள் – இன்றைக்கு நிகழ்ந்திருக்கும் "பரமக்குடி படுகொலை'கள் வரை – எப்படி மாறாமல் தொடர்ந்து வருகின்றன என்பதை உணர்த்தும்.
தமிழகத்தில் பட்டியல் சாதியினர் பிரிவு 3, மற்றும் 4 ஆம் நிலைகளில் நடுவண் அரசுப் பணியிடங்களில் மட்டுமே முழுமையாக நிரப்பப்பட்டுள்ளனர். 1980களில் ரயில்வே, அஞ்சல், துறைமுகம் உள்ளிட்ட நடுவண் அரசுத் துறைகளில்தான் பட்டியல் சாதியினர் ஒதுக்கீட்டு அளவில் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையே ராமநாதபுரத்திலும் இருந்தது. இம்மாவட்டத்தில் அஞ்சல் நிலையங்களில் மட்டும், பட்டியல் சாதியினர் ஒருவராவது இருப்பர். இதை அறிந்து வைத்திருந்த சாதி வெறியர்கள், சாதி மோதல் நேரங்களில் அஞ்சல் நிலையங்களைக் குறிவைத்து, தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். மேலும், பட்டியல் சாதியினர் எவரெவர் என்பதை அங்கிருக்கும் சாதி இந்துக்களின் மூலம் அறிந்து கொண்டு, அவர்களையும் அவர் தம் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி தாக்கியிருக்கின்றனர்.
அப்படி பாதிக்கப்பட்ட தபால்–தந்தி ஊழியர்கள், அந்நேரத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டனர். அவர்கள் அன்றைய நாளில் அரசுக்கும், ஏனைய அமைப்புகளுக்கும் "ராமநாதபுரம் கலவரம்' என்ற தலைப்பில், அனுப்பிய முறையீட்டு மடலை – இன்றைய சூழலுக்குப் பொருத்திப் பார்க்கும் வகையில் இங்கு வெளியிடுகிறோம்.
தபால்–தந்தி துறையில், தான் ஓய்வு பெறும் வரையில், NFPTE என்ற பொது சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி, 1999 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த திரு. இட்லர் என்ற தொருவளூர் காசி அவர்களால் எழுதப்பட்டது இம்முறையீட்டு மடல்.
11.9.2011 அன்று ஜெயலலிதா அரசின் காவல் துறையால் நிகழ்த்தப்பட்ட பரமக்குடி படுகொலைகளின் தொடர்ச்சியாக, அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் தலித் மக்கள் வாழும் கிராமங்களில் நடந்து வரும் தேடுதல் வேட்டையின்போது – காவல் படையிடம் அகப்பட்டு விடாமல் தப்பிக்க எண்ணி, 13.9.2011 அன்று இரவில் வயல் காடுகளுக்குள் ஒளிந்து கொள்ள ஓடியதால், பெரிய பள்ளத்தில் விழுந்து, மார்பில் கல் அறைந்து அவ்விடத்திலேயே இறந்துபோன தொருவளூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த வேலு (வயது 45) என்பவர் இவருடைய உறவினர்.
மேலும், அரசின் பயங்கரவாதத் தேடுதல் வேட்டையில் தனது வீடும் குறிவைக்கப்பட்டதாகச் சொல்லும் இந்த ஆவணத்திற்குரியவரான தோழர் காசி, தந்தை பெரியாருக்கு அறிமுகமாகி, அவரது பெருந்தொண்டராக சாதி, மதம் கடந்து பொது சமூகத்தில் அயராது பணியாற்றி வருபவர். திராவிடர் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட துணைத் தலைவராகவும் இருக்கிறார். 
ராமநாதபுரத்தில் கலவரம் (ஆவணம் 1981)
பங்குனி உத்திர தினத்தன்று கல்லூரி மாணவர் ஒருவர், தன்னுடன் படித்துக் கொண்டிருக்கும் மாணவியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். மாணவர், பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர். மாணவி, சேர்வை வகுப்பைச் சேர்ந்தவர். இதைக் கண்டு பொறுக்காத சிலர் மாணவனைக் கண்டித்து அனுப்பினர். இன்னொரு பக்கத்தில், சிலர் வண்டிக்காரத் தெருப்பெண்களைக் கேலி பேசியிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரியாது. கல்லூரி விடுதி மாணவர் ஒருவர் தன் நண்பனைப் பார்க்க, வண்டிக்காரத் தெருப்பக்கம் சென்றிருக்கிறார். அங்கு இருந்த பெண்மணி, பங்குனி உத்திரத்தன்று கேலி பேசியவர்களில் ஒருவன் போல் தெரிகிறது என்று சொல்லியிருக்கிறார். உடனே அருகிலிருந்த சேர்வை சாதியினர் அம்மாணவரை நய்யப்புடைத்து அடித்து விட்டனர். அடிபட்ட மாணவர் எந்தவொரு பண்பாடு தவறியும் நடக்காதவர். அவர் கல்லூரி விடுதிக்குச் சென்று, தான் தாக்கப்பட்டதைச் சொல்லியிருக்கிறார். விடுதி மாணவர்கள் புறப்பட்டு வந்து, அந்த மாணவரை அடித்தவர்களை மட்டும் திருப்பி அடித்து விட்டுச் சென்று விட்டனர்.
திரு. செல்லத்துரை சேர்வை என்பவர், மாணவர்கள் வந்து அடித்துவிட்டுச் சென்றதாக போலிசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அப்போதிருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் போலிசாருடன் சென்று – இரவு 10 மணிக்கு மேல், விடுதி மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் எழுந்திருந்து தப்பிக்க முடியாவண்ணம், படுக்கையிலேயே அடியடியென்று அடித்துவிட்டனர். அதில், ஒரு மாணவருக்கு கைபுஜம் கீழே இறங்கி விட்டது. இன்னொருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மண்டை உடைந்து ரத்தப்போக்கு வந்தவுடன் போலிசார் சென்று விட்டனர். 23.3.81 அன்று போலிசின் பயங்கரமான அடக்குமுறைக்கு எதிராக, விடுதி மாணவர்கள் மவுன ஊர்வலம் அனுஷ்டித்தனர். அதை சரியான முறையில் நிறைவேற்ற முடியாதபடி, போலிசாரும் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்களும் மாணவர்களை விரட்டியடித்தனர்.
அப்போது "பள்ளன்', "பள்ளன்' என்று தகாத வார்த்தைகளை வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்கள் சத்தமிட்டுக் கொண்டே வந்தனர். அவர்கள் அரண்மனை முன்பு வந்தபோது, கடைச்சாமான்களை வாங்கிக் கொண்டு பஸ்சுக்காக காத்திருந்த பயணி ஒருவர், “ஏண்டா பள்ளன், பள்ளன் என்று பேசுகிறீர்கள். உங்களுக்கு என்ன வேணும்?'' என்று சொல்லி பக்கத்துக் கடையிலிருந்த வாளித் தண்ணீரைக் கொட்டிவிட்டு, வண்டிக்காரத் தெரு பையனை அடித்துவிட்டார். இதற்குள் இன்னும் மூன்று பேர் வந்து, அப்பையனைக் கடுமையாகத் தாக்கவே அவர்கள் ஓடிவிட்டனர். இந்தப் பயணிகள் பஸ் ஏறிச் சென்றுவிட்டனர்.
விடுதி மாணவர்கள் எங்கிருந்தோ கம்புகளைக் கொண்டு வந்து, வண்டிக்காரத் தெருக்காரர்களை விரட்டிக் கொண்டு சென்றனர். யாரோ ஒருவர் போலிசுக்கு தகவல் சொல்ல, பொது மக்களையும் கலைத்தனர். அப்போது "சித்திரவேல்' என்ற தபால் தந்தி ஊழியரை, அவருக்கு அறிமுகமான உள்ளூர் போலிஸ்காரர் அடித்துவிட்டார். அவர் ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்க, மீண்டும் சித்திரவேலுவை அப்போலிசார் அடித்துவிட்டார். அப்போது மணி சுமார் பகல் 1.30 இருக்கும் (தேதி 23.3.81). திரு. சித்திரவேல் மருத்துவமனைக்குச் சென்றபொழுது, அவர் கை விரலில் போலிசின் தாக்குதலால் பலமான காயம் ஏற்பட்டிருந்தும், மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டது. அவர் உடனே ஆர்.டி.ஓ. விடம் முறையிட்டார். ஆர்.டி.ஓ. சிகிச்சைக்கு உத்தரவிடுவதாக சொன்னார்.
தபால்–தந்தி இலாகா யூனியன் தலைவர்கள், போலிஸ் எஸ்.பி. அவர்களுடன் பேசி ஒரு வழியாகச் சமாதானமாகிவிட்டது. அதன்பின் மாணவர்கள், போலிஸ், வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்கள் கூட்டாகப் பேசி சமாதானம் ஆயிற்று. ஆனால், வண்டிக்காரத் தெருக்காரர்கள் விடுதி மாணவர்கள் தங்களை விரட்டி வந்ததை, ஒரு கவுரவப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அப்போதிருந்த ஆய்வாளரைக் கலந்து பேசியபோது, வண்டிக்காரத் தெருக்காரர்களை அவர் ஊக்குவித்து, போலிசின் முழு ஆதரவு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த விபரம் விடுதி மாணவர்களுக்குத் தெரிந்து விட்டது. அவர்கள் மரக்கடை வைத்திருக்கும் ஆறுமுகம் என்பவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் உதவியோடு ஒரு நோட்டீஸ் அடித்து வெளியிட்டிருக்கிறார்கள். நோட்டீஸின் நகல் கிடைக்காததால் இத்துடன் இணைக்கப்படவில்லை.
உள்ளூர் போலிஸ் ஒத்துழைப்பு கிடைக்கிறது என்றவுடன், செல்லத்துரை என்ற கடத்தல் பேர் வழியின் தலைமையில் முதுநாள் என்ற ஊரைச் சார்ந்தவர்கள், போலிசுடன் இணைந்து, தபால்–தந்தி இலாகாவில் பணியாற்றும் பள்ளர்களை மட்டும் அடித்து விரட்டத் திட்டம் தீட்டினர். இந்தத் திட்டங்கள் எல்லாம் போலிஸ் ஆய்வாளருக்கு மிக நன்றாகத் தெரியும். ஏனென்றால், இவைகளை ஊக்குவித்ததே அவர்தான். 7.4.1981க்குப் பிறகு ஒரு நாள், மிளகாய் வற்றல் கமிஷன் கடையில் விற்பனைக்குச் சென்றவர்களை திடீரென அரிவாள் கம்புகளோடு சென்றவர்கள் தாக்கியிருக்கிறார்கள். அதில் ஒரு பெண்மணி, உட்பட இரண்டு மூன்று பேர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் (தாக்கப்பட்டவர்கள்) அனைவரும் பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு மத்தியில் லாரியில் பாரம் ஏற்றுபவர்கள், பஸ் நிலையத்திற்கு அருகில் சாப்பிடச் சென்றிருக்கிறார்கள். கடையில் தோசையும், சாம்பாரும் மட்டுமே இருந்திருக்கிறது. தோசைக்குச் சட்னி கேட்டபோது, “பள்ளப்பயலுக்கெல்லாம் சாம்பார் போதும். சட்னி என்னடா வேண்டிக் கிடக்கிறது?'' என்று சர்வர் சொல்லியிருக்கிறார். சாப்பிடச் சென்றவர்கள் கோபமாகி, சர்வரை அடித்து, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு, பஸ்சில் போய் உட்கார்ந்து கொண்டனர். பஸ் புறப்படுவதற்குள் ரகு என்ற ரவியின் தலைமையில் கம்பு, கத்திகளுடன் வந்து, பஸ்ஸில் இருந்த பயணிகள் அத்தனை பேரையும் கீழே இறக்கிவிட்டு பள்ளர்களை மட்டும் கடுமையாக அடித்து விட்டனர்.
மேற்கூறிய அடிதடி சம்பவங்கள் இரண்டு பக்கத்து ஊர்களிலும் பரவவே, 10.4.1981 இல் பேராவூர்க்காரர்கள் திரு. கிளவன் என்பவர் தலைமையில் நியாயம் கேட்க ராமநாதபுரம் வந்தனர். ராமநாதபுரம் வந்தடைவதற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடி விட்டனர். கேணிக்கரையில் சேர்வாரர் கடைகளை எல்லாம் அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். உடனே போலிஸ் விரைந்து வந்து கூட்டத்தினரைத் தடுத்து நிறுத்தியது. கூட்டத் தலைவரான திரு. கிளவன், போலிசோடு பேசி நியாயம் கேட்டார். கூட்டத்தினர், தாங்கள் சேர்வாரர்களால் அவமானப்படுத்தப்பட்டும் போலிஸ் தக்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரப்பட்டு நகருக்குள் முன்னேறி விட்டனர். போலிஸ்காரர்கள், கூட்டத்தை சமாளிக்கத் தெரியாமல் தலைவரான கிளவனைச் சுட, அவர் சுட்ட வேகத்தில் அவ்விடத்திலேயே விழுந்து உயிர் நீத்தார். மற்றவர்கள் படுகாயமடைய, கூட்டம் கலைந்து சென்றது.
அதன்பின்பு போலிசார் இறந்தவர்கள், காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதற்கிடையில் ராஜ சூரியமடை என்ற ஊரைச் சார்ந்தவர்கள் (மறவர்கள்) ஊர்வலம் போல் கத்தி அரிவாளுடன் வந்து, திரு. கோவிந்தன் வக்கீல் (பள்ளர்) அவர்களது அலுவலகத்திற்குள் நுழைந்து, சட்டப்புத்தகங்கள், அவரது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து, மதுரை–மண்டபம் ரோட்டில் போட்டு எரித்தார்கள். பள்ளருக்கு எதிராகக் கோஷம் போட்டுக் கொண்டே ஊருக்குள் சென்றார்கள்.
அப்பொழுது போலிஸ் வண்டிக்காரத் தெருவைச் சார்ந்தவர்கள், ராஜசூரிய மடையைச் சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சேர்வை, மறவர் சாதியினர் அனைவரும் சேர்ந்து கொண்டனர். பிற்பகல் (10.4.1981) தபால் அலுவலகத்தில் பணியாற்றும் பள்ளர்களை ஊரை விட்டுச் செல்லுமாறு மிரட்டினார்கள். தகாத வார்த்தைகளைச் சொல்லி, தெருத் தெருவாகவும், தபால் அலுவலக ஊழியர் சிலர் தங்கியிருக்கும் வீடுகளுக்கும் சென்று கோஷமிட்டனர். ஒரு அம்பாசிடர் காரில் மைக்கைக் கட்டி கொண்டு “பள்ளனைக் கண்டால் அடி'' என்று தகாத வார்த்தைகளைச் சொல்லி, தெருத் தெருவாக வலம் வந்தார்கள். இதைப் பார்த்தும் போலிஸ் அவர்களுக்கு எதிராக, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலிசின் ஆதரவால் உற்சாகமடைந்த சேர்வை கூட்டம் – வீடு வீடாகச் சென்று, ஊரைப் பாதுகாக்க செலவுக்கு வேண்டுமென்று, வீடு ஒன்றுக்கு 10 ரூபாயும் கடை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும் அதற்கு மேலும் வசூலித்தனர். சிறு கடைகளில் கடைகளின் வியாபாரத்திற்குத் தக்கவாறும் சிறு கூட்டம் வசூலில் இறங்கிவிட்டது. இன்னொரு கூட்டம் பள்ளர் வீடுகள் அல்லது வீட்டிலுள்ள உடைமைகளைத் தீ வைத்துக் கொண்டே வந்தது. போலிஸ் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததே தவிர, நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக, போலிஸ் பள்ளர்களை விரட்டியடிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தனர்.
10, 11.4.1981 ஆகிய நாட்களில் மண்டபம் அருகிலுள்ள உச்சிப்புளி பகுதிக்கு தகவல் கொடுத்து, 500 ஆட்களை உடனே அனுப்பச் சொல்லி, சேர்வை கூட்டத்தினர் சீட்டுக் கொடுத்து விட்டனர். அங்கிருந்த மறவர் ஒருவர் அதை வாங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பள்ளர் ஒருவர் உடனே நிலைமை என்னவென்று அறிந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தப்பிச் சென்றுவிட்டார். இவ்வளவிற்கும் அந்த மறவரும், அந்தப் பள்ளரும் மிக நெருங்கிய பழக்கமுடையவர்கள். 11.4.1981இல் தபால் அலுவலகங்களில் பணியாற்றும் அத்தனை பள்ளர்களையும் தகாத வார்த்தைகள் பேசி வெளியேற்றிவிட்டனர். இதில் 5 குடும்பங்கள் மட்டும் தலைமை தபால் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். மீதமுள்ள பள்ளர் குடும்பத்தினர் எப்படியோ அடிபடாமல் தப்பிச் சென்றுவிட்டனர். அக்கூட்டத்தினர் தந்தி அலுவலகத்தைத் தாக்கிய பொழுது, தந்தி அலுவலகப் பொறுப்பாளர் போலிசுக்குத் தகவல் கொடுக்க, போலிஸ் இரண்டு பேர்களை மட்டுமே பிடித்துச் சென்றது.
வெளியூர்களில் செய்தி பரவியவுடன் தண்ணீர் சப்ளையும், மின்சப்ளையும் துண்டித்ததோடு, வெளியூர் விஷமிகள் ராமநாதபுரம் சென்றுவிடாதபடி, பஸ் மற்றும் லாரிகளை, சத்திரக்குடி லாந்தை கிராமத்தை பள்ளர்கள் மறித்தனர். ஆனால், போலிசார் அவர்களைத் துரத்தியடித்தனர். தலைமை தபால் நிலையத்தில் தஞ்சம் புகுந்தவர்களை தலைமை தபால் அதிகாரி, ஆர்.டி.ஓ. உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டார். ஒரு பெண்மணியின் உதவியோடு திரு. சித்திரவேல் என்ற ஊழியர் தப்பிவிட்டார். அவரை ஒரு மூட்டையில் கட்டி வெளியில் கொண்டு வந்து, தப்பிக்க வைத்தனர்.
போலிசின் மீதும், சேர்வாரர்கள் மீதும் உள்ள வெறுப்பினால் மனம் நொந்த பள்ளர்கள், வெல்லா ஆனைக்குடி கிராமத்தில் தீ வைத்து விட்டனர். தீ வைப்பதை எதிர்த்தவர்களை மட்டும் தாக்கியிருக்கின்றனர்; மற்றவர்களை ஒன்றும் செய்யவில்லை. வீட்டிலுள்ள பொருள்களையும் கொள்ளை அடிக்கவில்லை. போலிஸ் உதவியோடு செல்லத்துரை என்ற நபர், வெல்லா கிராமத்தில் நெல் மூட்டைகள் சிலவற்றை கமிஷன் ஏஜென்டுகளுக்கு விற்றதாக அறியப்படுகிறது. பள்ளர்கள், பச்சைக் குழந்தையை வெட்டித் தீயில் போட்டுவிட்டதாக ஒரு வதந்தியை பரப்பி விட்டார்கள். உண்மையில் அது நடக்கவே இல்லை. ஆனால், ராமநாதபுரத்தில் குளத்தூரைச் சேர்ந்த திரு. கிருஷ்ணன் என்ற ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும், அவர் மனைவியையும் (பள்ளர்கள்) நிர்வாணமாக்கி, அடித்து, ஓட, ஓட சேர்வார்கள் விரட்டியிருக்கிறார்கள்.
ராமநாதபுரத்திற்குக் கிழக்கே மண்டபம் வரை உள்ள பள்ளர்களை அடித்து, விரட்டி, இம்சித்து அவர்களின் வீடுகளுக்குத் தீயிட்டு, உடைமைகளையும் எரித்து விட்டனர். போலிஸ் பாதுகாப்பு தரப்படவேயில்லை. ரயிலில் தப்பிச் சென்றவர்களை பிளாட்பாரத்தில் மறித்து, அடித்துப் போட்டு சென்றிருக்கிறார்கள். படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். எத்தனை பேர் இறந்தவர்கள், எத்தனை பேர் படுகாயப்படுத்தப்பட்டனர் என்ற விவரமும் யாருக்கும் தெரியாது. 16.4.1981 இல் தமிழக முதல்வர் (எம்.ஜி.ஆர்.) ராமநாதபுரம் வந்தபோது, அதிகாரிகள் அழைத்துச் சென்ற இடங்களுக்கு மட்டும் சென்றார். ஆனால், பள்ளர்கள் ராமநாதபுரத்திலும் ராமநாதபுரத்திற்குக் கிழக்கேயும் பட்ட கஷ்டங்களையும் உயிர், உடைமை இழப்புகளைப் பற்றி சரியாக விசாரித்ததாகத் தெரியவில்லை. அதை சரியான முறையில் அதிகாரிகள் எடுத்துச் சொன்னதாகவும் தெரியவில்லை. அதனால் ஏற்பட்ட விளைவுகள் பின்வருமாறு:
தமிழக முதல்வர் ராமநாதபுரத்தை விட்டுச் சென்றவுடன், உள்ளூர் போலிஸ் துணையுடன் ரிசர்வ் போலிஸ் மோசமான அடக்குமுறையை மேற்கொண்டனர். பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். மாணவ, மாணவியர் துன்புறுத்தப்பட்டனர். சைக்கிள், தையல் மிஷின் மற்றும் பிற உடைமைகள், ஓட்டு வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வீடுகளில் இருந்த பொன்னும் பொருளும் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டன. கலவரத்தில் கொஞ்சம் கூட சம்பந்தப்படாத பள்ளர்களை – இரவு பகல், சாப்பாட்டு நேரம், தூங்கும் நேரம், துக்க நேரம் என்று பாராமல் விரட்டி அடித்துள்ளனர். ஓடியவர்களைத் தவிர, வீடுகளில் இருந்த பள்ளர்களைப் பிடித்துக் கொண்டு வந்து கொலை, கொள்ளை, தீவைத்தல் என்ற மூன்று பெருங்குற்றங்களைச் செய்ததாக, குற்றப்பத்திரிகை தயார் செய்து சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் தபாலாபீசை விட்டு வெளியே சென்ற சத்திரக்குடி இ.டி.எம்.சி. திரு. கந்தனும் ஒருவராவார். சேமனூரில் ஒரு பெரியவர் மரணமடைய, அவரை சரியான முறையில் அடக்கம் செய்ய விடõமல் போலிஸ் விரட்டியடித்துள்ளனர். 16 வயது குறைந்த சிறுவர்கள் சிலர் மட்டும் அப்பெரியவரை அடக்கம் செய்திருக்கிறார்கள். தகாத வார்த்தைகளைச் சொல்லி, சத்திரக்குடி வட்டாரத்தைச் சார்ந்த பெண்களை அடித்திருக்கிறார்கள். பஸ்களை நடுவழியில் மறித்து, யாராவது பள்ளன் இருந்தால் கீழே இறங்கு என்று சொல்லி, பஸ்ஸில் பிரயாணம் செய்யும் பள்ளர்களைக் கீழே இழுத்து அடித்து, கொலை, கொள்ளை, தீயிடுதல் போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, சிறையிலடைத்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி போலிஸார் ஏன் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று தீர விசாரித்ததில், சத்திரக்குடி போலிஸ் சுட்டது சரிதான் என்று நிரூபிக்கத்தான் இவ்விதம் போலிஸ் நடக்கிறார்கள் என்று பதில் கிடைத்தது. சத்திரக்குடி போலிஸை பொதுமக்கள் துன்புறுத்தவோ, போலிஸ் ஸ்டேஷனைத் தாக்கவோ முற்படவில்லை. ஆனாலும் சத்திரக்குடி தலைமைக் காவலர் வேண்டுமென்றே சுட்டுவிட்டார். அவர் சுட்டதில் மீன் விற்கிற பெண்மணியும், கயிறு வாங்கிக் கொண்டிருந்த ஒருவரும் அடங்குவர். அவர்களில் ஒருவர் மறவர்; ஒருவர் கோனார் மற்றவர்கள் யாரோ தெரியாது. ஆனால், அத்தனை பேரும் கடைக்குச் சாமான் வாங்க வந்தவர்களே. அன்றைக்கு தபால்–தந்தி இலாகா சரியான முறையில் இயங்கிக் கொண்டிருந்தது. தந்திக் கம்பங்கள், தந்தித் தொடர்பு துண்டிக்கப்படவில்லை. ஏனென்றால், ராமநாதபுரத்தில் நடந்த சம்பவங்களை 10.4.1981 இல் தொலைபேசியில் கேட்டவர்கள் இருக்கிறார்கள். ராமநாதபுரம், பரமக்குடி கிராமத்தையும் தபால்–தந்தி ஆபீஸ்களில் உள்ள ரிக்கார்டுகளைப் பார்த்தாலே தெரியும். சத்திரக்குடியிலும் தபால்–தந்தி ஆபீஸ் இருக்கிறது. ஆகவே, போலிசார் சுட வேண்டிய அவசியமில்லை. தந்தி தொடர்பு துண்டிக்கப்பட்டதென்று சொல்வது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
11.4.1981க்குப் பிறகு தபால்–தந்தி அலுவலகங்களைத் தவிர, மற்ற அலுவலகங்களில் பணியாற்றும் அத்தனை பள்ளர்களையும் “பள்ளனே வெளியே போ'' என்று சொல்லி, ஒவ்வொரு ஊருக்கும் டாக்சியில் போய் விரட்டியிருக்கிறார்கள். அலுவலர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாததால், தத்தம் ஊர்களுக்குச் சென்று விட்டார்கள். இதுவரை பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்கூட, ராமநாதபுரத்திற்குத் திரும்பிப் போய் பணியாற்றவில்லை. ஆனால், ஒருவர் மட்டும் பணியாற்றச் சென்றபோது, பணியாற்ற வரவேண்டாம் என்று 20.4.1981க்குப் பிறகும் விரட்டியிருக்கிறார்கள். அவர் பொதுப் பணித்துறை இலாகாவைச் சேர்ந்தவர்.
தமிழக முதல்வர் ராமநாதபுரம் வந்து 2 நாட்கள் தங்கிச் சென்றபிறகும் கூட, பள்ளர்கள் சேர்வை சாதியினரால் துன்புறுத்தப்பட்டனர். தற்போது, போலிஸ் அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளர் சமுதாயத்தை இந்த அரசு வாழவிட வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக அழித்துவிட வேண்டும் – எது சரியோ அது நடக்கட்டும். இந்த சித்திரவதை, அரசின் முழு ஆதரவோடு நடக்குமானால், பள்ளர்கள் ராமநாதபுரத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் மதம் மாறுவது நிற்காது. அத்தனை சகோதர எஸ்.சி., எஸ்.டி.க்களையும் மதம் மாற்றச் செய்வது நிற்காது என்று அரசிற்கு அறிவித்துக் கொள்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் சங்கம், ராமநாதபுரம்

தேவேந்திர குல மக்கள் - முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த சதி: ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு!

சங்கரன்கோவில் கலவரத்திற்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யை மாற்ற வேண்டும் என்று தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சங்கரன்கோவிலில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த காளிராஜ், பெருமாள் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தமமுக தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினார். மாநகர செயலாளர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, காவல்துறை பாதுகாப்பு கொடுத்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியும். உடனே உயர் திகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தால் கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஒரு சிலரின் சதியால் இந்த கலவரம் நடந்துள்ளது. அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கெல்லாம் தென்மண்டல் ஐ.ஜி. ராமதாஸ் தான் காரணம். பரமக்குடி துப்பாக்கிச்சூடு முதல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போலீஸ் தடியடி நடத்தியது வரை இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். எனவே அவரை உடனடியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புதன், 15 பிப்ரவரி, 2012

பசுபதி கொலை: ஒருவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல் கரட்டழகன்பட்டியை சேர்ந்த, ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி, 38. இவர், பசுபதிபாண்டியன் ஆதரவாளராக இருந்தார். பிறகு, பகுஜன் சமாஜ், ஜான் பாண்டியன் கட்சிகளில் பொறுப்பில் இருந்தார்.ப”பதி பாண்டியன் கொலையாளிகளுக்கு வீடு பார்த்து கொடுத்த நிர்மலாவை, சுபாஷ் பண்ணையாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர் மீது அம்பாத்துரை, திண்டுக்கல், தாடிக்கொம்பு ஸ்டேஷன்களில் மிரட்டல், வழிப்பறி, வழக்குகள் உள்ளன. கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர், மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடவில்லை: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு.

 சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடவில்லை. ஜான் பாண்டியன் போட்டியிட்டால், அவர் கேட்டால் ஆதரவு கொடுப்போம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.