புதன், 20 நவம்பர், 2013

சம்பத் கமிசன்...சாதிவெறி பிடித்த அதிகாரிகள் திட்டமிட்டு நடத்திய கலவரம் இது.

காவல்துறையிலும், உளவுத்துறையிலும் இருக்கும் சாதிவெறி பிடித்த அதிகாரிகள் திட்டமிட்டு நடத்திய கலவரம் இது.
கீழ்வெண்மணி கொலைகள் தொடர்பாக விசாரித்த கணபதி கமிசன் “கொலையை செய்தவராக சொல்லப்படும் நபர், வசதி படைத்தவர். செய்திருக்க மாட்டார்” என்று சொல்லியது. 
கொடியங்குளம் கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட கோமதிநாயகம் கமிசன், “தாக்குதலை காவல்துறை நடத்தவில்லை” என்றது. 
தாமிரபரணி ஆற்றில் 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நியமிக்கப்பட்ட மோகன் கமிசன், “ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டனர்” என்று சொன்னது. 
இப்போது நடந்த தவறை மறைக்க சப்பைக்கட்டு கட்டியுள்ளது சம்பத் கமிசன்.
ராமநாதபுரம் எஸ்.பி.காளிராஜ் மகேஷ்குமாரும், நெல்லை டி.ஐ.ஜி. வரதராஜனும் என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். அவர்களிடம் பழனிக்குமார் வீட்டிற்கு செல்லும் எண்ணமில்லை என்று உறுதிமொழி கொடுத்திருந்தேன். போலிசோடு நான் ஒத்துழைக்க தயாராக இருந்தும் என்னை கைது செய்து பதட்டத்தை ஏற்படுத்தினார்கள்.
தேவையில்லாமல் வேறு எங்கும் கொண்டு செல்லாதீர்கள். வீட்டிலேயே என்னை சிறை வையுங்கள் என்று போலிசிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்காமல் வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்திற்கு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர். அங்கு அழைத்துச் சென்றது வேறு மாதிரியாக தகவல் பரவிவிட்டது. இது போலிஸ் நடத்திய சதி.
துணை கமிசனர் செந்தில்வேலன் சட்டையைப் பிடித்து அடிக்க முற்பட்டதால் துப்பாக்கிச்சூடு என்கிறார்கள். செந்தில்வேலனின் சட்டையைப் பிடித்து இழுத்தவரை இழுத்துப் போட்டு சாத்துங்கள். அதற்காக ஒட்டுமொத்த கூட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது எந்த விதத்தில் நியாயம்?
டாக்டர்.கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் அந்த வழியாக வந்தபோது, ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் அவர்களைத் தாக்க முற்பட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த மோதல்தான் கலவரத்துக்கு காரணம் என்று சம்பத் கமிசன் அறிக்கை சொல்கிறது.
கிருஷ்ணசாமிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், எங்களுக்குள் போட்டியோ, பகை உணர்வோ இல்லை. கடந்த காலங்களில் எங்களுக்குள் எந்த மோதலும் நடக்கவில்லை. அப்படியிருக்கும்போது, கலவரத்துக்கு காரணம் என்று புதிய கண்டுபிடிப்பைச் சொல்லியிருக்கிறார்கள். என் பெயரை சொல்லிவிட்டு என்னை கமிசன் விசாரிக்க கூட இல்லை.
காவல்துறையில் இருக்கும் சாதிவெறி பிடித்த சிலரும், சில கறுப்பு ஆடுகளும்தான் இந்த கலவரத்துக்கு காரணம். அவர்கள் முதல்வரை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார்கள்.
- ஜான்பாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக