புதன், 25 பிப்ரவரி, 2015

கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்ல விடாமல் 144 தடை பிறப்பித்தது சட்டவிரோதம் டாக்டர் க.கிருஷ்ணசாமி பேட்டி..

தூத்துக்குடி,
ஸ்ரீவைகுண்டம் நகர புதிய தமிழகம் கட்சி செயலாளர் கொலையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்ல விடாமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதம் என்று டாக்டர் க.கிருஷ்ணசாமி தெரிவித்து உள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் நகர புதிய தமிழகம் கட்சி செயலாளர் லட்சுமணன் என்ற பாஸ்கர் கடந்த 22–ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நேற்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளத்துக்கு வந்தார்.
அங்கு இருந்த போலீஸ் சூப்பிரண்டுகள் மா.துரை(தூத்துக்குடி), மணிவண்ணன் (கன்னியாகுமரி) மற்றும் போலீசார் டாக்டர் க.கிருஷ்ணசாமியை அழைத்து சென்று தனி அறையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அரசியல் தலைவர்கள் செல்லக்கூடாது என்றும் கூறியதாக தெரிகிறது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு டாக்டர் க.கிருஷ்ணசாமி வெளியே வந்தார்.
பேட்டி அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 6 மாதத்தில் மட்டும் ஏறக்குறைய 80–க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்து உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு கவனம் செலுத்தி, இது போன்ற வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 2 மாதங்களுக்கு முன்பு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
இடையிலே ஒரு மாதம் எந்த விதமான சம்பவமும் இல்லாதது போன்று தோன்றியது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக செயல்பட்டு வந்த லட்சுமணன் என்ற பாஸ்கர் கொலை செய்யப்பட்டு உள்ளார். ஸ்ரீவைகுண்டத்தை மையமாக வைத்து கடந்த ஓராண்டில் 15–க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து உள்ளன.
நடவடிக்கை சில தினங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தெரிவித்தார்கள். அப்போது, பல்வேறு கொலைகள் நடந்து இருப்பதை சுட்டிக் காட்டினேன். தொடர்ந்து கொலைகள் நடந்து உள்ளன. தமிழகத்தில் சட்டம்– ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது.
இந்த கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என்று உறவினர்கள் போராடி வருகின்றனர். கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் பெற்றோரிடம் துக்கம் விசாரிக்க வந்தேன். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த உடன் 144 தடை உத்தரவு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அது சட்டத்துக்கு விரோதமானது. இந்திய ஜனநாயகத்துக்கு வெட்கக் கேடானது. தடை உத்தரவு இருப்பதால், புதிய தமிழகம் கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக