புதன், 20 நவம்பர், 2013

மொரிஷியஸில் ஒன்றிணைந்த தமிழர்கள் ...


ஈழத் தமிழர்களை காக்கத் தவறினால்..? மொரிஷியஸில் ஒன்றிணைந்த தமிழர்கள் ஆப்ரிக்க கண்டத்தின் தென் கிழக்குக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு குட்டித் தீவு மொரிஷியஸ். இங்கு போஜ்புரி பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். மொரிஷியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் மாநகரில் கடந்த 8, 9, 10-ம் தேதிகளில் 'புலம்பெயர் தமிழர் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டை மொரிஷியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பும் அனைத்துலக ஈழத் தமிழர் அவையும் இணைந்து ஏற்பாடு செய்தன. இந்த மாநாட்டுக்கு இந்தியா, இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஃப்ரான்ஸ், அமெரிக்கா என 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்களின் பிரதிநிதிகளும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமான மொரிஷியஸ் தமிழர்களும் குவிந்தனர். தமிழகத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக ரோஸ்ஹில் மாநகர மேயர் வந்திருந்தார். 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் இறந்துபோன தமிழர்களையும் காணாமல் போனவர்களையும் நினைவுகூரும் வகையில் தமிழ் ஈழம் என்று பொறிக்கப்பட்ட நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுத் தூணுக்கு ஒவ்வொருவரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இரண்டாம் நாள் நிகழ்வு கிராண்ட் பே-வில் உள்ள ஐசிசி ஹாலில் நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக மொரிஷியஸ் நாட்டின் அதிபர் ராஜ்கேஷ்வர் புரியாக்-கும் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் மொரிஷியஸின் முன்னாள் பிரத மருமான பால் ரேமண்ட்-டும் கலந்து கொண்டனர். இதில் பேசிய பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, ''இப்போது ஈழத் தமிழர்களைக் காக்கத் தவறினால் மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், தென் ஆப்ரிக்கா என 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்'' என்றார். அனைத்துலக ஈழத் தமிழர் அவையின் பொதுச் செயலாளர் திருச்சோதி, ''இரண்டரை லட்சம் மக்களை இழந்து அநாதைகளாக இருக்கிறோம். 90 ஆயிரம் விதவைகளையும், 40 ஆயிரம் ஊனமுற்றவர்களையும், 30 ஆயிரம் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கிறோம். தாய்த் திருநாடான இந்தியா எங்களை கைவிட்டது மன வருத்தத்தை அளிக்கிறது'' என்றார். இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மொரிஷியஸ் அதிபர் ராஜ்கேஷ்வர், ''தமிழ், உலகத்தின் பாரம்பரியம் மிக்க செம்மொழி. தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள். ஆரம்ப காலகட்டத்தில் கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு மொரிஷியஸின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டி ருக்கின்றனர். இப்போது பல துறைகளிலும் தொழில் அதிபர்களாக இருந்து மொரிஷியஸ் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு மொரிஷியஸ் அனைத்து விதமான உதவிகளையும் செய்யும். இலங்கையில் நடைபெற்ற இனப் பேரழிவைப் பற்றி பேசினார்கள். மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது'' என்றார். மொரிஷியஸின் முன்னாள் பிரதமரும் எதிர்க் கட்சித் தலைவருமான பால் ரேமண்ட், ''தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், 'இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது’ என்று தீர்மானம் போட்டிருக்கிறார். எங்கள் கட்சியின் சார்பாக மொரிஷியஸ் பிரதமரும் இந்த மாநாட்டுக்குப் போகக் கூடாது என்று தீர்மானம் போட்டிருக்கிறோம். தமிழ் ஈழத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்'' என்றார். மூன்றாம் நாள் நிகழ்வு காலை 9 மணிக்கு கிராண்ட் பே-வில் உள்ள ஐசிசி ஹால், கலோடைன் ஹோட்டலில் நடைபெற்றது. ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதி புஷ்பராணி மாநாட்டின் தீர்மானமாக இல்லாமல் மொரிஷியஸ் தமிழர்களின் பிரகடனமாக கலாசார, சமூக, பொருளாதார, அரசியலில் தமிழர்கள் எப்படி கோலோச்சுவது என்று பேசினார். இந்த மாநாட்டை அடுத்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வதை மொரிஷியஸ் பிரதமர் புறக்கணித்துள்ளார். அதோடு, அங்கு அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணுக்கு அந்த அரசு மரியாதை செலுத்துகிறது. இங்கு? - நன்றி-ஜூனியர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக