செவ்வாய், 24 ஜூலை, 2012

தாமிரபரணியில் மூழ்கி இறந்தவர்களுக்கு 13ம் ஆண்டு நினைவு தினத்தில் மலரஞ்சலி



நெல்லை : நெல்லை தாமிரபரணி ஆற்றில் இறந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினத்தையொட்டி அனைத்துக்கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் நடத்திய தடியடியில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டு தோறும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் தாமிரபரணி ஆற்று நீரில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கொக்கிரகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து அமைதிப் பேரணி நடந்தது. பின்னர் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலும், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராகவ் மாடசாமி தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாமக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வியனரசு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் ஊர்வமலாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ., சார்பில் எஸ்சி அணி மாநில செயலாளர் முருகதாஸ் தலைமை யிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல் திருமாவளவன் தலைமையிலும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் மேற்பார்வையில் துணை கமிஷனர் ஜெயபாலன் தலைமையில் கொக்கிர குளம் தாமிரபரணி ஆற்றங்கரை, சந்திப்பு, வண்ணார்பேட்டை பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக