செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

திமுக கூட்டணிக்கு வந்தாலே லாபம்தான்- டாக்டர் கிருஷ்ணசாமி

திருச்சி: திமுக கூட்டணியில் யார் வந்து சேர்ந்தாலும், லாபம் வந்து சேருகிறவர்களுக்குத்தான் என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. திருச்சி திமுக மாநில மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையில்தான் இப்படிக் கூறினார். மாநாட்டில் அவர் பேசுகையில், மூன்று வருடத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். மூன்று வருடத்திற்குள் ஒரு மாற்று முடிவு எடுக்கும் சூழல் ஏன் வந்தது? பெரும்பாலும் ஆளும்கட்சி கூட்டணியில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். வரக்கூடிய சூழ்நிலை உருவாகாது. ஆனால் எங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் அந்த சூழல் வந்துவிட்டது. நானும், மனித நேய மக்கள் கட்சியும் ஒரு முடிவு எடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணிக்கு வந்திருக்கிறோம் என்று சொன்னால் எந்தவித உள்நோக்கமும், சுயநலமும் இல்லை. தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காக பேச வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துத்தான் அதிமுக கூட்டணிக்கு சென்றோம். ஆனால் திமுக எம்எல்ஏக்கள் உள்ளே நுழைந்தாலே வெளியேற்றப்படுகிறார்கள். நாங்கள் பேசினால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. நாங்கள் அவை மரபை மீறியதில்லை. ஆனாலும் எங்களுக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லை என்று சொன்னால் அதிமுகவோடு கூட்டணி வைத்து என்ன பலன். இனிமேல் திமுக கூட்டணிக்கு யாராவது வந்தால் அவர்களுக்குத்தான் லாபமே தவிர, நமக்கொன்றும் எந்தவிதக் குறைவும் ஏற்பட்டுவிடப்போவது கிடையாது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக