திங்கள், 9 செப்டம்பர், 2013

இமானுவேல் சேகரன் நினைவு நாள் தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை, அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிடக் கோரிய மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தமிழக அரசின் உள்துறைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
   ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த கே. அழகர்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். ஜெய்சந்திரன் மற்றும் என். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பத்துள்ளது.
   அவரது மனு விவரம்: சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இமானுவேல் சேகரனுக்கு முக்கியப் பங்கு உள்ளது. இந்திய ராணுவத்திலும் அவர் பணியாற்றி உள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். குறிப்பாக, தென்தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க கடுமையான போராட்டங்களை நடத்தினார். தாழ்த்தப்பட்ட, அடித்தட்ட மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்துவதற்குப் பாடுபட்டவர்.
   பரமக்குடியில் செப். 11-ஆம் தேதி அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அரசும் கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறது. ஆகவே, அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக, அரசே நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
   இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். ஜெய்சந்திரன், எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தமிழக அரசின் உள்துறைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை செப். 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக