செவ்வாய், 24 ஜூலை, 2012

தாமிரபரணியில் 17 பேர் பலியானதன் 13ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருநெல்வேலி: நெல்லை, தாமிரபரணியில் உயிர் நீத்த 17 பேரின் நினைவு தினத்தையொட்டி, பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1999ல், நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி நடந்த ஊர்வலம், கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, 17 பேர் பலியாகினர். தி.மு.க., ஆட்சியில் நடந்த இந்த சம்பவத்தின் 13வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட், பா.ஜ., மள்ளர் மீட்புகளம், பா.ம.க., ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு கட்சியினருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கி, போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததால், அஞ்சலி நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்தன. ஜான் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தலைவர்களைக் கொண்ட மாஞ்சோலை போராளிகள் நினைவுத் தூண் அமைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக்குழுவினர் நெல்லை கலெக்டரைச் சந்தித்து, நினைவுத் தூண் அமைக்க, ஆற்றுப்படுகையில் 10 சென்ட் நிலம் ஒதுக்கித் தருமாறு கேட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக