வியாழன், 27 மார்ச், 2014

அருவி தொகுதியில் அனல்! தென்காசி சர்வே.........


பாஸ்கர் முத்துராமன்
பாஸ்கர் முத்துராமன்
குளுகுளு குற்றாலத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் தென்காசி தனித் தொகுதியில் தேர்தல் அனல் ஆரம்பித்துவிட்டது. தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதி எங்களுக்குத் தான் என்கிற ரீதியில் தேர்தல் வேலைகளில் பரபரப்பு காட்டத் தொடங்கியிருக்கின்றனர் புதிய தமிழகம் கட்சியினர். இதனால் கூட்டணி உடன்பாடு அறிவிக்கப்படும் முன்னரே புதிய தமிழகம் சார்பில் தேர்தல் வேலைகள் தொடங்கி விட்டன.
தொகுதி சீரமைப்பில் அம்பை, ஆலங்குளம், என இரண்டு நெல்லை மாவட்ட
மோகன் அருணாச்சலம்
மோகன் அருணாச்சலம்
தொகுதிகளை இழந்த தென்காசி தொகுதியில் புதிதாக இணைந்திருப்பவை விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிப்புத்தூரும், ராஜபாளயமும். எனவே தற்போது தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் என்று ஆறு தொகுதிகளுடன் முகம்மாறி நிற்கிறது தென்காசி தொகுதி. இதில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், திருவில்லிப்புத்தூர் என்ற மூன்று தொகுதிகளும் தனித் தொகுதிகள். இந்த ஆறு தொகுதிகளிலுமே அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே வென்றிருக்கின்றன.
ராம் மோகன்
ராம் மோகன்
எந்தக் கட்சியுமே கூட்டணியை முடிவு செய்யாத நிலையில் தற்போது தென்காசியில் தேர்தல் வேளைகளில் பட்டையைக் கிளப்புவது புதிய தமிழகம் மட்டுமே. தனித் தொகுதியான இங்கு தலித் சமுதாய வாக்குகள் 23 சதவீதமும், தேவர் சமுதாய வாக்குகள் 17 சதவீதமும், நாடார் சமுதாய வாக்குகள் 12 சதவீதமும் உள்ளன. இதுதவிர தென்காசி, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகளும் கணிசமாக உள்ளன. கிறிஸ்தவ வாக்குகள் பரவலாக உள்ளன.
இதே தொகுதியை குறி வைத்து 1998&ம் முதலே களமிறங்கி நான்கு தேர்தல்களை சந்தித்திருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி. 1998 தேர்தலில் தனியாகவே 1.40 லட்சம் வாக்குகள், 1999 தேர்தலில் த.மா.கா.வுடன் இணைந்து 1.86 லட்சம் வாக்குகள், 2004 தேர்தலில் 1.11 லட்சம் வாக்குகள், இறுதியாக கடந்த தேர்தலிலும் தனியாகவே 1.16 லட்சம் வாக்குகள் பெற்று தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமாகியுள்ள கிருஷ்ணசாமி இந்தமுறை தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் எளிதாக வெல்வார் என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர் புதிய தமிழகம் கட்சியினர்.
தென்காசி தொகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் கிருஷ்ணசாமி. தென்காசி தொகுதியின் பல்வறு கிராமங்களில் புதிய தமிழகம் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, அனைத்து கிராமங்களிலும் புதிய தமிழகம் கட்சிக் கிளைகள் உருவாக்கப் பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 15ல் தென்காசியில் கட்சியின் 17&வது ஆண்டு விழாவை கொண்டாடி ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியிருக்கிறார் கிருஷ்ணசாமி. காலியாக உள்ள சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது புதிய தமிழகம் கட்சி.
இந்த நிலையில்தான் ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கிருஷ்ணசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு களம் இறங்காமல் தனது மகள் டாக்டர் சங்கீதாவை தென்காசி தொகுதியில் நிறுத்தலாம் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.
இது குறித்து வழக்கறிஞரும், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாருமான பாஸ்கர் மதுரத்திடம் பேசினோம். ‘‘கூட்டணியே இல்லாமல் கடந்த நான்கு தேர்தல்களிலும் சராசரியாக எங்கள் டாக்டர் ஒன்றரை லட்சம் வாக்குகள் வரை வாங்கியிருக்கிறார். இதுவரை தென்காசி தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர்கள் எதுவுமே உருப்படியாக செய்ததில்லை என்பதை முன்னிறுத்தியே பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் டாக்டர் செல்லும்போது மக்கள் ஆரவார வரவேற்பு கொடுப்பதோடு மனமுவந்து தேர்தல் நிதியும் கொடுக்கின்றனர். எனவே இந்தமுறை வெல்வது உறுதி. டாக்டர் ஐயா களம் இறங்குவதையே நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.
அ.தி.மு.க. கூட்டணி தரப்பில் தேர்தல் வேலைகள் இதுவரை தொடங்கப்படாவிட்டாலும் இந்தமுறை தென்காசியை கூட்டணி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்காமல் அ.தி.மு.க.வே தன் வசம் வைத்து களம் இறங்கும் முனைப்பு தெரிகிறது. அ.தி.மு.க சார்பில் முன்னாள் அ.தி.மு.க. எம்.பி முருகேசனின் மனைவியும், நெல்லை மாநகர் மாவட்ட இணைச் செயலாளருமான வசந்தி முருகேசன் அல்லது முன்னாள் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. கோபால கிருஷ்ணன் களமிறங்கலாம் என்று பரவலான பேச்சிருக்கிறது.
அடுத்ததாக தென்காசியை குறி வைக்கும் தேசியக் கட்சி பா.ஜ.க. கடந்த
மக்களுடன் கிருஷ்ணசாமி
மக்களுடன் கிருஷ்ணசாமி
1999&ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ஆறுமுகம், அ.தி.மு.க வேட்பாளர் முருகேசனிடம் வெறும் 889 வாக்குகளில் தோற்றுப்போனார். இதனால் பா.ஜ.க. தென்காசி தொகுதியில் தனக்கு பலமான வாக்கு வங்கி இருப்பதாக நம்புகிறது. தென்காசி தொகுதியில் பா.ஜ.க போட்டியிட்டால் மாநில செயற்குழு உறுப்பினர் சாரதா பாலகிருஷ்னன் அல்லது அய்யா வழிப் பாடகர் சிவச்சந்திரன் வேட்பாளராக நிறுத்தப் பட வாய்ப்புகள் இருக்கின்றன.
சாரதா பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘கடந்த வருடங்களில் தென்காசி தொகுதியில் பா.ஜ.க. சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் அதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். எனது சமுதாயம் சார்ந்த பறையர் சமுதாய இன மக்களே தென்காசி தொகுதியில் வெற்றியை நிர்ணயம் செய்வார்கள் என்பது கடந்த இரு தேர்தல்களிலும் நிருபிக்கப்பட்டிருக்கிறது. எங்களது களப்பணி வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது’’ என நம்பிக்கையோடு பேசுகிறார்.
தென்காசி தொகுதியில் காங்கிரஸுக்கு இருக்கும் செல்வாக்கையும் யாரும் புறக்கணிக்க முடியாது. 1977 முதல் 1996 வரை தொடர்ந்து ஆறுமுறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக வலம் வந்தவர் மறைந்த முன்னர் அமைச்சர் அருணாசலம். அருணாசலம் 1999 தேர்தலில் தோற்றபிறகு காங்கிரஸ் சார்பில் இதுவரை வேட்பாளர் நிறுத்தப்படாத
சாரதா பாலகிருஷ்ணன்
சாரதா பாலகிருஷ்ணன்
நிலையில் இந்தமுறை காங்கிரஸ் சார்பில் அருணாச்சலத்தின் மகன் மோகன் நிறுத்தப்படலாம் என்கிறார்கள். மோகன் சார்பில் நம்மிடம் பேசிய ராம்மோகன், ‘‘மோகன் மாநில எஸ்.சி.எஸ்.டி.அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அருணாச்சலத்தை கடந்த 1998 தேர்தலில் கிருஷ்ணசாமி தான் போட்டியிட்டதன் மூலம் தோற்கடிக்க முடிந்தது. ஆனால், இன்றுவரை அவரால் வெற்றிபெற முடியவில்லை. இதைத்தான் சாதி அரசியல் மூலம் கிருஷ்ணசாமியால் செய்ய முடிந்தது. இனியும் கிருஷ்ணசாமியால் வெல்ல முடியாது. காரணம் வெறும் சாதியை மட்டுமே நம்பி ஏமாற மக்கள் ஒன்றும் ஏமாளிகளல்ல. காங்கிரஸ் வேட்பாளர் தென்காசியில் சாதி மத பேதமின்றி வெல்வது உறுதி’’ என்றார் உறுதியாக.
அ.தி.மு.க.வின் வாக்குக் வங்கியாகக் கருதப்படும் தேவர் வாக்கு வங்கி கணிசமாக உள்ள தென்காசி தொகுதியில் அந்த வாக்குகளை தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் பெறமுடியுமா? பிரிந்து கிடக்கும் தலித் சமுதாய வாக்கு வங்கி முழுமையாக டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து வெற்றிபெறச் செய்யுமா? என்பதுதான் இப்போது புதிய தமிழகம் கட்சியின் முன்னிற்கும் கேள்விகள். இவை அனைத்தையும் தகர்த்து புதிய தமிழகம் வெல்ல முடியுமா என்பதற்கு வரும் வாரங்களில் ஏற்படப்போகும் தேர்தல் கூட்டணிதான் பதில் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக