சனி, 7 ஜூன், 2014

‘ தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .........


சென்னை: ‘ தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று அளித்த பேட்டி:
தென் தமிழகத்தில் அண்மை காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, கடந்த மே மாதம் நெல்லை தனியார் பேருந்து ஓட்டுனர் கொலை செய்யப்பட்டுள்ளார். சங்கரன் கோவில் அருகே உடப்பன் குளத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் தாலுகா மணக்கரை கிராமத்தில் 30 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் தான் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தயங்குகின்றனர். மூன்று சம்பவங்களிலும் ஒரு குற்றவாளிகள் கூட இது வரை கைது செய்யப்படவில்லை.
தென் தமிழகத்தில் அண்மைகாலமாக பெரிய அளவிற்கு சாதிய மோதல்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 20 தினங்களில் நடந்துள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தொடர் சம்பவங்கள் ஆழ்ந்த கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இச்சம்பவத்தை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்னர், ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கப்படும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமர், உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த பேட்டியின் போது மாநில அமைப்புச் செயலாளர் வி.கே அய்யர் அவர்கள் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக