செவ்வாய், 30 டிசம்பர், 2014

தேனி எஸ்.அல்லிநகரம் தேவேந்திரகுல மக்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்..

...கடந்த சனிக்கிழமை பெங்களூரில் மரணமெய்திய அல்லிநகரம் பகுதியைச் சார்ந்த ஒரு சமூகப் பிரமுகரது சவ அடக்க ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அந்த ஊர்வலம் தேனி நகரத்தினுடைய ஒரு பகுதியில் புறப்பட்டு 1 கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஏறக்குறைய 2 மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் ஆக்கியிருக்கிறார்கள். ஊர்வலம் அல்லிநகரத்தின் பல குடியிருப்புகளைத் தாண்டி தலித் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திரகுல வேளாளர்களின் குடியிருப்புகளை நெருங்கிய பொழுது ஊர்வலத்தில் வந்தவர்கள் தாங்கள் வந்த டிராக்டர் மற்றும் பிற வாகனங்களில் ஏற்கெனவே சேகரிக்கப்பட்டு வைத்திருந்த கற்களை வீசி, அங்கிருந்த மக்களை காயப்படுத்தி இருக்கிறார்கள். தேனி-பெரியகுளம் சாலையில் அமைந்திருக்கக் கூடிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கட்டிடத்தின் மீது செருப்பை வீசியிருக்கிறார்கள். ஊர்வலத்தில் வந்தவர்கள் ஒருகட்டத்தில் கற்களை ஏற்றிவந்த அந்த டிராக்டரையே தேவேந்திரகுல மக்கள் பிரதானமாக வாழக்கூடிய அல்லிநகரம் அம்பேத்கர் காலனி மக்கள் மீது ஏற்றி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பொதுவாக இறந்தவர்களை அடக்கம் செய்கிறபோது அடக்கமாகவும் அமைதியாகவும் செல்வதுமே ஒழுக்கம் மிகுந்த செயலாகும். ஆனால் சவ ஊர்வலத்திலும் சாதிவெறியைக் காட்டவேண்டுமென்கிற அவர்களின் நடவடிக்கையே மேலோங்கி இருக்கிறது. அண்மைக்காலமாக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்களது சாதி வெறியை தென்தமிழகத்தில் வாழக்கூடிய மிகவும் பின்தங்கிய மக்களின் மீது திணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு பலவிதமான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தென்தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக நிலவி வந்த சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பதற்காகவே அவர்கள் திட்டமிட்டு செயல்படுவது வெட்டவெளிச்சமாகிறது.
நெடுஞ்சாலையில் செல்லும் புதிய தமிழகம் கட்சி உட்பட பிற தலித் அமைப்புகளின் வாகனங்களில் கட்டியிருக்கக் கூடிய கொடிகளை வலுக்கட்டாயமாக அகற்றச் சொல்வது போன்ற பல சம்பவங்கள் தொடர்கதைகள் ஆகின்றன. காவல்துறையிடம் அந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருடைய அத்துமீறகளை எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
தேனியில் மயானம் ஒரு பகுதியில் இருக்க, அல்லிநகரம் ஊர்ப் பகுதிக்குள் ஊர்வலத்தை அனுமதித்தது ஏன்? காலையிலிருந்தே அவர்களுடைய நடவடிக்கை நகர் முழுவதும் ஆத்திரமூட்டக்கூடிய வகையில் இருந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயற்சித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் அப்பாவி தலித் மக்கள், அதிகார பின்புலமற்றவர்கள் என்ற காரணத்தினால் தலித் பகுதிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தயங்குமேயானால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக விளங்கும். அன்று தலித் மக்கள் மீது வன்முறையை ஏவியவர்கள் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்ததியர்கள், ஆதிதிராவிடர்கள், தேவேந்திரகுல வேளாளர்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்றவர்கள் மீதும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
அதைவிடுத்து காலங்காலமாக காவல்துறை கடைபிடித்துவரும் சமாதான பேச்சுவார்த்தை எனும் ஏமாற்று நாடகத்தை கைவிட வேண்டும். இது இரு தரப்பினர்களுக்கிடையே நடைபெற்ற மோதல் அல்ல; அதிகாரத்தில் உள்ளவர்களின் அரவணைப்பு தங்களுக்குக் கிடைக்கும் என்ற மமதையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வன்முறை நடவடிக்கையாகும். எனவே காவல்துறையினர் முதலில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களையும் தற்காப்புக்காக அணிதிரண்டவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடிய தவறான நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக