வியாழன், 29 ஜனவரி, 2015

குடியரசு தின அணிவகுப்பில் ஜெயலலிதா படத்தை வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை...டாக்டர் க.கிருஷ்ணசாமி .

 புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணசாமி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதம்: 
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சிறை யில் அடைக்கப்பட்டார். தற்போது மேல்முறை யீட்டு மனுவில் ஜாமீனில் வெளியில் உள்ளார் என்பது உங்களுக்கும், உங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி, அவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்டுள் ளார் என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும். 

நமது நாடு 1950ம் ஆண்டு குடியரசாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 26ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் அரசு சார்பில் கொண்டாடப்பட்ட குடியரசு தின துறைவாரியான வாகன அணி வகுப்பு நடத்தப்பட்டது. அணிவகுப்பு வாகனங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் காட்சிப்படுத்தி அலங்கரிக்கப்பட்டிருந்தது நியாயமா என உங்களிடம் நான் கேட்கிறேன். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் படத்தை முன்னுதாரணமாக வைப்பது அரசியல் சாசன முறைப்படி சட்ட விரோதமான செயலாகும். தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் நடைமுறை ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். 

எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இக்கடிதத்தை எழுதியுள்ளேன். ஜனநாயகத்துக்கு விரோதமாக நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைத்து, அணிவகுப்பு வாகனங்களில் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற வைக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக