வியாழன், 13 செப்டம்பர், 2012

செப்டம்பர் 11- 'மாவீரன் இம்மானுவேல் சேகரன்' 55ஆவது நினைவு நாள்

இராமநாதபுரம்,முதுகுளத்தூர் வட்டம், 'செல்லூர்' கிராமத்தைச் சேர்ந்த வேத நாயகம்(எ)சேது வாத்தியார்-ஞானசௌந்தரி இணையருக்கு 1924, அக்டோபர் திங்கள் 9ஆம் நாள் இம்மானுவேல் பிறந்தார். தன்னுடைய 18வது வயதில் 'வெள்ளையனே வெளியேறு'இயக்கத்தில் பங்கெடுத்து மூன்று மாத சிறை தண்டனை அடைந்தார். 'இதம்பாடல்' கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியரான அமிர்தம் கிரேஸ் என்பவரை மணந்த இவருக்கு மேரி வசந்த ராணி (வயது-11),பாபின் விஜய ராணி (வயது-9), சுந்தரி பிரபாராணி (வயது-5),ஜான்சி ராணி (வயது-2) என நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன.1945ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர் பின்னர் 'ஹவில்தார்' மேஜராக உயர்ந்தார்.
தோழர் இம்மானுவேல் அவர்கள் இராமநாதபுரம் ஜில்லா-தாழ்த்தப்பட்டோர் லீக் அங்கத்தினராகவும்,முதுகுளத்தூர் தாலுக்கா தாழ்த்தப்பட்டோர் லீக் காரியதரிசியுமாகவும் இருந்து அரிஜன மக்களிடையே கிராமம் கிராம மாகச் சென்று சங்கங்கள் அமைத்தும்,மாநாடுகள் நடத்தியும்,அரிஜன மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.இராமநாதபுரம் ஜில்லாவில் அவர் அரிஜன மக்களின் தலைவராகவும் விளங்கினார்.அரிஜன மக்களின் வளர்ச்சிக்கும்,ஒற்றுமைக்கும் தோழர் இம்மானுவேல்தான் காரணம் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்.
ஹரிஜனங்கள் மறவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதிலும்,ஹரிஜனங்களுக்கு அதிகமாக உதவி செய்து வரும் காங்கிரஸை ஆதரிக்க வேண்டுமென்பதிலும்,...ஸ்ரீ இமானுவேல் முக்கியமானத்தலைவராக இருந்தார்.
ஸ்ரீமுத்துராமலிங்கத் தேவர் மறவர் வகுப்பில்,முதுகுளத்தூர் பகுதியில் மிகுந்த செல்வாக்குள்ளவர் என்பது மறுக்க முடியாத விஷயம்.அந்த மறவர் வகுப்பார்களும் முத்துராமலிங்கத் தேவரிடம் மிகுந்த பக்தியுள்ளவர்கள்.அவருடைய உத்தரவுக்கு கீழ்படிந்து உயிரை விடுவதற்குக் கூட அவர்கள் தயாராய் இருப்பவர்கள்.
முதுகுளத்தூர் பகுதியில் தேவர்கள்,சேர்வைக்காரர்கள் ஆகிய முக்குலத்தைச் சேர்ந்தவர்கள்,ஜனத்தொகையில் 45 சதவீதம் இருக்கிறார்கள்.அதற்கு அடுத்ததாக உள்ள ஹரிஜன சமூகம் 20 சதவீதம் ஜனத்தொகை கொண்டது.  ஹரிஜனங்களும்,சக்கிலியர்களும்,வண்ணார்களும் தொன்றுதொட்டே உயர் ஜாதிகாரர்களுக்கு அடிமைகளாக இருந்து வருகிறார்கள்.பூரணமாக கட்டுப்பட்டு இருக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள்.இந்தப் பகுதியிலுள்ள தலைவர்கள் எல்லோருமே,தேவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான்.
இந்தப் பகுதியில் தேவர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு படிப்பு அதிகமாக கிடையாது.நிலத்திலிருந்து வரும் வரும்படியும் போதுமானபடியாக இருப்பதில்லை.என்றாலும் ஜாதிக்கட்டுப்பாடு அவர்களுக்குள் அதிகமாய் உண்டு.
ஹரிஜனங்கள் வர வர அதிகமாக படித்து வருகிறார்கள்.பலர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து பின்பு,இந்த நாட்டின் சுதந்திரக் குடிகள் என்ற முறையில் தங்களுடைய உரிமைகள் என்ன என்பதை அறிந்து கொண்டார்கள்....
முன் காலத்தில் இருந்தபடி,ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர்கள் மேல் வகுப்பார்களைப் பார்த்தால்,அவர்கள் உடம்பிலே மேலே போட்டிருக்கிற துணியை எடுத்துவிட வேண்டுமென்றும்,கால்களில் செருப்புகள் இல்லாமல் நடக்க வேண்டுமென்றும் உள்ள பழக்கமானது,முதுகுளத்தூர் பகுதியில் இன்னமும் இருந்து வருகிறது.
கல்வியிலும்,அறிவிலும் விருத்தி அடைந்து வருகிற ஹரிஜன வகுப்பார், இம்மாதிரி காரியங்களைச் செய்வதற்கு இந்தக்காலத்தில் சம்மதிக்கமாட்டார்கள் என்பது தெளிவான விஷயம்.ஆகவே அங்கங்கே இந்தப் பழைய அநாகரீக முறைகளை ஹரிஜனங்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள்.ஆனால் தேவர்கள் இதை விடவில்லை. தகராறுக்குக் காரணமே இந்த விஷயந்தான்.  இதிலிருந்துதான் மற்ற காரியங்கள் தோன்றுகின்றன....
ஸ்ரீமுத்துராமலிங்கத் தேவர் அரசியலில் காங்கிரசுக்கு எதிரானவர். ஆகவே அந்தப் பகுதியில் தேர்தல்கள் வரும்போது,காங்கிரசுக்கு விரோத மாக உள்ளவர்களையே அவர் ஆதரிக்க விரும்புவது இயற்கை...
ஆனால்,ஹரிஜனங்கள் தங்களுக்கு காங்கிரசினால் ஏற்பட்டுள்ள நன்மையைக் கருதி,காங்கிரசையே ஆதரிக்க விரும்பினார்கள்.அதன் மூலம் தங்கள் மீது வெகுகாலமாக இருந்துவந்த மறவர்களின் ஆதிக்கத்தையும் ஒழிக்க விரும்பினார்கள்.ஆகவே, இந்த வருஷ ஆரம்பத்தில் நடந்த பொதுத்தேர்தலில்,ஹரிஜனங்கள் பெரும்பாலும் காங்கிரசுக்கே ஓட்டுக்கொடுத்தார்கள்.  இதனால் தேவர் வகுப்பார்கள் கோபம் கொண்டார்கள்.
இதன் பலனாக ஹரிஜனங்கள் உபயோகித்து வந்த கிணறுகளில் ஆபாசமான பொருள்களைப் போட்டு,ஹரிஜனங்களுக்கு கஷ்டம் விளைத்தார்கள்.பல ஹரிஜனங்களை அடித்தார்கள்.ஹரிஜனப் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள்.  பல ஊர்களில் ஹரிஜனங்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன.
முதுகுளத்தூர் பகுதியில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டதும்,சர்க்கார் அதிகாரிகள் தேவர் வகுப்பைச் தலைவர்களை அழைத்து எச்சரிக்கை செய்தார்கள்.  இருப்பினும் ஹரிஜனங்களை அடக்கியாள வேண்டுமென்ற ஆசையை அவர்களால் குறைக்க முடியவில்லை.
இராமநாதபுரம் ஜில்லா ஹரிஜன மக்கள் மறவர்களால் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்து,மதுரை-ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி எம்.ஜி.ஹோம்ஸ் முன்னிலையில் மாவட்டக் கலெக்டர் வி.ஆர்.பணிக்கர் அவர்கள் 10.09.1957 மாலை முதுகுளத்தூர் தாலுகா ஆபீஸில் சமாதானக் கமிட்டி என்ற பெயரால் கூட்டம் நடத்தினார்கள்.
மேற்படி கூட்டத்திற்கு ஹரிஜனங்களின் பிரதிநிதிகளாக திருவாளர்கள் வி.இம்மானுவேல் சேகரன் அவர்களும்,வீராம்பல்  ஜெ.வேதமாணிக்கம் அவர்களும்,பேரையூர் பெருமாள் பீட்டரும்,ஆலத்துங்குடி கம்பரும்,சாத்தையா என்பவரும் - மறவர்கள் பிரதிநிதிகளாக (ஜாதி இந்துக்கள்)திருவாளர்கள் உ.முத்துராமலிங்கத்தேவர் எம்.பி அவர்களும்,டி.எல்.சசிவர்ணத்தேவர் எம்.எல்.ஏ அவர்களும்,ஆப்பனூர் அர்ச்சுனத்தேவர் அவர்களும்,சித்திரங்குடி சுப்பிரமணியத் தேவரும்,முத்து துரைச்சாமித்தேவரும்,இளஞ்சம்பூர் கருப்பையாத் தேவரும் ஆஜரானார்கள்.இதரப் பொதுஜனங்களின் சார்பில் திருவாளர்கள் வி.எம்.எஸ். வேலுச்சாமி அவர்களும்,அருணகிரி அவர்களும்,சுப்பையா அவர்களும், சீனிவாச அய்யங்கார் அவர்களும் விஜயம் செய்திருந்தார்கள்.
காலை ஒன்பது மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் முத்துராமலிங்கத் தேவரின் தாமதமான வருகையால் பத்து மணிக்குத் தொடங்கியது.மாவட்டத்தில் அமைதி உண்டாவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் கேட்டு மாவட்ட கலெக்டர் பேசிய பின் மறவர்கள் சார்பில் முத்துராமலிங்கமும் நாடார்கள் சார்பில் வேலுச்சாமியும்,தேவேந்திரர்கள் சார்பில் இம்மானுவேல் சேகரனும் பேசினார்கள்.  ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போக,இறுதியில் 'பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சமாதானப் படுத்தலாம்' என்று தேவர் சொல்ல 'மக்களின் கோபம் தணியாத நிலையில் அது பயனிக்காது'என்றும் 'வேண்டுமானால் அமைதியை வலியுறுத்தி அனைவரும் கையெழுத்திட்ட துண்டுபிரசுரத்தை அச்சிட்டு வழங்கலாம்' என்றும் பெருமாள் பீட்டர் கூறினார்.
'தேவேந்திரர்களுக்குப் படிக்கத் தெரியாததால் துண்டுப் பிரசுரம் வழங்கிப் பயனில்லை' என உ.மு.தேவர் சொல்ல, 'மறவர்களை விட தேவேந்திரர்கள் அதிகம் பேர் படித்தவர்கள் என்பது கணக்கெடுத்துப் பார்த்தால் தெரியும்.'- என்றார் இம்மானுவேல்.
பின்னர்,'மறவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் தேவேந்திரர்கள் திரும்பப் பெற்றாலன்றித் தான் சமாதானத்துக்கு வரமுடியாது' என்று தேவர் ஆங்கிலத்தில் கூறினார்.அதைக் கேட்ட இம்மானுவேல், 'அப்படியானால் மறவர்கள் தேவேந்திரர்களின்
மீது போட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று அவர்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்' என ஆங்கிலத்திலேயே அவருக்கு பதிலளித்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த உ.மு.தேவர் 'பள்ளப்பயலே'என்றும் மற்ற வார்த்தைகளையும் சொல்லி 'உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
ஆட்சித்தலைவர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்த பிறகு ஒரு வழியாக துண்டுப்பிரசுரம் வெளியிடுவது என முடிவானது.மக்களிடம் அமைதியை வலியுறுத்தும் கூட்டு வேண்டுகோளில் அனைவரையும் கையெழுத்திடுமாறு கலெக்டர் சொல்ல 'இம்மானுவேல் சேகரன் தனக்கு சமமான தலைவர் இல்லை' என்று கூறி உ.மு.தேவர் கையெழுத்துப் போட மறுத்து விட்டார்.'தேவேந்திரர்களின் சார்பில் இம்மானுவேல் சேகரனும், மறவர்களின் சார்பில் நீங்களும் கையெழுத்துப் போட வேண்டும்' என்று கலெக்டர் நிர்பந்தித்ததின் பேரில் உ.மு.தேவர் வேண்டுகோளில் கையெழுத்திட்டார்.  கூட்டம் முடிந்து வெளியே வந்த உ.மு.தேவர் தமது ஆதரவாளர்களைப் பார்த்து 'என்னை எதிர்த்துப் பேசும் அளவுக்கு ஒரு பள்ளப் பயலை வளர்த்து விட்டிருக்கிறீர்களே, நீங்களும் மறவர்களா ? என்று ஆவேசப் பட்டிருக்கிறார்.
அடுத்த நாள் (11.09.1957) மாலை எமனேசுவரம் பகுதியில் நடைபெற்ற பாரதியார் நினைவு நாள் விழாவில் இம்மானுவேல் சேகரன் பங்கேற்று பேசுகிறார். அவ்விழாவில் பேசியபோது ''காக்கை குருவி எங்கள் சாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெலாம் நாமின்றி வேறில்லை-நோக்க நோக்கக் களியாட்டம்' எனும் பாரதியின் கவிதை வரிகளைப் பாடி முடிக்கிறார்.   கூட்டம் முடிந்து இரவு 8.30 மணிக்கு வீட்டுக்கு வந்து இரவு உணவு முடித்துக்கொண்டு, நாள் முழுவதும் தனக்கு துணையாய் இருந்த நண்பர் கிருஷ்ணமூர்த்தியை வழியனுப்ப கிளம்பிய திரு இம்மானுவேலிடம், அவரது மனைவி அமிர்தம் கிரேஸ், 'எதற்கும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்' என்று சொல்கிறார்.
அதற்கு இம்மானுவேல் சேகரன்,''நான் ஒருவன் இறந்து போனால் பரவாயில்லை. எனது சமூக முன்னேற்றத்திற்காக நான்ஒருவன் இறந்து போனால்,என் சமூகத்தைச் சேர்ந்த நூறு பேர் உயிரைவிட  வருவார்கள்.என் சமூக முன்னேற்றம்தான் உயிரை விடப் பெரியது'' என்று பதிலளித்து விட்டு வீட்டுக்கு அருகே இருந்த சாலைக்கு வருகிறார்.  வந்து நண்பரை வழியனுப்பி விட்டு பெட்டிக்கடைக்கு அருகில் நின்று தமது சகநண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கிறார்.
இரவு 9.30 மணி.திடீரென சாலையில் இருந்த விளக்குகள் அணைந்தன.  முதுகுளத்தூரில் இருந்த வந்த பேருந்திலிருந்து இறங்கிய ஒரு கூட்டம் பயங்கர ஆயுதங்களோடு தேவேந்திரர் நிற்கும் இடத்திற்க்கு பின்புறமாக வருகிறது. வந்து  பேசிக்கொண்டிருந்த அவரைத் தாக்கி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.  முத்துராமலிங்கத் தேவரின் தூண்டுதல் பேரில் இக்கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது.  எனவே,முதல் எதிரியாக முத்துராமலிங்கத் தேவரும்,அவருடன் மேலும் பதினொரு நபர்களும்  குற்றவாளிகளாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி,அப்போரில் தன்னையே களப்பலியாய் தந்த மாவீரர் இம்மானுவேல் சேகரன் அவர்கள் உயிர் நீத்த இந்நாளில் அவரை நினைவு கூறுவது என்பது சடங்கோ,சம்பிரதாயமோ அல்ல. 'ஒடுக்கப்பட்டோரின் உயர்வு' என்பதே அம்மாமனிதரின் நோக்கம்.அதனை நோக்கி முன்னேறுவோம். நாமும் நம் வருங்காலத் தலைமுறையும்கல்வியிலும்,பொருளாதாரத்திலும் மேம்பட்டு நின்று, ''நான் யாருக்கும் அடிமையில்லை ; எனக்கடிமை எவருமில்லை''என்கின்ற சமத்துவ வாழ்வைப் படைக்க உறுதி ஏற்போம் !
வாழ்க ! மாவீரன் இம்மானுவேல் சேகரன்; வெல்க ! அவரது கொள்கை.
(நன்றி:இதழாளர் டி.எஸ்.சொக்கலிங்கம்- இதழாளர் தினகரன்- திரு,அ.ஜெகநாதன்- திரு,தமிழவேள்- திரு,கா.இளம்பரிதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக