செவ்வாய், 25 ஜூன், 2013

இருபிரிவினரிடையே மோதல் பூவனூரில் சாலை மறியல் போலீசார் குவிப்பு

நீடாமங்கலம், : நீடாமங்கலம் அருகே இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வெள்ளாம்பூவனூரை சேர்ந்தவர் சுதாகர்(32). கீழபூவனூர் காமராஜ், இவரது மகன் ராம்பிரபு, மேலபூவனூரை சேர்ந்தவர் மகேந்திரன். இருதரப்பினரும் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள். இந்நிலையில் நேற்று அங்குள்ள ஒரு திருமணத்திற்கு 
சென்றுவிட்டு பூவனூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருதரப்பினரும் மது அருந்தினர். அப்போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுதாகர் என்பவரை காமராஜ், ராம்பிரபு, மகேந்திரன் ஆகியோர் தாக்கினர். அப்போது அப்பகுதியில் இறந்தவர் பிரேதம் ஒன்று எடுத்து வந்த பொதுமக்கள், மோதல் தடுத்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடினர். காயமடைந்த சுதாகர், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சுதாகரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், பிரேதம் எடுத்து வந்தவர்கள் சேர்ந்து பூவனூர் பாலம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மன்னார்குடி டிஎஸ்பி அன்பழகன் தலைமையிலான நீடாமங்கலம், மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. அப்பகுதியில் ஏற்பட்ட பதட்டத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திடீர் மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக