புதன், 3 செப்டம்பர், 2014

யார் இந்த இம்மானுவேல் சேகரன்- ஒரு பார்வை....





தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான தியாகி இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல் சேகரன். அடக்கு முறைக்குட்பட்ட சமூகத்தில் உதித்த காரணத்தினால் சிறுவயதிலேயே இன விடுதலை வேள்வியால் வளர்ந்த இவர் இந்திய தேசத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் மீது, கோபமும், கொந்தளிப்பும் கொண்டார்.. அதன் எதிரொலியாக 1942ம் ஆண்டு தனது தந்தை வேதநாயகத்தோடு விடுதலை வேள்வி வெறியோடும், வெள்ளையனே வெளியேறு போராட்ட களத்தில் குதித்தார்.

இம்மானுவேல் சேகரன் எதிர்காலத்தில் தேசம் திரும்பி பார்க்கும் தலைவராக திருப்பு முனையை ஏற்படுத்தப்போகும் களம் அது என்று அறியவில்லை. இருந்தும் இந்திய தேசத்திற்காக களத்தில் குதித்தவர் 3 மாதம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சோதனைகளை சந்தித்தார். நாட்கள் உருண்டோடின. அடக்குமுறை சமூகத்தின் அவலத்தை அகற்றிட வேண்டும் என்ற லட்சிய வெறியோடு வலம் வந்தார். தனது 19வது வயதில் அருப்புக்கோட்டையில் தலித்துக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட இரட்டை டம்பளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தமுறையை சமூகத்திலிருந்து அகற்றிட மாநாடு நடத்தி தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி பிற சமூக மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

1954-ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு ஒன்றினையும் நடத்திய அவர் தனது சமுதாய மக்கள் மத்தியில் அன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக வலம் வரத்தொடங்கினார். இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சியும், அம்மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியும் பிற சமூகத்தை லேசாக உசுப்பிப் பார்க்க தொடங்கியது.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார் 1950-ல் ராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான இன்னொரு சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது ராணுவ வேலையைத் துறந்தார். சொந்த அனுபவம் கேட்பதைக் காட்டிலும் பெரிதல்லவா! அதனால் “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார்.

 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் ஆதிக்க சக்திகளிடமிருந்து தனது சமூகம் வெற்றிபெற கடுமையாக உழைத்து தனது பலத்தை நிரூபித்தார். நாட்கள் உருண்டோட இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சியும், தேர்தல் மூலம் ஏற்பட்ட பகையும் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தி தரப்போவதை அவரும் அறியவில்லை, அவரை சார்ந்தவர்களும் அறியவில்லை. 1-9-1957 அன்று காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் இறக்கிறார். இடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில் சில தடைகளால் முக்கிய பாதைக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. பெருமாள் பீட்டர் என்பவரும், இம்மானுவேல் சேகரனு்ம் கமுதி காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மூதாட்டி உடல் சுமூகமாய் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இதில் இருந்து இமானுவேல் சேகரனுக்கும், எதிர்ப்பு உள்ளூரில் ஏற்படுகிறது. அதன் விளைவாக 5-9-57ல் லாவி என்ற கிராமத்திலுள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. பிரச்சனை உருவாகிறது..

1957 செப்டம்பர் 10-ஆம் தேதி  நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியர் பனிக்கரால்  ஒரு அமைதி கூட்டம் நடத்தப்பட்டது.அந்த  அமைதிக்கூட்டத்தில் தேவர்கள் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், தலித்துகளின் சார்பில் கலந்து ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முடிவெடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கையெழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் செப்டம்பர் 11-கொலை செய்யப்பட்டார்.

யாரும் எதிர்பாராத கொடுமையாக, எதிர்காலத்தையே புரட்டி போடும்ஒரு சம்பவம் 11ம் தேதி அரங்கேறுகிறது. சமாதான கூட்டத்தினால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இம்மானுவேல் சேகரன் அவரது தந்தையின் நண்பர் வீட்டில் தங்கி விட்டு மாலையில் பரக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொண்ட விட்டு இரவு 9 மணி அளவில் வீடு நோக்கி திரும்புகிறார். அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சராமரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்புகிறது. (தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின்  ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முத்துராமலிங்கதேவர் குற்றமற்றவர் என்று பின்னாளில் விடுதலை செய்யப்பட்டார்.)

விஷயம் காட்டு தீ போல பல்வேறு பகுதிகளில் பரவுகிறது. 12-9-1957 அன்று அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. 33வது இளைஞனின் எழுச்சி பயணம் மர்ம கும்பலால் தடுக்கப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டதால் 13-9-57ல் ராமநாதபுரம் மாவட்டம் சட்டம் ஓழுங்கு சீர்குலைந்தது. இம்மானுவேல் சேகரனை  கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் என்ற ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஆனால், அந்த அப்பாவிகள் ஐந்து பேரையும் போலீஸார் கைகளையும், கண்களையும் கட்டி குளக்கரையில் வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றனர் என்று கீழத்தூவல் மக்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து  நடந்த கலவரத்தில் 85 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இருதரப்பும் மோதியதில் 85 பேர் பலியாகினர்.


அன்றிலிருந்து இன்றுவரை இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11-ஆம் தேதியை குருபூஜையாக அவர் சார்ந்த சமுதாயத்தினர் கொண்டாடுவது வழக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக