வியாழன், 10 ஜூலை, 2014

அமித் ஷா – மோடி ஜனநாயகம் வழங்கும் கிரிமினல் தலைமை...?


பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக மோடியின் நெருங்கிய கூட்டாளி அமித் ஷா (வயது 50) நேற்று தில்லியில் நடைபெற்ற அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஏற்கனவே ஊடகங்களில் கசியவிடப்பட்ட செய்திதான். ஆர்.எஸ்.எஸ் ஆதீனத்தின் தலைவர் தனது வாரிசை தேர்ந்தெடுப்பது போன்று மோடி தனக்கு பிறகு கட்சியில் நம்பர் 2 வாக அமித் ஷாவை அறிவித்திருக்கிறார். ஒரு கட்சியின் தலைவர் யார் எனும் ஆவல் இத்தகைய ஆளும் வர்க்க கட்சிகளுக்கு பொருந்தாது என்றாலும், சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக நடைமுறைகளை காவிக் கூட்டம் எப்படி நாறடிக்கிறது என்பதை மூக்கை பொத்திக் கொண்டு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
அமித் ஷா
மோடியுடன் அமித்ஷாவும் சேர்ந்தே வருவார்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 30% பேர் கிரிமினல் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற தகவல்கள் வெளியான போது, ஓராண்டுக்குள் அவர்கள் அனைவர் மீதும் நடைபெறும் விசாரணையை முடுக்கி விட்டு குற்றவாளிகளை இனம் கண்டு தண்டித்து நாட்டை கிரிமினல்களிடமிருந்து காப்பாற்றுவேன் என்று உறுதி மொழி அளித்திருந்தார் பிரதமர் மோடி. இவர் மீதே வழக்குகளும், குற்றச்சாட்டும் உண்டு எனும் விபரத்தை அமல்படுத்தினால் இந்த உபதேசம் பல்லிளிக்கும், போகட்டும், மற்றவர் மீதும் இந்த உபதேசம் எப்படி வினையாற்றும்?
பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அமித் ஷா மீது குஜராத்தில் சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி ஆகியவர்களைக் கொன்ற போலி மோதல் வழக்குகள் இன்னும் நிலுவையில்தான் உள்ளன. 2010-ல் குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது இதற்காக பதவி விலகிய அமித் ஷா உடனடியாக மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சபர்மதி சிறையிலும் இருந்திருக்கிறார். நிபந்தனை பிணையில் வெளிவந்த இவர் இரண்டு ஆண்டுகள் குஜராத் மாநிலத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்ல இதற்கு பிறகும் ஷாவின் குற்றப் பட்டியல்கள் விரிவு பெறுவது நிற்கவில்லை.
2012-ல்  உத்திர பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஷா அங்கு ஜாட் சாதி வெறி மற்றும் இசுலாமிய வெறுப்பு நிறைந்த அவரது பேச்சுக்களுக்காக கடந்த தேர்தலில் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு தடை செய்யப்பட்டிருந்தார். தேர்தல் ஆணையத்திடம் அவர் மன்னிப்பு கேட்ட பிறகு அத்தடை நீக்கிக் கொள்ளப்பட்டது. காப் பஞ்சாயத்துகள், முசா்பர் நகர் கலவரம் போன்றவற்றில் இந்துமதவெறியை கிளப்பிவிட்ட ஷா அதையே மூலதனமாக வைத்து, நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் உபியில் 72 இடங்கள் வரை கைப்பற்றுவதற்கும் பாஜகவிற்கு உதவினார். அது போல பீகாரில் ராம் விலாஸ் பாஸ்வானை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வந்த சேர்த்ததில் அரசியல் புரோக்கர் அமர்சிங்கையும் விஞ்சி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அமித் ஷா
அமித் ஷா
1964-ல் ஒரு பிளாஸ்டிக் வியாபாரியின் மகனாக பிறந்த அமித் ஷா 1982-ல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்காக பணியாற்றிக் கொண்டிருந்த நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இணைத்துக் கொள்கிறார். 1986-ல் மோடி ஆர்.எஸ்.எஸ்சிலிருந்து பா.ஜ.கவுக்கு அனுப்பப்பட்ட போது அமித் ஷாவும் பாஜகவில் இணைகிறார். 1997 முதல் நான்கு முறை சர்கேஜ் தொகுதியில் இருந்து குஜராத் சட்டமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார். 2012-ல் நாரண்புராவில் இருந்து தேர்வாகிறார். மோடி அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட முக்கியமான 12 துறைகளுக்கான அமைச்சராகவும் இருந்து வந்தார்.
அமித் ஷா உண்மையிலேயே மக்கள் மத்தியில் இறங்கி சாதுரியமாக இந்துத்துவா கருத்துக்களை எளிமையாக பேசி வெறிபிடிக்க வைத்து, குறிப்பான இலக்குடன் அமைப்பாக்குவதில் திறமைசாலி. அதே நேரத்தில் மோடி என்ற இமேஜை உருவாக்கி அதனை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதில் கைதேர்ந்த பெருச்சாளி என்பதும் கவனிக்கதக்கது. மோடியும், அமித் ஷாவும் இந்துத்துவா மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். ராமர் கோவில் என்ற செக்கினை சுற்றி வந்த பழைய மாடுகளைப் போலன்றி புதிய கார்ப்பரேட் ரேசுக்கான காளைகள் இவர்கள்.
குஜராத்தில் கட்சியினரால் சாஹேப் என மரியாதையாக விளிக்கப்படும் அமித் ஷா தற்போது தேசிய அளவில் இனி பரப் பிரம்மம் என்று கூட அழைக்கப்படலாம். பதவி விலகும் அக்கட்சியின் தேசியத் தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான ராஜநாத் சிங் குறிப்பிட்டபடி ஷாவிடம் ‘கற்பனை வளம் மிக்க சிந்தனைகளும், கட்சியை அமைப்பு ரீதியாக வழிநடத்தும் உத்தியும்’ நிரம்பவே உள்ளன. இதனைக் கொண்டுதான் போலி என்கவுண்டர், ஆள் கடத்தல், மோடிக்காக இளம்பெண்ணை வேவுபார்த்தல், போலியான எம்.எம்.எஸ் களை செல்பேசிகளின் வழியாக பரவ விட்டு ஒரு கலவரத்தை நடத்துதல் என்பதெல்லாம் சாத்தியமானது. 2002 குஜராத் கலவரத்திலும் மோடிக்கு இப்படி ஒரு கலவரம் நடத்தி ஆட்சியில் உறுதியாக ஊன்றி நிற்க ரூட் போட்டுக் கொடுத்தவர் இந்த கற்பனை வளம் மிக்க அமித் ஷா தான்.
அமித் ஷா உளவு
மோடி சார்பில் இளம்பெண்ணை வேவு பார்த்த அமித்ஷா
விரைவில் மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கு வியூகம் வகுத்து ராஜயசபையில் பெரும்பான்மை பெற வேண்டும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடியை ஆளவிட வேண்டும், தென்னிந்தியாவிலும் பாஜக பலம்பெறவேண்டும் என்று பல்வேறு லட்சியங்களோடுதான் அமித் ஷா வை தேசிய தலைவராக பா.ஜ.க.வும் மோடியும் தெரிவு செய்திருக்கிறார்கள். எனவே இம்மாநிலங்களில் விரைவில் கலவரங்களை எதிர்பார்க்கலாம். அல்லது மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிகளில் இந்துத்துவா சக்திகள் ஈடுபடலாம். அல்லது தேசிய அளவில் ராமர் கோவில், பொது சிவில் சட்டம், ஜம்மு காசுமீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370 வது சட்டப்பிரிவை நீக்குதல் போன்ற விசயங்களை கிளறி விடலாம்.
மோடி பிராண்டு அலையால் நாடாளுமன்றத்தில் கிரிமினல்களின் நடவடிக்கை இல்லாமல் போகாது என்பது மட்டுமல்ல அவர்கள்தான் ஆட்சியில் முக்கிய இடத்தில் அமருவார்கள் என்பது தெரிகிறது.
அமித் ஷா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மோடி டிவிட்டரில் சாதாரண செயல் வீர்ராக ஆரம்பித்து அயராத உழைப்பு மற்றும் உறுதியால் அரசியல் வாழ்வில் அமித் ஷா முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், இனி அவரது தலைமையில் கீழ் பாஜகவின் செல்வாக்கு மிகுதியாவதுடன் கட்சியும் வலுப்பெறும் என்று சொல்லியிருக்கிறார். இந்த வலுப்படுத்துதலில் எத்தனை எளியோர் சாகப் போகிறார்கள், எத்தனை சதித்திட்டங்கள் அரங்கேறப்போகின்றன என்பதையெல்லாம் யூகித்து பார்க்க மட்டும் செய்வோமா இல்லை தடுத்து நிறுத்தப் போகிறோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக