திங்கள், 29 டிசம்பர், 2014

கௌரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்'

கௌரவக் கொலைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே கீழமருதூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும், கலப்பு திருமணம் செய்த மாற்றுத் திறனாளியுமான அமிர்தவள்ளி (30), அவரது கணவர் பழனியப்பன் (37), இத்தம்பதியின் 40 நாள்களே நிரம்பிய குழந்தை அகிலேஷ் ஆகியோர் அண்மையில் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில், திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, கிருஷ்ணசாமி பேசியது:
தமிழகத்தில் அண்மைக்காலமாக கலப்புத் திருமணங்களை தடுக்கும் வகையில், கௌரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
தர்மபுரியில் இளவரசன்- திவ்யா கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பிறகு தமிழகத்தில் ஓர் அமைப்பினர் மாவட்டம்தோறும் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
கௌரவக் கொலைகளைத் தடுக்க, கலப்பு திருமணத் தம்பதியரை காக்க தனிச்சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட இணைச் செயலர் செளந்திரபாண்டியன், மாவட்டச் செயலர் ராஜேந்திரன், நகரச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருவாரூரில் கட்சி நிர்வாகிகளுடன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் க. கிருஷ்ணசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக