திங்கள், 27 ஜனவரி, 2014

கூட்டணி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் களம் இறங்கிய கிருஷ்ணசாமி..

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது உறுதியாகி விட்டது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகார பூர்வமாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தென்காசி தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதை போன்று அக்கட்சியினர் தேர்தல் பணியையே தொடங்கி விட்டனர். தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பாராட்டு விழா கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியபோது, ’’நம் கட்சியினர் கூட்டணி கட்சியினரோடு இப்போதே நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுவரை இந்த தொகுதியிலிருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றவர்களால் இந்த தொகுதிக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்துள்ளனர்.
எனவே, புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொகுதியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என அனைத்து தரப்பினரும் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கிளை செயலாளர்கள், புதிய நிர்வாகிகள் உடனடியாக வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரி பார்க்க வேண்டும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக