சனி, 27 டிசம்பர், 2014

பூமணியின் 'அஞ்ஞாடி' நாவல்: சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு..

திருநெல்வேலி: நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் பூமணியின் 'அஞ்ஞாடி' நாவலுக்கு இந்த ஆண்டுக்கான 'சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாவல் 2012ல் 'க்ரியா' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கடந்த 1895 முதல் 1900 வரை தென் மாவட்டங்களில் நடந்த வன்முறைகள் குறித்தும், அவை சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் நெல்லையின் 'கரிசல்' பேச்சு வழக்கில் எழுதியுள்ளார். நேற்று, டில்லியில் 'சாகித்ய அகாடமி' அறிவிப்பு வெளியிட்டது. 67 வயதாகும் பூமணியின் இயற்பெயர் பூ.மாணிக்க வாசகம். தந்தை பூலித்துரை, தாயார் தேனம்மை; கோவில்பட்டி அருகே ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர். மனைவி செல்லம்மாளுடன் கோவில்பட்டியில் வசிக்கிறார். மகன் சிபிரவி, மகள் கவிதா சென்னையில் வசிக்கின்றனர். பூமணி, கூட்டுறவுத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது முதல் சிறுகதை 'அறுப்பு' 1971ல் தாமரை இதழில் வெளியானது. வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதை தொகுப்புகளையும்; வெக்கை, நைவேத்யம், வாய்க்கால்கள் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். வெக்கை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இலக்கியச் சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 2011ல் விஷ்ணுபுரம் விருது பெற்றுள்ளார். தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம் பூக்கள் திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. நெல்லை ஹாட்ரிக் சாதனை: சாகித்ய அகாடமி விருது துவக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம் படைப்புக்கு விருது கிடைத்தது. 1965ல் ஸ்ரீராமானுஜர் என்ற நூலுக்காக பி.ஸ்ரீஆச்சார்யா; 1970ல் கு.அழகிரிசாமியின் அன்பழைப்பு; 1978ல் வல்லிக்கண்ணனின் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்; 1983ல் தொ.மு.சி.ரகுநாதனின் பாரதியின் காலமும் கருத்தும்; 1990ல் சு.சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா; 1991ல் கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள்; 1992ல் தோப்பில் முகம்மதுமீரானின் சாய்வு நாற்காலி; 2012ல் செல்வராஜின் தோல்; 2013ல் ஜோ டீ குரூசின் கொற்கை நாவல் ஆகியவற்றிற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக நெல்லையை சேர்ந்தவர்களே இந்த விருது பெறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக