வியாழன், 26 பிப்ரவரி, 2015

ஸ்ரீவைகுண்டத்தில் கொல்லப்பட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகி உடல் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு..

ஸ்ரீவைகுண்டத்தில் கொல்லப்பட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகி உடல் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்புதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சினார் தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28). இவர் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக இருந்தார். கடந்த 22–ந்தேதி இரவில் அவர், சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ், பாதாளம் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே பாஸ்கரின் கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சாலைமறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து டி.ஐ.ஜி. சுமித்சரண் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் மேலக்கோட்டைவாசல் தெருப்பகுதியில் மர்மநபர் ஒருவர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார். அது வீதியில் விழுந்து வெடித்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே போலீசார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசிய ஸ்ரீவைகுண்டம் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் (27) என்பவரை கைது செய்தனர்.
தொடர் போராட்டம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு நாளை மாலை 6 மணி வரை அமலில் இருக்கும்.
இந்நிலையில் பாஸ்கர் கொலையை கண்டித்து தமிழ்நாடு தேவேந்திர கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீவைகுண்டம் கே.டி.கே.நகரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. அங்கு சென்ற போலீசார் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கிடையாது என்றனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. முக்கிய பகுதிகளில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கொலை செய்யப்பட்ட பாஸ்கர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பாளை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் உடலை வாங்க முன்வந்துள்ளனர். அதன்படி இன்று பிற்பகலில் பாஸ்கர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக