சனி, 12 அக்டோபர், 2013

ஆசிரியர் காலிப்பணியிடங்களை தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு அளித்து நிரப்ப வேண்டும்....


நெல்லையில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை இளநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 29 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதித்தேர்வில் 60 சதவீதம் மார்க் பெற்றவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். 69 சதவீத இடஒதுக்கீடு முறை இங்கு பின்பற்றப்படவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. பின்னடைவு ஆசிரியர் காலிப்பணியிடங்களை தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு அளித்து நிரப்ப வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி 29ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

தாதுமணல் அள்ளுவதற்கு அரசு நிரந்தரத்தடை விதிக்க வேண்டும். இயற்கை வளத்தை கொள்ளையடிப்பவர்கள் மீது அரசு இரக்கம் காட்டக்கூடாது. தாதுமணல் அள்ள தடை விதித்ததால் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர் என்பதை ஏற்க முடியாது. கிரானைட் தொழில், தாமிரபரணி மணல் கொள்ளை, கடத்தல் மூலமாகவும் பலர் வேலைவாய்ப்பு பெறலாம். தொழில் சட்டப்பூர்வமாக நடக்கிறதா என பார்க்க வேண்டும்.
தாதுமணல் அள்ளுவதற்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்து அரசியல் ஆதாயத்திற்காக பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. இப்பிரச்னையில் தன் நிலைப்பாட்டை அரசு தெரிவிக்க வேண்டும். ககன்தீப்சிங் பேடி அறிக்கையை வெளியிட வேண்டும். தாதுமணல் விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வல்லநாட்டில் தனியார் இன்ஜி., கல்லூரி முதல்வரை மாணவர்கள் கொலை செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு வேண்டும். கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் பொறுப்பு கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு.
ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு திமுக தலைவர் எழுதிய கடிதத்தை நான் பார்க்கவில்லை. இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து சென்னையில் வரும் 18ம் தேதி நடக்கும் மாவட்டப்பொறுப்பாளர்கள், அரசியல் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பார்லிமென்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கட்சித்தலைவர் என்ற முறையில் தென்காசி தொகுதியில் மக்களை சந்தித்து வருகிறேன்.
இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார். மாநகர் மாவட்டச்செயலாளர் செல்லப்பா, மேற்கு மாவட்டச்செயலாளர் அரவிந்தராஜா உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக