திங்கள், 8 ஜூலை, 2013

எத்தனை தடைகள் வந்தாலும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டே தீருவேன்-செந்தில் மள்ளர்



ஒரு புத்தகத்துக்கு தமிழக அரசு விதித்து இருக்​கும் தடை,  எழுத்தாளர்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
மள்ளர் மீட்புக் களத்தின் நிறுவனர் செந்தில் மள்ளர் எழுதி இருக்கும் 'மீண்டெழும் பாண்டிய வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட தடை விதித்திருப்பதோடு நூலை எழுதியவர் மீது தேசத்துரோக வழக்கும் போட்டுள்ளது தமிழக அரசு.
ஏன் இந்தக் களேபரம்? அந்த அமைப்பின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பாஸ்கர சோழனிடம் கேட்டோம்.
''ஏழு ஆண்டு கால உழைப்பில், 'மீண்டெழும் பாண்டிய வரலாறு’ என்ற நூலை செந்தில் மள்ளர் எழுதினார். இந்தப் புத்தகத்தை கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சாத்தூரில் வெளியிட இருந்தோம். ஆனால், அந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்கு காவல் துறை  தடைவிதித்தது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். அதன்பிறகு, புத்தகத்தை மதுரையில் வெளியிடலாம் என்று அனுமதித்தனர். ஜூலையில் புத்தகத்தை வெளியிடலாம் என்ற முடிவில் இருந்தபோதுதான் தமிழக அரசு இந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்து இருப்பதோடு, செந்தில் மள்ளர் மீது தேசத்துரோக வழக்கையும் பதிவுசெய்துள்ளது. செந்தில் மள்ளரின் மாமனார் பெருமாள் சாமி மீதும் தடை செய்யப்பட்ட புத்த​கத்தை விற்றதாக  பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளிவிட்டது.
தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை​களைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். 'பள்ளரே, மள்ளர். பள்ளரே பாண்டியர். அவர்கள் தமிழ் பகைவர்களான நாயக்கர்களால் வீழ்த்தப்​பட்டனர்’ என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடித்தளம். பாண்டியர்கள்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்கிறோம். இதை எழுதியதன் மூலமாக சாதி மோதலைத் தூண்டுகிறோம் என்கிறார்கள். சாதி மோதலைத் தூண்டக்கூடிய புத்தகங்கள் இங்கே ஏராளம் உள்ளன. தமிழனின் தொப்புள்கொடி உறவை விவரிக்கும் இந்தப் புத்தகத்துக்கு தடைவிதித்து இருப்பது கொடுமையிலும் கொடுமை. இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள செய்திகளை ஆதாரத்துடன் மறுப்பவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் வெகுமதி தருகிறேன் என்று, செந்தில் மள்ளர் அறிவித்துள்ளார். அதை எதிர்கொள்ள முடியாதவர்கள்தான் இந்தப் புத்தகத்தை தடை செய்ய மறைமுகமாகத் தூண்டுகிறார்கள்'' என்றார்.
''புத்தக வாசிப்பு பழக்கமே குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில், புத்தகங்களால் மோதல் ஏற்படும் என்ற நினைப்பில் தமிழக அரசு தடைசெய்து இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில், சாதிக் கலவரங்களைத் தூண்டும்விதமாக சிலர் பேசும்போதும், சாதி உணர்வைத் தட்டி எழுப்பும் வகையில் பேனர்கள் வைக்கப்படும்போதும் வேடிக்கை பார்த்த அரசு, புத்தகங்களைத் தடை​செய்வதில் மட்டும் இத்தனை அவசரம் காட்ட வேண்டியதில்லை'' என்கிறார் எழுத்தாளர் மனுஷ்ய​புத்திரன்.
தலித் முரசு இதழின் ஆசிரியர் புனிதப் பாண்டியன், ''ஒரு புத்தகம் வெளியிடுவதற்கு முன்னரே அதற்கு தடை விதித்து இருப்பதோடு, உண்மை நிலவரம் தெரியாமல் அதன் ஆசிரியர் மீது தேசத்துரோக வழக்கு போட்டது அரசாங்கத்தின் மிகப் பெரிய தவறு. அதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒருவரின் கருத்தைத் தெரிவிக்க முதலில் அனுமதிக்க வேண்டும். ஆனால், இங்கு கருத்துரி​மைக்கே தடைவிதித்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு  எதிரானது. இங்கே பல தலைவர்கள் கட்சிகளின் பெயரில் தலித்துகளுக்கு எதிராக சாதி மோதலை தூண்டிவிட்டபோது அவர்களைத் தண்டிக்காத அரசு, ஒருவரின் உரிமையைச் சொல்லக்கூடிய புத்தகத்தைத் தடை​செய்வது தவறு. எனக்கும் அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டு இருக்கும் பல கருத்துக்களில் உடன்பாடு இல்லை. ஆனால், சமூகத்தால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்றே கருதுகிறேன். இதனால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. சிறப்புவாய்ந்த அரசர்களைத் தங்கள் தலைவனாக இங்கே எல்லா சாதியினரும் கொண்டாடுகிறார்கள். அதோடு, ஒரு அரசனின் வரலாறு மட்டும் ஒட்டுமொத்த தமிழர்களின் வரலாறு ஆகிவிடாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.
தேவர் இன இளம்புலிகள் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜமறவன், ''தங்களை உயர்ந்த சாதியினராகக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட புத்தகம் அது. அதனால், அவர்களை உயர்ந்த சாதியினராக சமுதாயம் ஏற்றுகொள்ளுமா? உண்மையைத் திரிக்காமல் வரலாற்றை எழுத வேண்டும். மற்ற சமுதாயத்தினரை கேவலப்படுத்தி, தன்னுடைய சமுதாயத்தை உயர்த்திக்காட்ட வேண்டும் என்ற நோக்கம்தான் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பதில் எந்தத் தவறும் இல்லை'' என்றார்.
தலைமறைவாக இருக்கும் செந்தில் மள்ளர், புத்தகம் தடை செய்யப்பட்​டவுடன் 'யூ டியூப்’ மூலம் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ''இது புத்தகத்துக்கான தடை அல்ல. ஒட்டு​மொத்தத் தமிழ் தேசிய அரசியலுக்கே விதிக்கப்பட்ட தடை. தமிழினத்தின் வரலாற்றைத் தமிழக அரசு மூடி மறைக்கும் செயல், அரசியல் உள்நோக்கம்​கொண்டது. உண்மையான வரலாற்றை யாராலும் மூடி மறைக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டே தீருவேன்'' என்று பொரிந்திருக்கிறார் செந்தில் மள்ளர்.
நல்ல தீர்ப்பு கிடைக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக