செவ்வாய், 9 ஜூலை, 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு நூலாசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும்..


மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்னும் நூலை எழுதிய அதன் ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த கெச்சிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கே.செந்தில் மல்லர் மனு தாக்கல் செய்துள்ளார்.
7 ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு, 644 அரிய ஆவணங்களை ஆராய்ந்து மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதினேன். கடந்த 28.5.2012 அன்று நூல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நான் எழுதிய நூலை தடை செய்து கடந்த மே 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது சட்ட விரோதமானது. ஆகவே, எனது நூலை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் செந்தில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், ஆர்.சுப்பையா மற்றும் சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.விஜேந்திரன், மனுதாரர் செந்தில் எழுதிய நூல் வெளியிடப்பட்டு ஓராண்டுகள் முடிந்து விட்டன. 1000 பிரதிகளுக்கு மேல் நூல் விற்பனை ஆகி விட்டது. இந்த நூலின் காரணமாக இதுவரை ஒரு சிறு அசம்பாவித சம்பவம் கூட எங்கும் நடைபெறவில்லை. இந்நிலையில் மனுதாரரின் நூலை அரசு தடை செய்துள்ளது. மேலும், மனுதாரரும், அவரது குடும்பத்தினரும் ஏராளமான சித்திரவதைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்று வாதிட்டார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தனக்கு அவகாசம் வேண்டும் என்று கோரினார்.
இதனைத் தொடர்ந்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள், அச்சடித்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இம்மாதம் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக